திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பொதுத்துறை வங்கிகளை சீர்த்திருத்தும் மத்திய அரசு, வாங்கிப் போடலாமா?

கடந்த வாரம் மத்திய அரசு சில சீர்த்திருத்த முடிவுகளை பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவித்தது. அதனால் இந்த வங்கி பங்குகள் நல்ல தேவையில் இருந்தன.


இதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.



மோடி அரசு வந்த பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வங்கி பங்கு குறியீடு 15% உயர்ந்து லாபம் கொடுத்துள்ளது.

அதே சமயத்தில் பொதுத்துறை வங்கிகளை குறிக்கும் குறியீடு 1.5% குறைந்துள்ளது. அப்படி என்றால், தனியார் வங்கிகள் தான் நன்றாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.

அதற்கு ஒரு முக்கியக் காரணம் வாராக்கடன்கள் ஆகும். விஜய் மல்லையா முதல் பலரிடம் கொடுத்த கடன் திரும்பியே வராமல் உள்ளது.

ஒரு முறை பொதுத்துறை வங்கியான ஐஒபியின் கொரியா நாட்டு மண்டல மேலாளருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அப்பொழுது வாராக் கடன்களான NPA பற்றி பேச்சு வரும் போது அவர் இப்படி சொன்னார்.

பேஸ்புக், ட்விட்டரில் விஜய் மல்லையாவிற்கு கடன் கொடுப்பதை பற்றி எங்களை திட்டி தீர்க்கிறார்கள்.

ஆனால் இவருக்கு கடன் கொடுங்கள் என்று ஒரு மத்திய அமைச்சரிடம் இருந்து போன் வரும் போது நாங்கள் என்ன செய்வது? என்று கேட்டார்.

அதுவும் உண்மை என்று தான் தோன்றியது. பொதுத்துறை வங்கிகளில் அரசியல் தலையீடுகள் அதிகம் உள்ளது என்பதை மறுக்க இயலாது.

அரசியல் தலைவர் சென்று விடுவார். கடன் வாங்கியவரும் திவால் காட்டி விடுவார். அப்புறம் வங்கி தான் வாராக் கடன்களை சுமக்க வேண்டி வரும்,

இந்த நிலையை மாற்றா விட்டால் இந்திய பொருளாதார வளர்ச்சியில் அதிகம் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், பொதுத்துறை வங்கிகள் தான் நமது 70% வங்கி சேவையை அளித்து வருகின்றன.

அதனால் தற்போது மத்திய அரசு சில வங்கி சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பல வங்கிகள் கடன் கொடுப்பதற்கே தங்களிடம் காசு இல்லாத நிலையை நோக்கி தற்போது சென்றுள்ளன. இதனால் 75,000 கோடி ரூபாயை வங்கிகளுக்கு கடன் கொடுப்பதறகாக மத்திய அரசு வழங்க இருக்கிறது என்று ஏற்கனவே பகிர்ந்து இருந்தோம்.

பார்க்க:
வளர்ச்சிக்காக செலவுகளை கூட்டிய மத்திய அரசு, மகிழ்ச்சியில் வங்கிகள்

இது வரை இந்த பணம் வங்கிகளின் அளவிற்கேற்ப ஒவ்வொரு வங்கிகளுக்கும் வழங்கப்பட்டது. அதாவது பேலன்ஸ் சீட்டின் மதிப்பிற்கேற்ப வழங்கப்பட்டது.

இனி வங்கிகள் செயல்படும் விதத்தை பொறுத்தே இந்த தொகை பொதுத்துறை வங்கிகளிடம் பகிரப்படும். ROE, ROA போன்றவற்றின் விகிதங்களுக்கேற்ப இந்த தொகை பகிரப்படும்.  ROE, ROA விகிதங்களைப் பற்றி பின்னர் ஒரு பதிவில் பார்க்கலாம்.

அதனால் கடனைக் கொடுத்து விட்டு வசூலிக்காமல் சும்மா இருந்தால் அடுத்த முறை அந்த வங்கிக்கு மத்திய அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும்.

அடுத்ததாக,

வங்கிகளின் கிளைகள் அளவில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஒவ்வொரு கிளையும் செயல்படும் விதத்தைப் பொறுத்தும். அவர்களால் கிடைக்கும் லாபத்தைப் பொறுத்தும் இந்த ஊக்கத்தொகை அதிகமாகும்.

அடிக்கடி ஊதியத்திற்காக ஸ்ட்ரைக் செய்யும் வங்கி ஊழியர்களுக்கு இது நல்ல பயனளிக்கும். இந்த நடவடிக்கை கீழ்மட்ட அளவில் இருந்து நேர்மறை பலனைக் கொடுக்க பெரிதும் உதவும்.



இறுதியாக,

வங்கியாளின் தலைமை பொறுப்புகளில் இது வரை அதே வங்கிகளில் உள்ள லோக்கல் மேலாளர்கள் தான் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால் தற்போது தனியார் வங்கிகளில் இருந்து தகுதியானவர்களை அரசு வங்கிகளுக்கு நியமித்து உள்ளனர். அதனால் அதிகம் அரசியல் கலக்காது என்று அரசு நம்புகிறது.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனை தரும் என்று சந்தை நம்புவதால் அடித்து துவைக்கப்பட்ட அரசு வங்கிகளின் பங்குகள் தற்போது மேலே எழும்ப துவங்கி உள்ளன.

ஆனாலும், அரசின் இந்த நடவடிக்கைகள் மெதுவாகவே செயலாக்கம் பெற வாய்ப்புகள் உள்ளன. அதனால் அதிகம் பொறுமை உள்ளவர்கள் நல்ல நிலையில் இருக்கும் அரசு வங்கி பங்குகளில் முதலீடுகளை தொடரலாம்.

அடுத்த மூன்று முதல் ஐந்து வருட கால நோக்கில் இந்த பங்குகள் நல்ல பலன் தரலாம்.
  
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக