ஞாயிறு, 28 ஜூன், 2015

ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன? -2

இந்த சிறிய தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படித்த பிறகு தொடரலாம்.
ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன?

இப்படி ஒரு கட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விலை போகாமல் அப்படியே தொழிற்சாலைகளில் முடங்கின.


அடுத்து இந்த காலக்கட்டத்தில் நிறுவனங்களின் மாயை போன்ற வளர்ச்சி காரணமாக அமெரிக்க பங்குச்சந்தை கணிசமாக உயர்ந்து கொண்டே சென்றது. அதனால் இன்னும் உயரும் உயரும் என்ற நம்பிக்கையில் பலர் குறுகிய காலத்தில் பணக்காரனாகும் திட்டத்தை செயல்படுத்தினர்.அதற்கு வாய்ப்பாக அமைந்தது யூக வணிகம். அப்பொழுது தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.  

அதாவது ஒரு பங்கை வாங்க வேண்டும் என்றால் பங்கிற்கான முழு பணத்தையும் செலுத்த வேண்டிய தேவையில்லை. 5% தொகையை மட்டும் செலுத்தினால் போதும். மீதி தேவையை புரோக்கர்கள் வங்கிகளிடம் கடனாக பெற்று தருவார்கள். வங்கிகள் அந்த பணத்தை மக்களிடம் டெபாசிட்டாக வாங்கியிருந்தன.

இதனால் பலரும் 5% தொகையை மட்டும் செலுத்தி விட்டு மீதியை கடனாக பெற்று பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தனர்.

ஆனால் நிறுவனங்களின் தயாரிப்புகள் ஒரு கட்டத்தில் முற்றிலுமாக முடங்கி போக, பங்குச்சந்தை கணிசமாக சரிந்தது. அப்பொழுது தரகர்கள்  முதலீட்டாளர்களிடம் தாங்கள் கொடுத்த கடன் தொகையை கேட்ட போது அவர்களிடம் திருப்பிக் கொடுக்க காசு இல்லை.

பலரும் பங்கினை விற்று கிடைக்கும் லாபத்தில் கடனை திருப்பிக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் முதலீடு செய்து இருந்தனர். அதனால் பங்கினை விற்று கடனை ஈடு கட்டலாம் என்ற எண்ணத்தில் பலரும் பங்குகளை விற்க முயல, பங்குச்சந்தை 50%க்கும் கீழ் சரிந்தது.

வாறன் பப்பட் சொல்லிய "Derivatives are financial weapons of mass destruction" என்ற மேற்கோள் இந்த இடத்தில் அதி முக்கியத்துவம் பெறுகிறது.

வங்கிகள் தாங்கள் கடன் கொடுத்த புரோக்கர்களிடம் பணத்தைக் கேட்க அவர்களிடம் பணம் இல்லை. இதனால் டெபாசிட் செய்த மக்கள் தங்கள் பணத்தை ஒரே நாளில் எடுக்க முற்பட வங்கிகளிளிடம் கொடுக்க காசு இல்லை. இந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டன அல்லது திவாலாகி விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இறுதியாக இயற்கையும் சேர்ந்து அமெரிக்காவிற்கு பேரழிவை கொடுத்தது. அந்த காலக்கட்டத்தில் விவசாயம் அமெரிக்காவில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் புழுதி புயல் வந்து அமெரிக்காவின் மூன்றில் ஒரு பகுதியை தாக்கியது. இதனால் விவசாய நிலங்களில் பல அடி உயரத்திற்கு புழுதி நிறைந்து பயிர்கள் வீணாகின. Interstellar என்ற ஆங்கில படத்தை பார்த்து இருந்தால் அமெரிக்க  புழுதி புயல் தாக்கத்தை உணர்ந்து இருக்கலாம்.

புழுதியை மாற்றுவதற்கும் பொருளாதார சூழ்நிலை காரணமாக விவசாயிகளிடம் வழி இல்லை. பலர் நிலத்தை விற்று விட்டு அமெரிக்காவின் மேற்கு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் நில விலைகள் தாறுமாறாக இறங்கின.

இப்படி இயற்கை, உலகப்போர், யூக வணிகம், செல்வம் பகிரப்படாததல் என்று பல முக்கிய காரணங்கள் சேர்ந்து அமெரிக்காவை முடக்கி போட்டன. 

இந்த சீர்குலைவின் தாக்கம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீடித்தது.

முதலாளித்துவ பொருளாதாரம் கொண்ட அமெரிக்கா அந்த பத்து ஆண்டுகளில் பகுதி கம்யுனிசத்தை பின்பற்றியது என்று சொல்லலாம். பல இடங்களில் வரிசைகளில் இருந்து மக்கள் பசி தீர்க்க சூப் வாங்கி குடிக்க நேரிட்டது.

அந்த சமயத்தில் அமெரிக்காவை தாண்டி பார்த்தால் ஐரோப்பியர்கள் தான் உலக பொருளாதரத்தை முன் கொண்டு செல்ல முடியும். ஆனால் ஐரோப்ப்பா உலக போரில் அடிபட்டுக் கிடந்தது. மற்ற ஆப்ரிக்க, ஆசியா நாடுகள் ஐரோப்பியர்களின் காலனி நாடுகளாகவே இருந்தன. இதனால் அவர்களாலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை.

இப்படி பல ஓத்திர்வுகள் ஒன்று சேர்ந்து உலகமே ஒரு பொருளாதார சீர்குலைவால் சிக்கி இருந்தது.

இதனால் தான் அமெரிக்கா இரண்டாவது உலகப்போர் நடந்த போது கடன் கூட கொடுக்காமல் முற்றிலுமாக வேடிக்கை பார்த்தது.தற்போது சீனாவை கருத்தில் கொண்டு ராஜன் தனது கருத்தை சொல்லி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. சீனாவும் அமெரிக்கா செய்த அதே ஏற்றுமதி பொருளாதரத்தை தான் பின்பற்றி வருகிறது. தற்போது அவர்கள் ஏற்றுமதி பெரிய அளவில் தடைபட்டுள்ளது. இதனால் பெரிதாக வளர்ச்சியை அவர்களால் பார்க்க முடியவில்லை.

ஆனால் வளர்ச்சி என்ற ஒரே காரணத்திற்காக கடந்த ஏழு மாதங்களில் நான்காவது முறையாக வட்டியைக் குறைத்துள்ளனர். அதாவது வங்கிகள் தாரளமாக கடன் கொடுக்கலாம். கடன் கொடுத்து மக்களை வாங்க வைக்க முனைந்துள்ளனர். ஆனால் மக்களின் வாங்கும் சக்தி வளர்ச்சி பெறாமல் வெறும் கடன் கொடுத்து வாங்க வைப்பது ஒரு பெரிய குமிழை தோற்றுவித்து உடைக்க செய்து விடும்.

மற்றபடி, கிரீஸ் நாடும் அவரது கருத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த குட்டி நாடால் அவ்வளவு பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.

பார்க்க:
1920களில் இருந்தது போல் வளம் இன்னும் சரியாக பகிரப்படவில்லை என்பது உண்மையே. ஒரு செய்தியில் முதல் 10% பணக்காரர்கள் 90% உலக வளத்தை சொந்தமாக வைத்துக் கொண்டுள்ளதாக ஒரு நியாபகம்.

இவை எல்லாம் 1920களுடன் இருக்கும் ஒற்றுமைகள்.

ஆனால் தற்போதைக்கு பெரிதாக உலகப்போர் என்று எதுவுமில்லை, 2008ல் தான் உலக பொருளாதாரம் அடி வாங்கி ஒரு சமநிலையை அடைந்து இருக்கிறது. அதனால் குமிழ்கள் ஏற்கனவே ஓரளவு உடைக்கப்பட்டு உள்ளன. கிரீஸ் நாடு ஏற்படுத்தும் பாதிப்பை சீர் செய்ய ஐரோப்பிய நாடுகள் தயாராகி விட்டன.

இன்று உலக பொருளாதாரம் அமெரிக்கா, ஐரோப்பா என்று மட்டுமல்லாமல் ஆசியா நாடுகளிடம் கையிலும் உள்ளது. அதனால் ஒரு நாட்டில் ஏற்படும் பாதிப்பை மற்றொரு நாடு சமநிலை செய்யும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

அதனால் வெகு விரைவில் 1930ல் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே கருதலாம். ஆனால் ஒரு எச்சரிக்கையாக கருதிக் கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக