திங்கள், 20 ஏப்ரல், 2015

இந்த வருட அட்சய திருதியில் தங்கம் வாங்கலாமா?

இன்று அட்சய திருதி நாள்.

எமது சிறு வயதில் இப்படியொரு பண்டிகை, நாள் இருக்கிறது என்பதே தெரியாது.

வணிகர்களால் வணிக நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது. தங்கம் மோகத்தில் உள்ள நமது ஊர் பெண்களுக்கும் தங்கம் வாங்குவதற்கான ஒரு சாக்கு போக்கு. அவ்வளவு தான்.

எப்படியோ, அவரவர் நம்பிக்கை இருந்து விட்டு போகட்டும்.இந்த வருட அட்சய திருதியில் தங்கம் வாங்கலாமா என்பதை முதலீட்டு காரனங்களுடன் பார்ப்போம்.


தங்கத்திற்கும் அமெரிக்க டாலரிற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.

அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தால் தங்கம் மதிப்பு குறையும். டாலர் தாழ்ந்தால் தங்கம் கூடும். இப்படியொரு எதிர்மறை தொடர்பு.

தற்போது அமெரிக்க டாலர் ஏற்கனவே வலுவாகவே உள்ளது. இன்னும் சில மாதங்களில் கூடவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை கூட்ட அதிக வாய்ப்புள்ளது. கடந்த கூட்டத்திலே இதனை சூகசமாக தெரிவித்து உள்ளார்கள்.

அமெர்க்க டாலர் முதலீட்டில் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்றால் நிறைய முதலீடுகள் டாலரை நோக்கி ஓடி விடும். இதனால் டாலர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டு டாலர் மதிப்பு உயரும்.

உலக அளவில் தங்கத்தில் உள்ள முதலீடுகள் டாலருக்கு திருப்பி அனுப்பப்படும் போது தங்க மதிப்பு குறையவே வாய்ப்பு உள்ளது.

இது போக, உலக அளவில் பொருளாதாரங்கள் விரைவில் மீளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் முதலீடுகள் பங்குச்சந்தையை நோக்கி திருப்பப்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

கச்சா எண்ணெய் விலைகளும் கடந்த ஒரு மாதத்தில் 10% உயர்ந்துள்ளது. இது தொடரும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

கச்சா எண்ணெய் விலையும் டாலரை போன்று தங்கத்துடன் எதிர்மறை தொடர்பையே கொண்டிருக்கிறது என்பதையும் கவனிக்க.

வெளியில் எதுவும் முதலீடு செய்ய வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் தான் தங்கம் தேவையில் இருக்கும். ஆனால் தற்போது வெளியில் அதிக முதலீட்டு வாய்ப்புகள் தான் உள்ளன.

இதனால் தங்கத்தை முதலீடாக கருதுபவர்களுக்கு தற்போது தங்கம் வாங்கும் சூழ்நிலை இல்லை என்றே கருதலாம். வங்கி இருப்புத் தொகை வட்டியை விட குறைவான ரிடர்ன் கிடைக்கும் சாத்தியங்களே அதிகமாக உள்ளது.

அதிலும் தங்க நகைகளை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் தங்கத்திற்கு வட்டிக் கொடுக்கும் திட்டத்தில் நகைகள் இடம் பெற வாய்ப்பு குறைவே.

அதனால் வாங்கித் தான் தீர வேண்டும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் மிகக் குறைவாக ஹால்மார்க் முத்திரைகளுடன் கூடிய நாணயங்களை வாங்குவது சிறந்தது.

தொடர்புடைய பதிவுகள்:
தங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. அட்சய திருதி வந்தாலே குடும்ப தலைவர்கள் நிலைதான் பாவம்?※

    இது வணிகர்களின் தந்திரம் என்றால் நம்ப மறுக்கின்றனர்!!!!!

    தங்கம் வாங்கினால் தான் வளம் பெறுமாம்........

    பதிலளிநீக்கு