செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

இந்திய பங்குச்சந்தையில் ஒரு ரகசிய வெற்றியாளர்

இந்தக் கட்டுரையில் இந்திய பங்குச்சந்தையில் ஒரு முதலீட்டாளராக வெற்றி கண்ட ஒருவரைப் பற்றி பார்ப்போம்.


நமது சந்தையில் தனிப்பட்ட முதலீட்டாளர்களில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவை தவிர மற்றவர்கள் அறியப்படுவதில்லை.

அதற்கு ஜூன்ஜூன்வாலா அளவு மற்றவர்கள் பெருமளவு பணம் சம்பாதிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்னொன்று, பல வெற்றிகரமான முதலீட்டாளர்கள் மீடியா வெளிச்சம் படாமல் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.



கடந்த ஒரு கட்டுரையில் ஒரு ரகசிய பேராசிரியரைப் பற்றி பார்த்தோம்.

பார்க்க: பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவிக்கும் ஒரு ரகசிய பேராசிரியர்

அவரைத் தொடர்ந்து இன்னொரு முதலீட்டாளரும் ரகசியமாக வெற்றி பெற்றுள்ளார்.


அவர் பெயர். ராஜீவ் கண்ணா. இவரது வயது 67. தனது மனைவி பெயரில் உள்ள டோலி கண்ணா என்ற டிமேட் கணக்கு மூலமாகவே பங்குச்சந்தை வர்த்தகம் செய்து வருகிறார்.

பொதுவாக நமது முதலீடு ஒரு நிறுவனத்தில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் போது பெயர் பொதுவில் வந்து விடும். அது வரை எவ்வளவு வைத்து இருக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது.

அப்படித் தான் திடீர் என்று டோலி கண்ணா என்ற பெயர் பல நல்ல துவக்க நிறுவனங்களில் கணிசமான முதலீடு செய்ததாக வெளிவந்த போது மீடியா வெளிச்சத்திற்கு வந்தார்.

ஆனால் மீடியாவிற்கு டோலி கண்ணா யாரென்று கண்டுபிடிப்பதில் பெருங்குழப்பம் இருந்தது.

கடைசியில் லிபர்டி நிறுவனம் மூலமாக ஓரளவு விவரங்கள் கிடைக்க விசாரித்தால் சென்னையில் வசிக்கும் ஒரு நபர் மனைவி பெயரில் வர்த்தகம் செய்து வருகிறார் என்ற தகவல் கிடைத்தது.

Kwality என்ற பெயரில் உள்ள ஐஸ்கிரீம் முன்பிருந்தே பிரபலமானது. அதனை இவரது குடும்பம் தான் நடத்தி வந்தது. அந்த நிறுவனத்தை 1994ல் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்திற்கு விற்று விட்டார்.

அதில் வந்த காசின் ஒரு பகுதியைத் தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். மீதியை இன்னும் பால் தொடர்பான வியாபாரத்தில் தொடர்கிறார்.

பொதுவாக இவர் வாங்கிய பங்குகளை நீண்ட காலத்திற்கு வைத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்.

இவரது பங்கு கண்டுபிடிக்கும் வழக்கம் என்பது கொஞ்சம் எளிமையானது. நமது தினசரி வாழ்க்கையில் புதிதாக வந்து நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை இனங்காண்வார். அதன் பிறகு நிறுவனத்தின் நிலையை அறிந்து முதலீடை தொடர்வார்.

இவரது முதலீடும் நஷ்டம் இல்லாமல் இல்லை. 1998ம் ஆண்டில் அதிக அளவு மென்பொருள் நிறுவனங்களில் முதலீடு செய்தார். 2000ம் ஆண்டில் Y2K மற்றும் இரட்டை கோபுர நிகழ்வுகளால் ஐடி துறை சரிந்த போது பெருமளவு பணத்தை இழந்தார்.

ஆனால் 2003ல் மீண்டு வந்த போது இழந்ததை விட பல மடங்கு அதிகமாக சம்பாதித்தார். நஷ்டம் வரும் போது எப்படி பங்குகளை கையாளுவது என்பதற்கு இந்த நிகழ்வு பெரிதும் உதவும்.

ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கில் முதலீடு செய்து 200 மடங்கு அதிக லாபம் பெற்றார். தற்போது இவரது போர்ட்போலியோவை பார்த்தால் 40 பங்குகள் உள்ளன.

மேலும் வாங்கிய தேதியை அடிப்படையாக வைத்து பார்த்தால் Hawkins Cookers , Relaxo , Liberty Shoes, Nilkamal போன்ற பங்குகள் பல மடங்கு ரிடர்ன் கொடுத்துள்ளன. கீழே முழுப் பட்டியல் உள்ளது.




தற்போது இவரது பங்கு முதலீட்டின் மொத்த மதிப்பு 200 கோடியையும் தாண்டியுள்ளது. 2007ல் இவரது மொத்த பங்கு மதிப்பு ஒரு கோடி அளவு தான் இருந்தது என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது. எட்டு வருடங்களில் 200 மடங்கு ரிடர்ன். அணைத்தும் பங்கு மதிப்பீடல் மற்றும் வளர்ச்சி அடிப்படைகளை வைத்து தான் பெற்றவை.

ஜேம்ஸ் மானிட்டர் எழுதிய Value Investing என்ற புத்தகம் அடிப்படை முதலீட்டு அறிவினை தந்ததாகவும், அதனை பின்பற்றுவதாகவும் குறிப்பிடுகிறார்.

பார்க்க:  Value Investing: Tools and Techniques for Intelligent Investment

இதில் ஒரு முக்கியமான குறிப்பு. இவர் நிதித்துறை சாராதவர். ஐஐடியில் டெக்னிக்கல் படிப்பை முடித்தவர் தான். பங்குச்சந்தை முதலீட்டிற்கு ஆடிட்டர் அளவு நிதி மேலாண்மை படித்து இருக்க வேண்டியது அவசியமில்லை என்பதை இவரது வெற்றி உணர்த்துகிறது.

தொடர்பான கட்டுரைகள்:

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக