திங்கள், 27 ஏப்ரல், 2015

விஜய் மல்லையாவின் விளையாட்டு சாம்ராஜ்யம் சரிந்த கதை - 1

இன்று விஜய் மல்லையா தனது சொந்த நிறுவனமான United Spirit நிர்வாக குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


அதற்கு United Spirit நிறுவனத்தின் நிதியை வேறு வழிகளில் திருப்பி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதனால் பங்குதாரர்களுடன் ஒப்புதலுடன் அவரை முற்றிலுமாக நீக்க முயற்சிகள் தொடர்கின்றன.

ஒரு நிறுவனத்தை எப்படி விரிவாக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த மல்லையா தற்போது ஒரு வியாபரத்தை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கும் உதாரணமாக வருகிறார்.

கொஞ்சம் United Spirit நிறுவன வரலாற்றை பின்னோக்கி பார்ப்போம். சுவராஸ்யமான வரலாறு தான். நிறைய படிப்பினைகள் தரும்.

விட்டல் மல்லையாவுடன் விஜய் மல்லையா 

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது நம்ம ஊர் லோக்கல் மது அவர்களுக்கு பிடிக்காது. ஆனால் மது இல்லாமல் அவர்களுக்கு இருக்க முடியாது.

அதனால் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார்கள். அது பெரிய அளவில் இருந்ததால் மது இறக்குமதி செய்வதற்கென்றே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.

அந்த நிறுவனத்தின் பெயர் McDowell. இந்த கம்பெனியின் வேலையே வெளியில் இருந்து மதுவை இறக்குமதி செய்து இங்கே சப்ளை செய்வது தான்.

வசதியாக இருக்கட்டும் என்று சென்னை துறைமுகத்திற்கு பக்கத்தில் நிறுவனத்தை வைத்துக் கொண்டார்கள். இதனால் கப்பலில் இறங்கியதும் கால தாமதம் இல்லாமல் குளிர்ச்சியாகவே நிறுவனத்தை அடைய வசதியாக இருந்தது.

அதன் பிறகு நமக்கு சுதந்திரம் அடைந்த பிறகு 1951க்கு இந்தியர் ஒருவருக்கு விற்று விட்டார்கள்.

அவர் தான் விஜய் மல்லையாவின் அப்பா விட்டல் மல்லையா.

அதனால் Kingfisher நிறுவனம் சுதந்திர காலத்தோடு இணைந்த வரலாற்று தொடர்புடையது என்றும் சொல்லலாம்.

அது வரை வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட மது வகைகளை விட்டல் மல்லையா இனி சொந்த நாட்டில் உற்பத்தி செய்யலாம் என்று நினைத்து கேரளாவில் ஆலையை ஆரம்பித்தார். அதனை பீகார் என்று வட இந்தியாவிற்கும் விரிவாக்கம் செய்தார்.

முதலில் முக்கிய வேதியியல் கலவைகளை மட்டும் வெளிநாட்டில் பெற்று வந்தார். அதன் பிறகு அதனையும் உள்நாட்டிலே உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டார். இதனால் வளர்ச்சி நன்றாகவே இருந்தது.

குறிப்பாக இந்த துறையில் அவ்வளவு போட்டி இல்லாததால் நிறுவனமும் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்தது.



குறைந்த கூலி, மலிவான மூலப் பொருட்கள், அதிக விலையில் விற்பனை என்று அதிக அளவு லாப மார்ஜினிலே நிறுவனம் சென்றது.

கிட்டத்தட்ட 25 முதல் 35 சதவீத மார்ஜின் லாபம் அவர்களால் பெற முடிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏன் இன்னமும் இதே அளவு லாப சதவீதம் அவர்களுக்கு கிடைக்கிறது என்பதும் உண்மையே. அதனால் தான் Kingfisherக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்பட்ட பிறகும் United Spirit நிறுவனத்தை அது பெரிதளவில் பாதிக்கவில்லை.

அதன் பிறகு 70களின் இறுதியில் நிறுவனம் விட்டலின் ஓய்வால் மகன் விஜய் மல்லையாவின் கைக்கு வந்து சேர்ந்தது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆரம்ப கட்டத்தில் விஜய் மல்லையா இந்த அளவு விளையாட்டு பிள்ளையாக இருக்கவில்லை என்பது தான். எப்படி என்றால் IIMல் அவரது திறன் பாடமாக எடுக்கும் அளவு இருந்தது.

அடுத்த பாகத்தில் தொடர்கிறது..

விஜய் மல்லையாவின் விளையாட்டு சாம்ராஜ்யம் சரிந்த கதை - 2

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக