திங்கள், 20 ஏப்ரல், 2015

வளர்ச்சியால் மறுக்கப்படும் விவசாயம்

இன்றைய காலை செய்திகள் படிக்கவே வருத்தமாக இருந்தது.


தினமலரில் பார்த்தால் தினமும் 44 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு செய்தி.

அடுத்து, பிசினஸ் ஸ்டாண்டர்ட் படித்தால் விவசாயம் சார்ந்த நிலப்பரப்பு கடந்த முப்பது வருடத்தில் 15% குறைந்துள்ளதாக தெரிகிறது.

இறுதியாக இணையத்தில் லைவ் செய்திகளை படித்தால் அரசு நிலத்தை பிடுங்கும் சட்டத்தை நாடாளுமன்ற கூட்டுத் தொடரிலாவது நிறைவேற்றி தீர வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது.

மூன்றும் ஒன்றுகொன்று தொடர்புடைய செய்திகள்.நாமும் ஒரு ஆக்டிவான முதலீட்டாளன் தான். லாபம் என்று பார்த்தால் நிலத்தை பிடுங்கும் சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் தான் நினைப்பேன்..

இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நல்ல பயன் பெறும். அது சார்ந்த பங்குகளில் முதலீடு செய்தால் கொழுத்த லாபத்தை பெறலாம்.

அதே நேரத்தில் இந்த லாபம் விவசாயிகளிடம் பிடுங்கிய உரிமைகளிலிருந்து தான் வருகிறது என்றால் யோசிக்கவே தோன்றுகிறது.

ஊரில் இருக்கும் தந்தை இன்னும் விவசாயம் செய்கிறார். இந்த பருவத்தில் எவ்வளவு லாபம் வந்தது என்று கேட்டால் வந்ததும் சென்றதும் சரியாக இருந்தது என்று தான் சொல்கிறார்.

அதையும் தாண்டி பல விவசாயிகள் விவசாயத்தை தொடர்கிறார்கள் என்றால் மற்ற எல்லா தொழில்களையும் விட விவசாயத்தில் கொண்ட பற்றே என்று சொல்ல வேண்டும்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை.

என்ற குறளில் எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. என்று சொல்வார் வள்ளுவர். இது சொல்லாடலுக்காக மட்டும் சொல்லியதில்லை என்று நன்கு தெரிகிறது.

இன்று மோடி பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் செல்லும் நாடுகளை பார்த்தால் வானளாவிய கட்டிடம் கொண்ட பெரிய நாடுகள். அங்கு சென்று முதலீடுகளை திரட்டுகிறார். அதை மாதிரியே நாமும் மாற வேண்டும் என்று நினைக்கிறார்.

நல்லது தான்.

அதே வேளை அவர் பக்கத்தில் இருக்கும் தாய்லாந்து நாட்டிற்கும் சென்று பார்ப்பது நல்லது.

தாய்லாந்து என்றால் பாங்காக் நகர் மட்டுமல்ல. அதற்கு வெளியே உள்ள விவசாய பகுதிகளையும் பார்க்கலாம்.கிட்டத்தட்ட நமது நாட்டை ஒத்த விவசாய கலாசாரத்தைக் கொண்ட நாடு. அரிசி உற்பத்தியில் நமக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நாடு. ஆனால் நம்மை விட விவசாய பொருட்களை நல்ல விதமாக மார்கெட்டிங் செய்யும் நாடு.

வெளியே எங்கு பார்த்தாலும் தூர்வாரப்பட்ட குளங்கள், ஆறுகள், சிறிய ஓடைகள் சொட்டு நீர் பாசனம். அதில் பயன் பெறும் பாசனப்பகுதிகள். இப்படி விவசாயத்திற்கு அரசு செய்யும் உதவிகள் மதிப்பு மிக்கவை.

தம்மிடம் ஏற்கனவே இருக்கும் விவசாய பொருளாதரத்தில் மேலே வரும் நாடு என்றும் சொல்லலாம்.

ஆனால் இங்கு தற்கொலைகள், பிடுங்கப்படும் நிலங்கள் என்று சோகக்கதைகள் தொடரும் படலமாகவே உள்ளது. மோடி ஆட்சிக்கு வந்து ஒன்று கூட விவசாயிகளுக்காக செய்ததாக தெரியவில்லை.

ஹைதராபாத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நாயுடுவிற்கு விவசாயிகள் நிலை புரியவில்லை. அதற்கு பத்து வருடம் ஆட்சியில் இல்லாத வனவாசத்தை அனுபவித்தார் என்பதை மோடியும் உணர வேண்டும்.

குறுகிய காலத்தில் வேகமான வளர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக வாழ்வாதாரத்தை சிதைத்து விடாதீர்கள்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக