புதன், 26 ஆகஸ்ட், 2015

ஸ்பீக்கர் செட்டால் போருக்குத் தயாராகும் கொரியா

ஒரு பக்கம் சீனாவால் என்னென்ன நடக்கலாம் என்று உலக நாடுகள் கவலையில் இருக்க, மறு பக்கம் வட கொரியா அதிபர் ஸ்பீக்கர் செட்டால் கடுப்பாகி உள்ளார்.


பங்குச்சந்தையை பார்த்து டென்சனில் இருக்கும் நமக்கு இந்த செய்தி கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்.ஆனால் எழுதும் நாம் போர் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் பார்டரில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எழுதுகிறோம்.

நாமும் இவ்வளவு ரிலாக்ஸாக இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இது பழகிப் போச்சு என்றே சொல்லலாம்.

வட கொரியாவும், தென் கொரியாவும் டெக்னிக்கலாக கடந்த ஐம்பது வருடத்திற்கு மேல் போரில் தான் உள்ளன. அமைதி உடன்படிக்கையில் தான் இரு நாடுகளும் அரசுகளை நடத்துகின்றன.

இதனால் போரைத் தவிர வேறு ஏதும் தெரியாத வட கொரியா ஒரு குழந்தை சாமியை வைத்து கொண்டு குத்தி போடுவேன், குண்டை போடுவேன் என்று அடிக்கடி மிரட்டுவது இங்குள்ள மக்களுக்கு பழகிய விடயமாயிற்று.

பத்து வருடம் இங்கே குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் எமக்கும் ஊரில் இருந்து போன் வரும். என்ன அங்கு போராமே? என்று கேட்பார்கள். அப்படி எல்லாம் இல்லை என்று சமாதனம் சொல்லியே காலம் ஓடி விட்டது.

ஆனாலும் புலி வருகிறது என்ற கதையாக என்றைக்காவது ஒரு நாள் குண்டை போடுவான் என்று பட்சி சொல்லிக் கொண்டிருப்பதால் இங்கிருந்து ஓடி விட தயாராகிக் கொண்டிருக்கிறது மனது...

தற்போது போரை அறிவித்து இருப்பது வித்தியாசமான நிகழ்வு..உலகின் எந்த மூலையிலும் இதற்காக சண்டை போட்டிருப்பார்களா என்று தெரியாது.வடகொரியா வீரர்கள் அடிக்கடி சுரங்கம் தோண்டி எல்லையைத் தாண்டி சியோல் வரை வந்து போவது வழக்கம். அதன் பிறகு தெற்கு சுரங்கத்தைக் கண்டுபிடித்து டூரிஸ்டை பார்க்க விட்டு காசு பார்ப்பார்கள். இப்படியே இது வரை எட்டு சுரங்கங்கள் தோண்டியுள்ளதாக சொல்கிறார்கள்.

இப்படி கடந்த மாதம் வடகொரியா பார்டரை தாண்டி சுரங்கம் தோண்டியதை தென்கொரியா கண்டுபிடித்து விட்டது. கடுங்கோபத்தில் எச்சரிக்கை கொடுப்பார்கள் என்று பார்த்தால் அதற்கு பதில் குசும்பு வேலை செய்தார்கள்.

பாண்டி ஒலிபெருக்கி போல் ஒன்றை வைத்து வட கொரியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த பிரச்சாரம் தென் கொரியாவின் வளர்ச்சி பற்றி சொல்லி வடகொரிய மக்களிடம் ஆசையைத் தூண்டும் விதமாக அமைந்தது. இது போக, வடகொரிய அதிபரை எதிர்த்தும் பிரசாரம் செய்து வந்தார்கள்.

அதனைப் பார்த்து வட கொரியாவும் ஸ்பீக்கர் செட் வைக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் அவர்களது பிரசாரம் ஜெயா டிவியில் கொசுத்தொல்லைக்கும் கருணாநிதி தான் காரணம் என்று செய்வதைப் போல் இருந்ததால் யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

பதிலுக்கு அதிக டெசிபல்லில் சவுண்ட் கொடுக்கும் ஸ்பீக்கரை தென் கொரியா வைத்தது.

ஆனால் வட கொரியாவில் அந்த அளவு டெக்னாலஜி வளர்ச்சி இல்லாததால் அந்த நாட்டு அதிபர் கடுப்பாகி போர் அறிவிப்பை வெளியிட்டார்.கடந்த சனிக்கிழமை சாயந்தரம் ஐந்து மணிக்குள் ஸ்பீக்கர் செட்டை ஆப் செய்யாவிட்டால் போர் தான் என்று சொல்லி விட்டார்.

வட கொரியாவைப் பொறுத்த வரை இழப்பதற்கு என்று எதுவுமில்லை. அவர்களிடம் அணுகுண்டு வேறு உள்ளது. ஆனால் தென் கொரியா வளர்ச்சி அடைந்து விட்டதால் இழப்பு பல மடங்கு அதிகமாக இருக்கும். அதனால் ஸ்பீக்கர் செட்டை சைலென்ட் ஆக்கி விட்டார்கள்.

இத எங்க வீட்டுல சொன்னால் இதுக்கெல்லாம சண்டை போடுவார்கள் என்று நம்ப மாட்டுக்கிறார்கள்..

ஆமாம். கலி காலத்துல என்னவும் நடக்கலாம்..

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக