புதன், 22 ஏப்ரல், 2015

பென்னி ஸ்டாக் என்றால் பயந்து ஓடுவதன் காரணங்கள் (ப.ஆ - 41)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

பொதுவாக 10 ரூபாய்க்கு கீழ் பங்கு விலைகளைக் கொண்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் பங்குகளை தான் பென்னி ஸ்டாக் என்று அழைக்கிறோம்.


இதற்கு முன் போர்ட்போலியோவில் பாய்ந்தோடும் பென்னி பங்குகள் என்ற தலைப்பில் எழுதி இருந்தோம்.

ஆனால் அதே நேரத்தில் பென்னி ஸ்டாக்குகள் பயந்து ஓடவும் செய்து வைக்கின்றன.பெரிய பங்குகளில் 30% அளவு நஷ்டங்கள் ஏற்படுவது சராசரி என்றால் பென்னி பங்குகளில் 90% இழப்பு ஏற்படுவது என்பது மிகவும் எளிது.

பொதுவாக எந்த நிறுவனமும் IPO மூலம் வெளிவரும் போது 10 ரூபாய்க்கு கீழ் பங்கு விலையை வைப்பதில்லை. ஏன் தற்போது முகமதிப்பு (Face Value) கூட 10 ரூபாய்க்கு கீழ் இருப்பதில்லை.

இதனால் புதிய நிறுவனங்கள் தான் பென்னி ஸ்டாக் என்ற பிரிவிற்குள் வருகின்றன என்பது தவறான கருத்தாகும்.

ஒரு கட்டத்தில் நல்ல நிலைக்கு சென்று அதன் பிறகு மோசமான நிதி அறிக்கையால் 10 ரூபாய்க்கு கீழ் வந்த பங்குகளே அதிகம்.

அதாவது நலிவடைந்த நிறுவனங்களே பென்னி பங்குகள் என்ற வகைக்குள் வருகின்றன.

வருமானம் குறைந்து கொண்டே இருக்கும், அதே நேரத்தில் கடன் கூடிக் கொண்டே இருக்கும். இறுதியில் நிறுவனத்தை முற்றிலும் விற்றால் எதுவும் மிஞ்சுமா என்று தெரியாது.

இது தான் பென்னி ஸ்டாக்குகளின் பொதுவான குணங்களாக காணலாம்.

இது தவிர, தினமும் வர்தத்கமாகிக் கொண்டு இருக்கும் பங்குகளின் எண்ணிக்கையும் பெரிய அளவில் இருக்காது. இதனால் நினைத்த நேரத்தில் விற்கவும் முடியாது.

50 பைசாவில் இருக்கும் பங்கில் இரண்டு லட்சம் பங்குகளை வாங்கினால் தான் ஒரு லட்ச ரூபாய் மதிப்பு இருக்கும். இதனால் பங்கின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மதிப்பு என்பது குறைவே.

இந்த நிலை இடைப்பட்ட தரகர்களுக்கு ஏதுவாக அமைகிறது.

வாங்குவதையும் விற்பதையும் செயற்கையாக ஏற்படுத்தி பங்கு விலையை கூட்டுவார்கள். அதன் பிறகு நல்ல நேரத்தில் விற்று விடுவார்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த நிறுவனத்தை நடத்துபவர்கள் கூட செயற்கையாக விலைகளை கூட்டுவதுண்டு.இறுதியாக, நிறுவனம் என்ன செய்து கொண்டு இருக்கிறது? உண்மையிலே நிறுவனம் நடக்கிறதா? சொல்லும் விவரங்கள் எந்த அளவு உண்மையனானவை என்று வெளியே தெரிவதில்லை.

பெரிய நிறுவனங்களில் இந்த தவறுகள் அவ்வளவாக நடப்பதில்லை. அபப்டியே நடந்தாலும் உடனடியாக மீடியாவில் வெளிவந்து விடும். ஆனால் சிறு நிறுவனங்களில் அப்படியில்லை என்பதால் நமக்கு எதுவும் தெரியாமலே போய் விடும்.

இது சொந்த அனுபவம்.

ஆரம்ப கட்டங்களில் Cals Refineries என்று பங்கை நாமும் கண்டதுண்டு. 70 பைசாவில் இருந்த பங்கு ஒரு ரூபாய்க்கு செல்லும். அதன் பிறகு மீண்டும் கீழே வரும். இப்படியே போய் கொண்டு இருந்தது.

அதை பண்றாம் இதை பண்றோம் என்று சொல்வார்கள். அப்புறம் அது பற்றிய பேச்சே இருக்காது. இப்படியே காலத்தை ஓட்டி விட்டார்கள்.

இன்று 8 பைசாவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 90% நஷ்டம்.

ஆனால் குறுகிய காலத்தில் பட்டு உணர்ந்ததால் வெளிவந்து விட்டோம். பெரிய நஷ்டம் தடுக்கப்பட்டது.

இடையில் இரண்டு முறை நிறுவனர்களே புரோக்கர்களை வைத்து விலைகளைக் கூட்டியதால் செபியால் இந்த பங்கு வர்த்தகத்தில் கூட தடுக்கப்பட்டது.

இது தான் பல பென்னி பங்குகளில் இன்றும் தொடர்கிறது.

அதிகம் பேர் பென்னி பங்குகளால் அதிகம் சம்பாதித்து இருக்கிறோம் என்று கூறி கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் என்னவோ அவர்கள் அடைந்த நஷ்டங்கள் என்றும் வெளிவருவதில்லை.  பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின்அடுத்த பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .


  பங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ் (ப.ஆ - 42)
  « முந்தைய கட்டுரை
  Email: muthaleedu@gmail.com

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக