புதன், 24 ஜூன், 2015

வரவுக்கு மேல் செலவால் கிரீஸ் பொருளாதாரம் வீழ்ந்த கதை

தற்போது பங்குச்சந்தைகளில் முக்கிய பேச்சுக்களில் ஒன்றாக இருப்பது கிரீஸ் நாட்டிற்கு கடன் கொடுத்த நாடுகள் நடத்தும் பஞ்சாயத்து தான்.


நன்றாக சென்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் எப்படி திடீர் என்று படு வீழ்ச்சி அடைந்தது என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.



கிரீஸ் நாட்டைப் பொறுத்த வரை முக்கியமான பூகோள கேந்திரத்தில் இருக்கிறது. மேற்கு ஐரோப்பாவையும், கிழக்கு ஐரோப்பாவையும் இணைக்கும் ஒரு முக்கிய இடத்தில இருப்பதால் தற்போதைய சிங்கப்பூரை போன்று ஒரு நல்ல நிலையிலே இருந்து வந்தது.

இதனால் கப்பல் வணிகம் மூலம் கிடைக்கும் வருமானத்த்தில் கிரீஸ் துறைமுகங்கள் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகித்து வந்தன.

அடிப்படையில் கிறிஸ்தவ மதம் சார்ந்த வரலாறு கிரீஸ் இல்லாமல் இல்லை. இது போக அழகான கடற்கரையோரங்களும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா மூலம் அதிக அளவு வருமானம் கொடுத்து வந்தது.

இவ்வாறு சுற்றுலாவும், கப்பல் வணிகமும் கிரீஸ் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகித்தது.

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்தவர்கள் செய்த தவறுகளால் இன்று ஆப்ரிக்கா நாடுகளை போன்றதொரு வீழ்ச்சியை சந்திக்க இருக்கிறது.

ஐரோப்பியன் ஒன்றியத்தில் சேர வேண்டும் என்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் அவர்கள் குறிப்பிட்ட நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய விதிமுறை. கிரீஸ் ஆட்சியாளர்கள் ஐரோப்பியன் ஒன்றியத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் சில பொய்யான நிதி அறிக்கைகளை காட்டி விட்டனர்.

இது கிட்டத்தட்ட சத்யம் நிறுவன தலைவர் ராஜூ செய்த அதே மோசடி போல் தான். இங்கு தனிமனிதர் செய்தார். ஆனால் அங்கு அரசே செய்தது.

பார்க்க:  இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்த சத்யம் ஊழல்
பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கிறது என்று பொய் நிலையை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றால் கடன் வாங்க வேண்டி இருந்தது. அதற்காக ரகசிய முறையில் சில தனிப்பட்ட நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டியில் கடன் வாங்கினர்.

அதோடு அல்லாமல் நாட்டின் பொருளாதார நிலையை பற்றி சற்றும் யோசிக்காமல் 2004ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தினர். அதற்கு மட்டும் 30 பில்லியன் யூரோ செலவு. அதுவும் அதிக வட்டியில் கடன் வாங்கி நடத்தினர்.



இறுதியாக 2008ல் வந்த பொருளாதார தேக்கம் கிரீஸ் நாட்டின் சுற்றுலா வருமானத்தையும், கப்பல் வருமானத்தையும் கணிசமாக பாதித்தது. இதனால் வருமான குறைவு ஏற்பட்டது.ஆனால் செலவோ அதிகரித்தது.

அடிப்படையில் பார்த்தால் கிரீஸ் நாட்டின் அரசு மேற்கத்திய வழிமுறையை பின்பற்றும் மக்களாட்சி அரசு. ஆனால் மக்களோ தீவிர பொதுவுடைமை வாதிகள். சாக்ரடீஸ் முதல் பல பொதுவுடைமை சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தியவர்களே கிரீஸ் நாட்டை சார்ந்தவர்கள் தான்.

இதனால் ஓட்டிற்காக மக்களுக்கு பல சலுகைகளை மக்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை.

இதன் காரணமாக தேவைக்கு அதிகமாக அரசு வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டனர். அதில் பலர் சும்மாகவே இருந்தனர். இது போக பென்சன், போனஸ் என்று பல சலுகைகள் வழங்கப்பட்டன.

இதனால் அரசுக்கு செலவு அதிகரித்தது. ஆனால் வரவு அந்த வேகத்திற்கு அதிகரிக்கவில்லை.

2003 முதல் ஆறு ஆண்டுகள் செலவு 85% அளவு அதிகரித்தது. ஆனால் வரவோ 31% மட்டுமே அதிகரித்தது.

இப்படி பலவித காரணங்களால் நிதி பற்றாக்குறை கணிசமாக அதிகரித்து அதிக அளவில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையைக் கொடுத்தது.

உச்ச கட்டத்தில் நிதி பற்றாக்குறை 15% அளவு அதிகரித்தது. இந்த சூழ்நிலையில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை 4% மட்டும் தான் என்பதையும் நினைவில் கொள்க.

தற்போதைக்கு அரசு மொத்த வருமானத்தில் 50% தொகையை அரசு நிர்வாக செலவுகளுக்கே செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. கடன் அளவோ GDPயில் 185% அளவை அடைந்துள்ளது. இதனால் பெருமளவு வருமானத்தை வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை.

இப்படி பல சூழ்நிலைகளும் சேர்ந்து கிரீஸ் நாட்டை அங்கும் இங்கும் நகர முடியாமல் ஆக்கி உள்ளது.

உலக வங்கி, ஐரோப்பியன் வங்கி போன்றவை கிரீஸ் நாட்டிற்கு பெருமளவு கடன் கொடுத்துள்ளன. அதனை எப்படி வசூலிப்பது என்று முடிவு எடுக்காமல் குழப்ப நிலையில் உள்ளன.

ஆனால் கிரீஸோ சமாளிக்க முடியாமல் இன்னும் கடன் கொடுங்கள் என்று கேட்கின்றார்கள்.

கிரீஸ் ஐரோப்பியன் ஒன்றியத்தில் இருப்பதால் அப்படியே விட்டு முடியாத சூழ்நிலை. கிரீஸில் விழும் ஒவ்வொரு அடியும் யூரோவையும் சேர்த்து பாதிக்கிறது.



அதனால் அவர்கள் பல நிபந்தனைகளோடு கடன் கொடுக்க முன் வந்துள்ளார்கள்.

அதில் ஒன்று பென்சன் தொகையை குறைப்பது, போனசை குறைப்பது, அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைப்பது என்று செலவீனங்களை குறைக்க சொல்லி உள்ளர்கள். அதே நேரத்தில் புதிய வரிகள் விதித்து வருமானத்தையும் பெருக்க சொல்லி உள்ளார்கள்.

ஆனால் கம்யூனிச சித்தாந்தம் கொண்ட மக்கள் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து ரோட்டில் வந்து போராட துவங்கி விட்டனர்.

மொத்தத்தில் கிரீஸ் அரசு இருவருக்கும் இடையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றது.

பல நாடுகளுக்கு கிரீஸ் வரலாறு ஒரு பெரிய பாடம் தான்..

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக