செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

நிறுவனங்கள் BuyBack முறையில் ஏன் பங்குகளை திரும்பி வாங்குகின்றன? (ப.ஆ - 44)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.
வளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி (ப.ஆ - 43)


அடிக்கடி BuyBack என்ற பதத்தை பங்குச்சந்தையில் கேள்விப்பட்டிருப்போம். பங்குச்சந்தை முதலீட்டில் இருப்பவர்கள் இதனைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது.


அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.



பொதுவாக எந்தவொரு நிறுவனமும் IPO முறையில் பங்குச்சந்தைக்குள் வரும் போது முழுமையான பங்குகளை மற்றவர்களுக்கு கொடுத்து விடாது.

அந்த பங்குகளில் ஒரு பகுதியை தங்களிடம் காசாக வைத்துக் கொள்வார்கள். இதனை UnIssued Capital என்று குறிப்பிடுவார்கள்.

சந்தையில் காட்டும் பங்குகள் எண்ணிக்கையை Outstanding Shares என்று குறிப்பிடுவார்கள்.

இந்த இரண்டையும் சேர்த்து Authorized Shares என்றும் அழைப்பார்கள்.

நிறுவனம் தங்களை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காக நிர்வாகம் செய்யும் நடவடிக்கை இது.

இது போக, எதிர்காலத்தில் பங்குகள் தவிர மற்ற வழிகளில் பணத்தினை திரட்டுவதற்கு UnIssued பங்குகளை பயன்படுத்திக் கொள்வார்கள்.

BuyBack என்பதற்கும், UnIssued பங்குகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் முதலில் விவரித்து விட்டோம். இனி BuyBack பற்றி பார்ப்போம்.

ஒரு சூழ்நிலையில் நிறுவனத்தின் லாபம் கணிசமாக உயர்ந்து பண கை இருப்பு கணிசமாக உயர்ந்து விட்டது என்று கருதிக் கொள்வோம்.

அந்த நேரத்தில் புறக்காரணிகள் காரணமாக பங்கு விலையும் கணிசமாக வீழ்ந்து உள்ளது. ஆனால் அது பங்கின் சரியான விலை இல்லை என்பது நிறுவனத்திற்கு புரிகிறது.

அப்பொழுது தம்மிடம் இருக்கும் பணத்தை மேற்கொண்டு செலவழிக்க நிறுவனத்திடம் வேறு ஏதும் விரிவாக்க திட்டங்கள் இல்லை. அந்த பணத்தை அப்படியே சும்மாவும் வைத்துக் கொள்ள முடியாது.

அந்த சூழ்நிலையில் என்ன செய்யலாம்? இரு வழிகள் இருக்கின்றன.

ஒரு வழியாக தங்களிடம் இருக்கும் பணத்தை பங்குதாரர்களுக்கு டிவிடென்ட்டாக கொடுக்கலாம். ஆனால் அப்படிக் கொடுக்கப்படும் டிவிடென்ட் பணத்திற்கு நிறுவனம் வரி கட்ட வேண்டும். அதனால் நிறுவனத்திற்கு பயன் ஏதும் கிடையாது.

இதனால் மாற்று வழியை யோசிப்பார்கள்.

இன்னொரு மாற்றாக வெளியில் இருக்கும் பங்குகளை தம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு வாங்கி நிர்வாகத்தின் பங்கு அதிகாரத்தை கூட்டிக் கொள்ளலாம். இதனைத் தான் BuyBack என்று அழைக்கிறார்கள்.

இதனால் நிறுவனத்திற்கு என்ன லாபம் என்று கேட்கலாம்?

வெளியில் இருக்கும் பங்குகள் உண்மையான மதிப்பை விட குறைந்த மதிப்பில் நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கும்,

அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பங்குகள் எண்ணிக்கை கூடியதால் நிர்வாகத்தின் அதிகாரம் பங்குதாரராக கூடி இருக்கும்.

இவ்வாறு வெளியே சென்ற தொகைக்கு வரி ஏதும் கட்ட வேண்டியதில்லை.

EPS, P/E, RoE, RoA போன்ற மதிப்புகள் Outstanding பங்குகளை வைத்தே கணக்கிடப்பட்டு இருக்கும்.  Outstanding பங்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதால் EPS, P/E, RoE, RoA போன்ற விகிதங்கள் நல்ல நிலையில் இருப்பதாக மாறும். அதனால் பங்கு விலை மீண்டும் கூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.




இதெல்லாம் நிறுவனத்திற்கு கிடைக்கும் ஆதாயங்கள்.

ஆனால் சந்தை சரிவில் இருக்கும் போது அதே விலையில் பங்கு விலையைக் குறிப்பிட்டு பங்குகளை BuyBack முறையில் வாங்குவதாக சொன்னால் எவரும் விற்க மாட்டார்கள்.

அதனால் நிறுவனம் சந்தை மதிப்பை விட அதிகமான ப்ரீமியம் கொடுத்து வெளியில் பங்குகளை வாங்கும்.

இந்த ப்ரீமியம் என்பது இருபது முதல் முப்பது சதவீதம் வரை அதிகமாக அமையலாம். இந்த ப்ரீமியத் தொகை தான் நம்மை போன்ற வெளிப்பங்குதாரகளுக்கு லாபமாக அமையும்.

உதாரணத்திற்கு Cairn நிறுவனத்தின் பங்குகள் உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்ததால் 350 ரூபாய்க்கு வர்தகமாகிக் கொண்டிருந்த பங்கு தற்போது 180க்கு அருகில் வந்துள்ளது.

ஆனால் உண்மை விலை இது இல்லை. எண்ணெய் விலை கூடினால் குறுகிய காலத்தில் மீண்டும் மேலே வந்து விடும்.

அவர்களிடம் இருபதாயிரம் கோடி அளவு பணமும் கையிருப்பாக உள்ளது.

அதில் ஐயாயிரம் கோடிக்கு வெளியில் இருந்து பங்குகளை 250 ரூபாய்க்கு பங்குகளை வாங்குவோம் என்று முடிவெடுத்தால், பொறுமையில்லாத நிறைய பேர் சந்தோசமாக கிடைத்த காசு போதும் என்று வெளியேற முடிவு செய்வார்கள்.

இதனால் நிர்வாகத்திற்கும் குறைந்த விலையில் பங்குகள் கிடைத்து இருக்கும். அதே நேரத்தில் வெளிப்பங்குதாரகளுக்கு சந்தை விலையை விட அதிகமாக காசும் கிடைத்து இருக்கும்.

இப்படி வாங்குபவர், விற்பவர் என்று இருவருக்குமே பயன் தரும் வகையில் BuyBack அமைகிறது.

ஆனாலும் BuyBack என்பதன் வெற்றி நிறுவனம் கொடுக்கும் ப்ரீமியத் தொகை அடிப்படையிலே அமைகிறது.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.
பங்குகளை பரிமாறிக் கொள்வது எப்படி? (ப.ஆ-45)


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக