திங்கள், 15 ஜூன், 2015

பங்குச்சந்தையில் நம்பிக்கை தரும் முக்கிய நல்ல செய்திகள்

கடந்த ஒரு மாதமாக பார்த்தால் பங்குச்சந்தை சில விடயங்களை மட்டும் மையமாக வைத்து எதிர்மறையில் இயங்கி வருகிறது.




அதில் முக்கியமான இரண்டு விடயங்கள்.

முதல் ஒன்று,

கடந்த காலாண்டு நிதி அறிக்கைகள் நன்றாக இல்லை. அதனால் இன்னும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் இன்னும் தெரிய வரவில்லையே என்பது ஒரு கவலை.

இன்னொன்று,

ரிசர்வ் வங்கி இந்த மாதம் வட்டிக் குறைப்பு செய்த போது பொடி வைத்து ஒரு குறிப்பும் சொல்லியது. அதாவது பருவமழை குறையலாம் என்றும், அதனால் பணவீக்கம் கூடலாம், இனி வட்டிக் குறைப்பு எளிதில் இல்லை என்று அர்த்தம் கொள்ளுமாறு சில குறிப்புகளை சொல்லியது.

அதனால் சந்தை அதிக அளவில் பயந்து 27,000 புள்ளிகளுக்கும் கீழே வந்து நின்றது.

நேற்று வந்த சில செய்திகள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்வாகவே இருக்கும்.

ஒன்று,

ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த அளவிற்கு பருவமழை ஜூன் மாதத்தில் மோசமில்லை என்று தரவுகள் வந்துள்ளன. ஜூனில் இது வரை மழை சராசரிக்கும் கொஞ்சம் தான் குறைந்துள்ளது. இது பெரிதளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறார்கள்.

இரண்டாவது,

பொதுவாக நிறுவனங்கள் தங்கள் வருமான வரியை மொத்தமாக செலுத்தாமல் ஒவ்வொரு காலான்டிற்கும் செலுத்த வேண்டும். அதன் படி, நேற்று வங்கிகள் முதல் காலாண்டிற்கு செலுத்திய வரி விவரம் வெளிவந்துள்ளது.

அதில் பெரும்பாலான வங்கிகள் கடந்த காலாண்டை விட அதிக அளவு வரி செலுத்தி உள்ளன.

அதிகபட்சமாக கடந்த ஆண்டை விட YES Bank 32% அதிக வரியையும், HDFC Bank 22% அதிக வரியும் செலுத்தி உள்ளன. இதே போல் SBI போன்ற வங்கிகளும் அதிக வரியை செலுத்தியுள்ளன.

அடுத்து தற்போது வெளிவந்துள்ள தொழில்துறை தரவுகள் வளர்ச்சி கண்டுள்ளது. அதே வேளையில் பணவீக்கமும் குறைந்துள்ளது.

இது பங்குச்சந்தை எதிர்பார்த்த அளவு இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் செல்லவில்லை என்பதையே காட்டுகிறது.

வதந்திகளை நம்ப முடியாது.ஆனால் தரவுகளை நம்பலாம்!

அதனால் அவசரப்பட்டு பங்குகளை விற்று விட வேண்டாம். நல்ல பங்குகளை சராசரி செய்து கொள்ளுங்கள்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக