வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கச்சா எண்ணெய் விலை சரிவிற்கு காரணம் என்ன?

தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஐம்பது அமெரிக்க டாலர்களுக்கும் கீழே வந்து விட்டது.


இதே அளவு ஒரு கட்டத்தில் நூறு டாலர் அளவு வர்த்தகமாகிக் கொண்டிருந்த சூழ்நிலையில் தற்போது பாதிக்கும் கீழ் வந்து உள்ளது.

இந்தியா இந்த நிலையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஏன் இந்த சரிவு ஏற்பட்டது என்பதைப் பற்றி விவரமாக பார்ப்போம்.



இதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டே சொல்லலாம்.

ஆனால் முக்கியமாக சொல்ல வேண்டியது ஆயில் உற்பத்தி செய்யும் நாடுகளிக்கிடையே ஒற்றுமை இல்லாததைத் தான் குறிப்பிட முடியும்.

கடந்த ஆண்டு வரை உலக அளவில் அதிக அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக சவுதி அரேபியாவே இருந்து வந்தது.

கடந்த சில ஆண்டுகள் முன்பு பாறை இடுக்ககளில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் நுட்பத்தை அமெரிக்கா கண்டுபிடித்தது. இதனை Shale Oil என்று அழைக்கிறார்கள்.

இந்த கண்டுபிடிப்பின் பின் அமெரிக்கா சவுதியை பின் தள்ளி உலகின் முதன்மையான எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக மாறிப் போனது.

எண்ணையை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சவூதிக்கு எண்ணெய் பங்களிப்பில் தங்களது சந்தைய விட மனதில்லை. இதனால் மேலும் மேலும் எண்ணையை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

இப்படி வளைகுடா நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெறும் வர்த்தக போட்டி கச்சா எண்ணெய் விலையை பாதிக்கும் கீழே கொண்டு வந்து விட்டது.

ஆனால் நிலத்தை தோண்டினால் தண்ணீருக்கு பதில் ஆயில் வரும் சவூதியில் 40 டாலருக்கும் கீழ் சென்றாலும் பாதகம் இல்லை. ஓரளவு லாபத்துடனாவது விற்க முடியும். அங்கு பெரிய செலவு இல்லை.

ஆனால் அமெரிக்காவின் சேல் ஆயில் தொழில் நுட்பத்தில் ஐம்பது டாலருக்கும் கீழ் வந்தால் நஷ்டத்தில் தான் விற்க வேண்டி வரும்.

அப்படி வரும் சூழ்நிலையில் பாறையில் இருந்து எடுக்கும் எண்ணெய் நிறுவனங்கள் வியாபரத்தை விட்டு ஓடி விடுவார்கள் என்பது அரேபியாவின் கணிப்பு.

இதனால் தான் OPEC என்று சொல்லப்படும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டம் போட்டு உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று சொல்லிய போது சவுதி மட்டும் மறுத்தது.

புதுப்பிக்க முடியாத எரிசக்தியை வீணடிக்கும் இந்த உள்நோக்கம் உயர்வானது என்று சொல்ல முடியாது. ஆனால் வர்த்தக போட்டியால் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி கணிசமாக குறைந்து போனது.

இது போக, நமக்கு ஏற்கனவே தெரிந்தது போல் முக்கிய எண்ணெய் இறக்குமதி நாடுகளான ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்றவை கடுமையான பொருளாதார தேக்கத்தில் சிக்கி கொண்டுள்ளன.

அதனால் அங்கு சிக்கன நடவடிக்கை ஆரம்பித்து உள்ளதால் எண்ணையின் தேவை கணிசமாக குறைந்து உள்ளது.

அடுத்து, அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த வருடத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் கச்சா எண்ணையோ டாலரில் வர்தகமாகிக் கொண்டுள்ளது.

பார்க்க:  அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?

இதனால் இறக்குமதி செய்யும் நாடுகள் தங்கள் நாணயத்தில் அதிக காசு கொடுத்து எண்ணையை வாங்க வேண்டி உள்ளன.

இது அவர்கள் பட்ஜெட் மற்றும் அந்நிய செலாவணியில் துண்டு போட வைத்து விடும் என்பதால் பெட்ரோல், டீஸல் போன்றவற்றிற்கான மானியங்களை தங்கள் நாட்டில் குறைத்துள்ளன.

இதனால் எரிபொருள் விலை அதிகமாகி விடுவதால் மக்களின் பயன்பாடு குறைந்துள்ளது.

இது போக, நியூக்ளியார்  தடையால் அவதிப்பட்டு வந்த ஈரானுடன் மேற்கு நாடுகள் அண்மையில் சமாதானமாக போக முடிவு செய்துள்ளன. அதனால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு உள்ளன.

இதனால் ஈரானில் இருந்தும் அதிக அளவு எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வர வாய்ப்புள்ளது.

இப்படி தேவைக்கும் அதிகமான உற்பத்தி, டாலர், பொருளாதார வேகம் குறைதல் என்று பல காரணங்கள் ஒன்று கூடி கச்சா எண்ணெய் விலையை கீழே இழுத்து உள்ளது.



தற்போதுள்ள நிலவரப்படி,பெரும் அளவிலான எண்ணெய் உற்பத்திக்கு ஏற்கனவே திட்டமிட்டு உள்ளார்கள். இது தேவையுடன் பொருந்தாது இருக்கும் சூழ்நிலையில் அடுத்த ஆண்டு இறுதி வரை எண்ணெய் விலை 60 டாலருக்குள் தான் நிற்கும் என்று சொல்கிறார்கள்.

ரஷ்யா, வெனிசூலா, ஈரான் போன்ற நாடுகளின் அரசு பட்ஜெட்கள் எண்ணெய் வியாபரத்தை அடிப்படையாக வைத்து போடப்படுவதால் அங்கு அதிக அளவில் துண்டு விலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்த வரை தனது நாணயம், பொருளாதாரம், நிதி பற்றாக்குறை போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு அருமையான வாய்ப்பு.

நம்மிடம் தற்போது இருக்கும் அதிகமான டாலரை வைத்து குறைந்த விலையில் எண்ணையை பெற்று சேமித்து வைக்க அரசு திட்டமிடுகிறது என்றும் ஒரு செய்தி படித்த நியாபகம்.

இவ்வாறு இந்த இடைவெளியில் நம்மை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டால் மீண்டும் எண்ணெய் விலை கூடும் போது எளிதாக சமாளித்து விடலாம்.

தொடர்பான கட்டுரைகள்:
ஈரான் எப்படி இந்தியாவைக் காப்பாற்றும்?
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக