புதன், 15 ஏப்ரல், 2015

தள்ளாடும் ரியல் எஸ்டேட்டால் கவலையில் சிமெண்ட் நிறுவனங்கள்

கடந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் கட்டமைப்பு துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.


இதனால் கட்டமைப்பு சார்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் நல்ல உயர்வை சந்தித்தன.

என்ன தான் பட்ஜெட்டில் சலுகைகள் அளிக்கப்பட்டாலும் ரியல் எஸ்டேட் இன்னும் சோர்ந்தே உள்ளது. இதனால் நிறுவனங்களின் தள்ளாட்டம் நின்ற பாடில்லை.
அதிலும் தென் இந்தியாவில் கேட்க வேண்டாம். கடந்த வருடம் கட்டிய பிளாட்கள் சென்னையில் இன்னும் விற்காமல் தான் உள்ளன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இந்த வருடம் பில்டர்கள் தங்களது 25%  கட்டுமான பணிகளை குறைத்து விட்டார்களாம்.

இவ்வாறு பரவலாக வரும் பாதிப்பு சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் எதிரொலிக்கிறது.

வெறும் 10% வருமானத்தை மட்டுமே அரசு திட்டங்களில் பெறும் சிமெண்ட் நிறுவனங்கள் மீதியை பரவலாக இருக்கும் ரியல் எஸ்டேட்டிலே பெறுகின்றன.

ரியல் எஸ்டேட் இன்னும் மீண்டும் வராததால் ACC, Ultratech போன்ற பெரிய சிமெண்ட் நிறுவனங்கள் கூட பின்னடைவை சந்திக்கின்றன. தேவையான அளவு விற்பனை வளர்ச்சியை பெற முடியவில்லை. சொல்லப் போனால் கடந்த வருடத்தை விட 10% வோல்யூமை இழந்துள்ளன.

இதனால் தொழிற்சாலைகளை உபயோக்கிக்கும் விகிதமும் குறைந்து நஷ்டக் கணக்கு தான் காட்ட வேண்டி உள்ளது.

இவ்வளவு நாள் மந்தமாக இருந்து வந்த கிழக்கு இந்தியா தான் தற்போது ரியல் எஸ்டேட்டில் கை கொடுக்கிறது, மீதி பகுதிகள் கடந்த பொருளாதார சுணக்கம் கொடுத்த சோகத்தில் இருந்து இன்னும் மீளவே இல்லை.

ரியல் எஸ்டேட் சுழற்சியை புரிந்து கொள்வது கொஞ்சம் எளிது தான்.

முதலில் தனி நபர் வேலைக்கு உத்தரவாதம் வர வேண்டும் .அதற்கு உற்பத்தி, ஐடி போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகு ஒழுங்காக சம்பளம் வந்தால் தான் மக்கள் வீடு வாங்க யோசிப்பார்கள். அது வரை தின செலவிற்கு சேர்த்து வைக்கத் தான் தோன்றும்.

அதனால் உற்பத்தி, சேவை, ஐடி போன்ற நிறுவனங்கள் ஒரு நல்ல வளர்ச்சி கொடுத்து நம்பிக்கையைக் கொடுத்தால் தான் ரியல் எஸ்டேட் எழுச்சி பெறும்.

அது வரை பில்டர்கள் சும்மா கிடக்கும் வீடுகளுக்கு வட்டி கொடுப்பதை தவிர்த்து கொஞ்சம் சலுகைகளை கொடுத்தால் தான் மக்கள் வாங்க ஆரம்பிப்பார்கள். எப்பொழுதும் உடும்பு பிடியாக இருந்தால் மோடி மஸ்தான் என்ன செய்தாலும் வேலைக்கு ஆகாது.

இன்னும் ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்ய காலம் கனியவில்லை என்று தான் தோன்றுகிறது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக