திங்கள், 27 ஏப்ரல், 2015

ஐடியும் ஆயிலும் சந்தையை கீழே தள்ளுகிறது.

இந்திய சந்தையில் கரடியின் பிடி முன்பை விட வலுவாக உள்ளது. அதனால் தான் 27,000 என்ற புள்ளிகளுக்கு அருகில் சென்செக்ஸ் வந்துள்ளது.


இந்த இறக்கத்தை ஐடி பங்குகளே ஆரம்பித்து வைத்தன. எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும் இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்று கூட உருப்படியான நிதி முடிவுகளை கொடுக்கவில்லை என்பது தான் பெரிய எதிர்மறை விடயமாக பார்க்கப்படுகிறது.



TCS ஆரம்பித்து வைத்த இறங்கு படலத்தை இன்போசிஸ் கடந்த வாரம் முடித்து வைத்தது.

பார்க்க:


அடுத்து, எண்ணெய் விலை தான். 40 அமெரிக்க டாலருக்கு விற்ற கச்சா எண்ணெய் இன்று 65$. ஐம்பது சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

இதனால் பெட்ரோல் விநியோக பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவை தான் இன்று இறக்கத்திற்கும் முக்கிய காரணமாக அமைந்தன.

ஏற்கனவே டாலர் வலுவாக இருந்ததால் ரூபாய் பெரிய அளவில் முன்னேற்றம் காணாமல் இருந்து வந்தது.

தற்போது எண்ணையும் கூட சேர ரூபாய் மதிப்பு 63க்கும் கீழே வந்துள்ளது.

இப்படி கொஞ்சம் எதிர்மறை சமாச்சாரங்கள் உலவுவதால் சந்தை தம்மை கீழே இறக்கியுள்ளது.

ஆனாலும் சந்தையின் தற்போதைய நிலை Oversold என்றே அழைக்கப்படுகிறது. அதனால் வாங்கும் வாய்ப்பாகவே கருதலாம்.

இந்த நிலையிலும் வங்கி பங்குகளின் நிதி அறிக்கைகள் நன்றாக வந்துள்ளது என்பதை கவனிக்க. அதிலும் வாராக்கடன்கள் என்ற பிரிவு குறைந்துள்ளது. இங்கு ஆந்திரா வங்கி முதல் பல குட்டி வங்கிகள் கூட நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

வாராக் கடன் குறைகிறது என்றால் உற்பத்தி பிரிவு நன்றாக செயல்பட ஆரம்பித்துள்ளது என்றும் கருதிக் கொள்ளலாம்.

அதே போல் மாருதியின் வருமானம் 60% அளவு உயர்ந்துள்ளது. இதே போல் பிற ஆட்டோ பங்குகள் நல்ல விதமாகவே செயல்பட ஆரம்பித்துள்ளன.

இந்த நேர்மறைகளை சந்தை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

இன்னும் தாழ்வு சிறிதளவு இருக்கலாம். அல்லது இதே நிலையில் கூட ஒரு மாதம் வரை இருக்கலாம்.

ஆனால் பொருளாதார வளர்ச்சியின் தாக்கங்கள் ஒன்றிரண்டு தெரிய ஆரம்பித்துள்ளது. சில நல்ல பங்குகள் 25 சதவீததிற்கும் மேல் வீழ்ந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் இணங்கண்டு பங்கு முதலீடுகளை அதிகரிப்பது நல்ல விதத்தில் பலனைத் தரும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக