புதன், 3 ஜூன், 2015

ஏன் அதானி பங்குகள் ஒரே நாளில் 80% சரிந்தது?

நேற்று மட்டும் அதானி பங்குகள் ஒரே நாளில் 80% சரிந்தன. 574 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்கு 120 ரூபாயில் நாள் முடிவில் கீழ் இறங்கியது.


இதற்கு அதானி குழுமம் பல நிறுவனங்களாக மாற்றி அமைக்கப்பட்டது காரணமாக அமைந்தது.அதானி குழுமத்தின் பல தொழில்கள் ADANI ENTERPRISES என்ற நிறுவனத்தின் பெயராலே பங்குச்சந்தையில் இயங்கி வருகிறது.

இந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் என்பது சுரங்கம், மின்சார உற்பத்தி, துறைமுக கட்டுமானம், மின்சார பரிமாற்றம் என்று பல தொழில்களை உள்ளடக்கியதாகும். ஜூன் 2 அன்று இந்த நிறுவனத்தின் பங்கு 638 ரூபாயில் முடிவடைந்தது.

ஆனால் இந்த தொழில்கள் ஒரு தெளிவான பிரிவு அமைப்பின் கீழ் இயங்காததால் தங்களது மொத்த குழுமத்தையும் RESTRUCTURING செய்ய முனைந்தார்கள். இதனை Demerger என்று பங்குச்சந்தையில் அழைப்பார்கள்.

அவர்களது முடிவின் படி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முக்கியமான சில பிரிவுகள் Adani Port and Special Economic Zone(APSEZ), Adani Power (APL), Adani Transmission (ATL) என்று வெவ்வேறு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது..

இதில் APSEZ நிறுவனம் துறைமுக கட்டுமான பணிகளையும், APL நிறுவனம் மின்சார உற்பத்தியையும், ATL மின்சாரத்தைக் கடத்தும் பணியையும் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

அப்படி என்றால் மிஞ்சி இருப்பது சுரங்கப் பணி. அதனை மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் செய்யும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு 100 அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளுக்கும் 141 APSEZ பங்குகளும், 186 APL பங்குகளும், 100 ATL பங்குகளும் கிடைக்கும்.

இப்படி எக்ஸ்ட்ராவாக பங்குகள் கிடைத்த பிறகு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு எப்படி கணக்கிடுவது என்பதில் தான் ஒரு பெரிய குழப்பம் ஏற்படும்.

இந்த குழப்பம் சில சீரியஸ் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து உள்ளது என்பது வியப்பானது. அதாவது ஒரே நாளில் பலரது நஷ்டத்திற்கு மூலமாக அமைந்தது.

பிரித்த பிறகு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணக்கிடுவதை மூன்று பிள்ளைகள் இருக்கும் ஒரு வீட்டில் பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்த பிறகு தகப்பனிடம் இருக்கும் மீதி இருக்கும் சொற்ப சொத்துக்கு ஒப்பாக கருதிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு,

ஒருவர் 100 அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளை வைத்து இருக்கிறார் என்று கருதிக் கொள்வோம். அப்படி என்றால் ஜூன் 2 அன்று அவரது கையில் 638*100 = 63800 ரூபாய் அளவு பங்குகள் கையில் இருந்து இருக்கும்.

Demerger திட்டத்தின் பின் நேற்று APSEZ பங்கு 309 ரூபாய்க்கும், APL பங்கு 36 ரூபாய்க்கும் வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. ATL பங்கு பங்குச்சந்தையில் இல்லாவிட்டாலும் அந்த பங்கின் மதிப்பு 10 ரூபாய் என்று அறியப்படுகிறது.

அப்படி என்றால் 100 பங்குகளை வைத்து இருப்பவர் 141 APSEZ பங்குகளையும், 186 APSEZ பங்குகளையும், 100 ATL பங்குகளையும் எக்ஸ்ட்ராவாக பெற்று இருப்பார்.

இந்த எக்ஸ்ட்ராவாக வந்த தொகையின் மொத்த மதிப்பை பார்த்தால்,
141*309 = 43569 ரூபாய், 186*36 = 6696 ரூபாய், 100*10 = 1000 ரூபாய்
மொத்த எக்ஸ்ட்ரா = 43569 + 6696 +  1000 = 51265 ரூபாய்.

இப்படி எக்ஸ்ட்ராவாக கிடைத்த தொகையை ஜூன் 2 அன்று அவர் கையில் இருந்த 63800 ரூபாயிலிருந்து கழித்து பார்த்தால்,
63800 - 51265 = 12535 ரூபாய்.

இந்த 12535 ரூபாய் தான் தற்போது 100 அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் மொத்த மதிப்பாகும்.

அப்படி என்றால், ஒரு அதானி எண்டர்பிரைசஸ் பங்கின் மதிப்பு 12535/100 = 125 ரூபாய் அளவு வருகிறது.தற்போது ஒரு அதானி எண்டர்பிரைசஸ் பங்கும் 120 ரூபாய் அளவு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அவ்வளவு வித்தியாசம் இல்லை...கணக்கு சரியாக பொருந்துகிறது.

எங்கு பிரச்சினை வந்தது என்றால்,

ஜூன் 2ல் பங்குகளை வைத்து இருப்பவர்களுக்கு இந்த Demerger திட்டம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜூன் 4 முதல் இந்த திட்டம் செயல்முறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அப்படி என்றால் Demerger திட்டம் பற்றி தெரியாமல் ஜூன் 3ல் 576 ரூபாய்க்கு வாங்கியவர்கள் கதி தான் அம்போவாக போனது.

இதற்கு இருவர் மீது குறை சொல்லலாம்.

முதலாவது,
செபி நிர்வாகம் Demerger திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு பங்கு விலையை முறைப்படுத்தி விட்டு வர்த்தகத்தை ஆரம்பித்து இருக்கலாம். இதனை அவர்கள் செய்யவில்லை.

இரண்டாவது,
அதானி குழுமம் Demerger திட்டத்திற்கு போதுமான கால அவகாசம் கொடுத்து இருக்கலாம்.

இரண்டும் சேர்ந்து ஜூன் 3ல் பங்குகளை வாங்கியவர்கள் நிலையை கேள்விக்குரியதாக்கி விட்டது.

தற்போது 576 ரூபாயில் ஜூன் 3ல் பங்கினை வாங்கியவர் இன்னும் அந்த நிலையை அடைய பல வருடங்கள் காத்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை எப்படி சரி செய்வார்கள் என்றும் தெரியவில்லை.

நமது வாசகர்கள் இந்த பிரச்சினையில் மாட்டியிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

எமது அடுத்த போர்ட்போலியோ  ஜூன் 13 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணைப்பில் மேலும் விவரங்களை பெறலாம்.« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக