புதன், 17 ஜூன், 2015

5000 ரூபாய் நிரந்தர பென்ஷன் பெற ஒரு அரசு திட்டம்

புதிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பென்சன் திட்டம் "அடல் பென்சன் யோஜனா". இது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பென்சனுக்காக பல திட்டங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பிரிமியம் தொகை அதிகம். அதே நேரத்தில் அரசு சாராத நிறுவனங்கள் என்பதால் நம்புவதும் கடினம்.



இந்த சூழ்நிலையில் அரசின் அடல் பென்சன் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.


இந்த திட்டத்தில் இணைவதற்கான குறைந்த பட்ச வயது 18. அதிகபட்ச வயது 40.

நமது சேமிப்பு உள்ள எந்த வங்கியிலும் இணைந்து கொள்ளலாம். நமது வங்கி கணக்கில் இருந்து தானாகவே மாதந்தோறும் எடுத்துக் கொள்வார்கள்.

இதற்கு ஆதார் அட்டை நகலையும் KYC படிவத்தையும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். உடன் நமது மொபைல் எண் மற்றும் ஈமெயில் முகவரிகளையும் கொடுத்தால் நமது கணக்கு தொடர்பான விவரங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்.

இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு 1000 முதல் 5000 ரூபாய் வரை பென்சன் கிடைக்கும்.

அதற்கான பிரிமியம் தொகை வயது மற்றும் பென்சன் தொகையை பொறுத்து மாறுபடும்.

கீழே உள்ள அட்டவணையில் பிரிமியம் தொடர்பான முழு விவரங்கள் உள்ளது.



உதாரணத்திற்கு 30 வயதுள்ளவர்கள் 30 வருடத்திற்கு 577 ரூபாய் கட்டி வந்தால் 60 வயதிற்கு பிறகு 5000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.

அவர் இறப்பிற்கு பிறகு அவரது வாரிசுக்கு 8.5 லட்ச ரூபாய் வரை கிடைக்கும். இந்த தொகை நாம் தேர்ந்தெடுக்கும் பென்சன் தொகைக்கேற்ப மாறுபடும். கீழே மேலும் சில விவரங்கள் உள்ளன.



இருந்தாலும் இந்த திட்டத்தில் எமது சில எதிர்மறை குறிப்புகள் உள்ளன.

முதலில் இவ்வாறு நாம் செலுத்தும் பிரிமியம் தொகைக்கு வரி விலக்கு எதுவும்  கிடையாது.

அடுத்து, 60 வயதிற்கு முன் இறப்பு ஏற்பட்டால் வாரிசுக்கு கட்டிய தொகை தான் கிடைக்குமே தவிர அதற்கான வட்டி கிடைக்காது.

இறுதியாக இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி பெரிய தொகை கிடையாது. 60 வயதில் 8.5 லட்சம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனை வங்கி இருப்பில் போட்டால் 5000 ரூபாயை விட அதிகம் வட்டி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இப்படி சில எதிர்மறைகள் இருக்கத் தான் செய்கின்றன.

ஆனால் சிறிய அளவில் சேர்த்து அதிக அளவில் பாதுகாப்பான முதலீடு தேடுபவர்கள் அடல் பென்சன் திட்டத்தில் இணையலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. என்ன சார் இன்னும் இந்த திட்டத்தை பற்றி எழுதவில்லையே நியாகபகபடுத்தலாமா என்று நினைத்தேன். நல்ல திட்டம் என்றிறுந்தேன். இதில் உள்ள எதிர்மறை பற்றிய தங்களுடைய கருத்து பிரமாதம். ஒருவர் மாதம் ரூ 577 ஐ RD ல் போட்டால் 30 வருடங்களில் சுமார் 8% வட்டி கிடைத்தால் சுமார் ரூ 865870 கிடைக்கும். 60. வயதுக்குள் இறந்தால் வட்டியுடன் கட்டிய தொகை கிடைக்கும். இந்த பணத்தை post office monthly income scheme ல் போட்டால் வட்டி மட்டும் மாதம் ரூ 5772 கிடைக்கும். பயனாளர் (60 வயதுக்கு பிறகு) இறந்தால் மொத்த பணமும் (865870) வாரிசுதாரர்களுக்கு கிடைக்கும். இதற்கும் இந்த திட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை....... மொத்தத்தில் இது ஒரு வெட்டி யோஜனா.....

    பதிலளிநீக்கு