திங்கள், 6 ஏப்ரல், 2015

இந்திய இ-காமெர்ஸ் நிறுவனங்களைக் குறிவைக்கும் அலிபாபா

ஆசியா நாடுகளில் இ-காமெர்ஸ் புரட்சி பரவும் வேகம் கடுமையாக உள்ளது.


அதிலும் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் மட்டும் ஆன்லைன் ஷாப்பிங் 34% வளர்ந்து உள்ளதாம்.

இது மற்ற எந்த துறைகளை விட மிக அதிகம். உதாரணத்திற்கு மருந்து துறையை எடுத்துக் கொண்டால் பத்து சதவீத வளர்ச்சி அடைவதற்கு படாதபாடு பட வேண்டியுள்ளது.இந்த சூழ்நிலையில் தான் பெரிய மீன்கள் சிறிய மீன்களை வரிசையாக கவ்வி வருகின்றன.

ப்ளிப்கார்ட் மிந்தரா இணையதளத்தை வாங்கியதில் இருந்து ஆரம்பித்த கவ்வும் படலத்தை அலிபாபா முடிப்பது போல் உள்ளது.

சீனாவின் மிகப்பெரிய பணக்காரரான ஜேக் மாவின் நிறுவனம் தான் அலிபாபா. 1999ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட குறைந்த விலை பொருட்களை உலகம் முழுவதும் எடுத்து சென்றதில் முக்கிய பங்கு வகித்தது.

இதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவின் அசுர வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

எக்கச்சக்க பணத்தில் மிதக்கும் அலிபாபா எங்கு பணத்தை போடலாம் என்று தேடி வருகிறது.

தற்போது சீனாவிற்கு அடுத்த பெரிய சந்தையான இந்தியாவை குறி வைத்துள்ளது.

முதலில் SNAPDEAL நிறுவனத்தை கைப்பற்ற அலிபாபா பேசி வந்தது. SNAPDEAL நிறுவனத்திற்கு தங்களை விற்க வேண்டிய தேவை கொஞ்சமும் இல்லை. அதனால் குதிரை விலை கேட்டார்கள். இது வேலைக்கு ஆகாது என்று தெரிந்து SNAPDEAL நிறுவனத்தை விட்டு விட்டார்கள்.

தற்போது நடுத்தர நிறுவனங்களை குறி வைத்துள்ளார்கள். இப்படி கடந்த வாரம் இரு நிறுவனங்களின் அதிக பங்குகளை வாங்கி கொண்டது.

அதில் ஒன்று தான் Paytm.com. ஆன்லைன் மொபைல் ரீசார்ஜ் செய்ய ஆரம்பித்த நிறுவனம் படிப்படியாக பொருட்களையும் ஆன்லைனில் விற்க முனைந்தது. ஓரளவு சந்தையும் பிடித்தது.பொருள் விற்பனையில் ப்ளிப்கர்ட் அளவு இடம் பிடிக்க முடியாவிட்டாலும் ரீசார்ஜ் மூலம் பெற்ற நுகர்வோர் எண்ணிக்கை இன்னும் கணிசமாகவே  உள்ளது. அலிபாபாவிற்கு தற்போது ஆட்கள் தான் அதிக தேவையாக உள்ளது. அதனால் கவ்விக் கொண்டார்கள்.

அடுத்து, பல நகரங்களில் டாக்ஸி சேவை செய்து வரும் Meru Cabs நிறுவனத்திலும் கணிசமான பங்குகளை கைப்பற்றி உள்ளார்கள்.

மீட்டர் போடாத ஆட்டோ டிரைவர்களின் புண்ணியத்தால் ஆன்லைன் டாக்ஸி தொழிலும் சரியான வளர்ச்சி கண்டு வருகிறது.  அதில் 15,000 வாகனங்களை வைத்து Meru Cabs கொஞ்சம் வலுவாகவே உள்ளது. அதுவும் அலிபாபா கைக்கு செல்கிறது.

நமது நிறுவனங்கள் வெளிநாட்டவர்கள் கையில் சொல்வது கவலையான ஒன்று தான். ஆனால் சந்தை பொருளாதரத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக இது மாறி உள்ளது.

என்னவோ மனம் SNAPDEAL மற்றும் FLIPKART நிறுவனங்கள் வெற்றி பெறத் தான் வாழ்த்துகிறது!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக