செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

சீனா வட்டி விகிதத்தைக் குறைத்தது, எவ்வளவு பயனளிக்கும்?

உலக சந்தைகளுக்கு சவாலாக இருந்து வரும் சீனா அடுத்து ஒரு நடவடிக்கையை தற்போது எடுத்துள்ளது.


தொடர்ந்து சரிந்து வரும் தமது சந்தையை காத்துக் கொள்ள வட்டி விகிதங்களை அதிரடியாக குறைத்துள்ளது.இதன்படி, கடன் வட்டி விகிதத்தை 0.25% அளவு குறைத்துள்ளது. வியாபர குறைவு காரணமாக கடனில் மூழ்கி உள்ள நிறுவனங்கள் வட்டி கட்டுவது இதனால் குறையும்.

அதே நேரத்தில் பண இருப்பு விகிதத்தை 0.5% அளவும் குறைத்துள்ளது. இதனால் சீன பங்குச்சந்தையில் வங்கிகள் முதலீடு செய்யும் பண அளவு கணிசமாக அதிகரிக்கும். அதனால் சந்தை மீளும் என்பது ஒரு நம்பிக்கை.

இந்த இரண்டு காரணங்களால் சந்தை தற்காலிகமான வீழ்ச்சியைத் தவிர்க்கலாம்.

அதே நேரத்தில் சீனாவின் யுவான் புழக்கத்தில் அதிகமாகி நாணய மதிப்பு மேலும் குறையவே வாய்ப்பு உள்ளது. தனது ஏற்றுமதி பொருளாதரத்தை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இது உலக அளவில் மேலும் டாலர் மதிப்பைக் கூட்டவே உதவும். மேலும் ஒரு வகையில் உலக நாணயங்களுக்கு சிக்கலான விடயம் தான்.

இந்த சூழ்நிலையில் நாம் ஒரு யதார்த்தத்தை புரிந்து கொள்ளலாம்.

முப்பது வருடங்கள் தொடர்ச்சியான உச்ச வளர்ச்சியைக் கொடுத்து வந்த சீனா தற்போது தனது பொருளாதரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் வாய்ப்பாக இந்த சரிவைக் கருதலாம்.

இந்த நிலை நிறுத்தல் என்பது ஓரிரு நாட்களில் நடப்பது நல்ல. ஓரிரு வருடங்கள் கூட ஆகலாம்.

அதனால் இந்த வட்டி விகித குறைப்புகள் என்பது வீழ்ச்சிகளை தாமதப்படுத்தும் நடவடிக்கைகளே. அதாவது ஓட்டுப் போடும் வேலைகள். ஆனால் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் அல்ல.

நமது மீடியாக்கள் சீனா, சீனா என்று ஒரு பெரிய அளவில் பதற்றத்தை சந்தையில் தோற்றுவித்துள்ளன. ஆனால் சீனா போன்ற மூடிய பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டில் அங்கு என்ன நடக்கும் என்று கணிக்கும் என்பது நமக்கு மிகவும் கடினமான செயல்.

உலக அளவில் 10% ஜிடிபியைக் கொண்டுள்ள சீனாவால் ஏற்படும் பாதிப்பு நமக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதை புரிந்து கொண்டு முதலீடை தொடர்வது மட்டும் நன்றாக இருக்கும்.

சரி..நம்ம ஊருக்கு வருவோம்..

நேற்று பிஜேபி அனைத்துக் கட்சிகளையும் GST மசோதா தாக்கல் செய்வதற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதனை முன்பே செய்து இருக்கலாம்.

பல கட்சிகளும் தங்களை முக்கிய மந்திரி ஒருவரும் அணுகவில்லை என்பதையே குறையாக கொண்டுள்ளன.

ஆனால் பிஜேபி முழு மெஜாரிட்டியாக இருப்பதால் கட்சிகளை அரவணைத்து செல்வதில் ஒரு வித ஈகோ பிரச்சினை இருப்பதாகவே தெரிகிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மெஜாரிட்டி இல்லாத போதும் பல முக்கிய மசோதாக்களை செயலுக்கு கொண்டு வர முடிந்தது. பிரணாப் முகர்ஜி போன்ற மந்திரிகள் இந்த விசயத்தில் சானக்கியர்களாக இருந்தனர்.

ஆனால் பிஜேபியில் அது மிஸ்ஸிங். அரசியலில் அரவணைப்பும் அவசியமே..

தற்போது நடப்பதை பார்த்தால் அப்படி இப்படி என்று சிறப்புக் கூட்டத்திலாவது GSTயைக் கொண்டு வந்து விடுவார்கள் போல் தெரிகிறது. வந்தால் சந்தை மிகவும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் உள்ளது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக