புதன், 12 ஆகஸ்ட், 2015

சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்? -2

சீனாவின் யுவான் மதிப்பு செயற்கையாக குறைக்கப்பட்டுள்ளது. அது எவ்வாறு இந்தியாவைப் பாதிக்கும் என்பது பற்றி எழுதப்படும் இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.

சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்? -1

இன்றும் பொருளாதாரத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் சில கம்யூனிச நாடுகள் மட்டும் இந்த Fixed முறையைப் பின்பற்றி வருகின்றன. இதில் சீனாவின் யுவான் நாணயமும் உள்ளடங்கும்.சீனா தங்கள் நாணய மதிப்பைக் கூட்டுவதாக இருந்தால் தங்களிடம் உள்ள டாலரை விற்று யுவானை வெளிச்சந்தையில் இருந்து வாங்கும். இதனால் யுவானின் தேவை கூடி மதிப்பும் கூடி விடும்.

அது போல் யுவானின் மதிப்பைக் குறைப்பதாக இருந்தால் வெளியில் இருந்து டாலரை வாங்கி யுவானை அதிக புழக்கத்திற்கு விட்டு விடும்.

அப்படி என்றால், தற்போது யுவானின் நாணய மதிப்பு டாலருக்கு இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு சந்தையில் சீனா மத்திய வங்கி டாலரை வாங்கியுள்ளது என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு சந்தேகம் வரலாம். எல்லா நாடுகளும் தங்கள் நாணய மதிப்பை கூட்டத் தானே விரும்பும். ஆனால் சீனா ஏன் குறைக்க முயலுகிறது என்ற கேள்வி எழலாம்.

சீனாவை பொறுத்த வரை நிகர ஏற்றுமதி என்பது இறக்குமதியை விட மிகவும் அதிகம். இதனால் நாணய மதிப்பைக் குறைக்கும் போது அங்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு அதிக யுவான் கிடைக்கும். அது அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் உதவும்.

துவண்டு கிடக்கும் சீனாவின் ஏற்றுமதி பொருளாதரத்தை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.

பார்க்க: சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன?

அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்ற நாடுகளின் தயாரிப்புகளோடு மலிவான விலையில் போட்டி போட முடியம். அதாவது தனது சீன மத்திய வங்கி தன்னுடைய சொந்த செலவில் ஏற்றுமதியாளருக்கு உதவ இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, 100 யுவானுக்கு கடிகாரம் ஒன்றை ஏற்றுமதி செய்த சீன ஏற்றுமதியாளருக்கு தற்போது 102 யுவான் கிடைக்கும். அதே நேரத்தில் அவர் 100 யுவான் மதிப்புக்கு விற்றாலும் நஷ்டமில்லை. அதனால் விலையை இறக்கி மற்ற நாடுகளின் தயாரிப்புகளோடு போட்டி போட முடியும். இதனால் அவரது வியாபாரத்தையும் படுக்காமல் காப்பாற்ற முடியும்.

சரி. இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதை பற்றியும் விரிவாக பார்ப்போம்.

இந்தியாவிலிருந்து துணி, கெமிக்கல் பொருட்கள் போன்றவை சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் அங்குள்ள யுவானின் வாங்கும் மதிப்புக்கு ஏற்றவாறு தான் நாம் டாலரில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது நம்முடைய நிறுவனங்களுக்கு குறைந்த டாலர் வருமானமே கிடைக்கும்.

அதே நேரத்தில் தாமிரம், இரும்பு போன்ற உலோகங்கள் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இவைகள் முன்பை விட குறைந்த விலையில் மலிவாக நமது சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது. ஏன், சியோமி மொபைல் விலை கூட இதனால் குறையும்.

அப்படி வந்தால் நமது உற்பத்தியாளர்கள் போட்டி போடுவதற்காக அதற்கு ஏற்றவாறு விலையைக் குறைக்க வேண்டும். விலையைக் குறைத்தால் நமது நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படும்.

இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஏற்றுமதியை சார்ந்து இருக்கும் பல நாடுகளுக்கும் சீனாவின் இந்த முடிவு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

பங்குச்சந்தையில் இருந்து பார்த்தால், டெக்ஸ்டைல், டயர், உலோகங்கள், எலெக்ட்ரிக்கல் உபகரணங்கள் போன்றவை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீனாவின் இந்த முடிவால் பாதிப்பு ஏற்படலாம்.மற்றொரு விதமாக பார்த்தால் சீனாவிற்கும் ஒரு எதிர்மறை பாதிப்பு உண்டு. பணவீக்கம் கணிசமாக கூடும். ஆனால் கட்டுபடுத்தப்பட்ட கம்யூனிச பொருளாதாரம் என்பதால் ரேஷனில் பொருளைக் கொடுத்தாவது விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.

இதனைக் காட்டிலும் ஏற்றுமதியைக் கூட்டி பொருளாதரத்தை நிலைப்படுத்த வேண்டும் என்பதே தற்போது அவர்கள் முக்கிய கொள்கையாக இருக்கிறது.

இதற்காக மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலைப்படும் நிலையில் சீனர்கள் தற்போது இல்லை. ஆனால் தற்போது வலுவாக இருக்கும் சூழ்நிலையில் இந்தியா பெருமளவு பாதிக்கப்படாது என்றே நினைக்கிறோம்.

தொடர்பான கட்டுரைகள்:
அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக