புதன், 30 செப்டம்பர், 2015

HCL நிறுவனத்தின் எச்சரிக்கையை எப்படி அணுகுவது?

நாம் இலவசமாக பரிந்துரை செய்த போர்ட்போலியோவில் உள்ள ஒரு முக்கிய நிறுவனம் HCL Technologies. பரிந்துரை செய்த இரண்டு வருடங்களில் 76% லாபம் கொடுத்துள்ளது.

பார்க்க: முதலீடு போர்ட்போலியோ


இந்த நிலையில் நேற்று நிறுவனம் சார்பில் வெளியான ஒரு குறிப்பு இன்று சந்தையில் பங்கை 10% அளவு பதம் பார்த்தது.அதில் ஒரு முக்கியமான குறிப்பு நாணய மாற்று விகிதத்தால் லாபங்களில் சிறிது மாற்றம் ஏற்படலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

நாணய மாற்று விகிதம் என்பது எல்லா ஐடி நிறுவனங்களுக்கும் பொதுவானது என்பதால் சீரியஸாக எடுக்க வேண்டிய தேவையில்லை.

ஆனால் அடுத்து ஒரு குறிப்பு தான் சந்தையில் பயத்தைக் கொடுத்துள்ளது.

அதாவது ஒரு கிளின்ட் ப்ரொஜெக்டில் ஏற்பட்ட தவறால் 20 மில்லியன் டாலர் வரை அபராதம் போன்று கட்ட வேண்டி இருக்கும். ஆனாலும் சமரச பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

20 மில்லியன் டாலர் என்றால் கிட்டத்தட்ட 130 கோடி ரூபாய் அளவு வருகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் HCLன் லாபம் சராசரியாக 1500 கோடி கிடைத்து வருகிறது. அதில் பத்து சதவீதம் அளவு குறைகிறது.

இந்த காலாண்டில் 3.5% அளவு எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியில் ஒரு சதவீதம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட கால நோக்கில் பார்த்தால் HCL போன்ற நல்ல அடிப்படைகளைக் கொண்ட பெரிய நிறுவனத்திற்கு இது பெரிய அளவு பாதிப்பு இல்லை என்று சொல்லலாம்.

அதனால் இந்த பிரச்சினை இந்த காலாண்டுடன் முடிந்து விடும் என்று இருந்தால் தற்போதைய இறக்கத்தில் இந்த பங்கு மலிவு விலையில் கிடைக்கிறது.

ஆனால் அவர்கள் Multi Year Multi Billion Dollar Project Client என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆக, அது பெரிய கிளின்ட் என்று இருக்கும் சமயத்தில் அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தொடருமானால் அந்த ப்ரோஜெக்ட்டை கைவிடும் நிலை ஏற்படலாம்.

அது எவ்வளவு பாதிக்கும் என்பதை நிதி நிலை அறிக்கையில் கொடுக்க போகும் தகவல்களைப் பொறுத்தே அமைகிறது. நிதி நிலை அறிக்கை அக்டோபர் கடைசி வாரத்தில் வெளிவருகிறது.

என்னவாக இருந்தாலும் தற்போது அவர்கள் கொடுத்த தகவல்கள் முடிவெடுக்க போதுமான அளவிற்கு இல்லை.

அதனால் ரிஸ்கையும், தற்போதுள்ள மலிவு விலையும் சமநிலைப்படுத்தும் பொருட்டு இப்போது பாதி, நிதி அறிக்கையை பார்த்த பிறகு பாதி என்று முதலீடை தொடரலாம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: