வியாழன், 13 ஆகஸ்ட், 2015

GSTயும், யுவானும் சந்தையை கீழே இழுக்கிறது. என்ன செய்வது?

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை இந்திய பங்குச்சந்தை வெறும் ஒரு சதவீத லாபத்தை தான் கொடுத்துள்ளது என்றால் நம்புவது கஷ்டமாக இருக்கும்.


ஆனால் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளின் சந்தைகள் நம்மை விட நல்ல ரிடர்னைக் கொடுத்து உள்ளன.இதற்கு முக்கிய காரணமாக பார்த்தால் கடந்த வருடத்தில் நாம் முப்பது சதவீதத்திற்கு மேல் ரிடர்ன் பெற்று விட்டோம்.

அதற்கு மேலும் கூட வேண்டும் என்றால் நமது நிறுவனங்கள் இன்னும் கொஞ்சம் நல்ல லாபம் கொடுக்க வேண்டும்.

ஆனால் முதல் பாதியில் சராசரியாக பார்த்தால் ஒரு சதவீத லாபமே நிறுவனங்கள் அதிகமாக கொடுத்துள்ளன.

இதனால் மதிப்பீடலில் நமது சந்தை 27,500க்கு அருகில் இருப்பதே பொருத்தமானது.

இந்த காலாண்டில் சில நிறுவனங்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக ரிசல்ட் கொடுத்துள்ளன.

SBIயின் நிதி அறிக்கை படிக்கும் போது வாராக்கடன்கள் குறைந்து வருவதை பார்க்கையில் ஒரு நல்ல நம்பிக்கை ஏற்பட்டது.

இது போக, சில மற்ற வங்கிகளும் ஓஹோவென்று சொல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லாத அறிக்கைகளை கொடுத்துள்ளன.

ஆனால் சுரங்கம் மற்றும் கட்டமைப்பு நிறுவனங்கள் இன்னும் இழுபறியில் தான் உள்ளன. அதற்கு மெதுவான பொருளாதார சீரமைப்பு ஒரு காரணம் என்று சொல்கிறார்கள்.

உண்மை தான். காங்கிரசும், பிஜேபியும் இப்படி ஈகோ பிடித்து பார்லிமென்டில் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால் என்ன செய்ய என்று தெரியவில்லை.

இன்றுடன் முடியப்போகும் நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றும் நடக்காது என்று மட்டும் தெரிகிறது.

நேற்று பார்லிமென்ட்டில் சுஷ்மா பேசுவதை வீடியோவில் பார்க்கும் போது நம்ம ஊர் சந்தை கூட இதை விட அமைதியாக இருக்கும். அவ்வளவு இரைச்சல்..

இதனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட GST வரி வருவது கஷ்டம் தான் என்று தோன்றுகிறது. இப்படி சென்றால் ஏப்ரல் 2016ல் GST நடைமுறைக்கு வருவது கஷ்டமே.

சிறப்புக் கூட்டம் நடத்தி மசோதாவை கொண்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள். கூச்சல் இல்லாமல் நடக்குமா என்பது சந்தேகமே...

இதனை வரும் வாரத்தில் சந்தை அதிகம் எதிர்மறையாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.

நேற்று தான் சீனாவின் நாணய குறைப்பை பற்றி எழுதி இருந்தோம். அது நேற்றோடு முடியப் போவதில்லை என்று தெரிகிறது.

பார்க்க:
சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்?

இன்னும் சீன மத்திய வங்கி நான்கு சதவீதம் வரை மதிப்பைக் குறைக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள்..

அப்படி நடந்தால் சீனாவிற்கு கார் இறக்குமதி செய்யும் டாடா மோட்டார், வேதாந்தா போன்ற உலோக சுரங்கத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள், டயர் நிறுவனங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் போன்றவை அதிக அழுத்தங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டு.

அதே வேளையில் இந்திய ரூபாய் மதிப்பையும் பாதிக்கும்.வாய்ப்பு உள்ளது. நமது அந்நிய செலாவணி திருப்தியான அளவில் இருப்பதால் பெரிதாக பாதிப்புகள் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.

ஆனால் ஏற்றுமதி செய்யும் ஐடி, மருந்து நிறுவனங்கள் இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும்.

சந்தை தற்போது கரடியின் பிடியில் தான் உள்ளது. இன்னும் 27,000 புள்ளிகள் வரை கீழே வர வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்த சூழ்நிலையில் கூட சில நிறுவனங்கள் 52 வார உயர்வை அடைந்து உள்ளன். அதே நேரத்தில் சில 52 வார தாழ்வை கூட அடைந்துள்ளன.

அதனால் பங்குகளை சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்ந்து எடுத்து முதலீடு செய்வது தற்போது அதி முக்கியத்துவம் பெறுகிறது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக