புதன், 17 ஜூன், 2015

மெர்ஸ் வைரஸால் மெர்சலாகி நிற்கும் கொரியா

பொதுவாக கொரியா என்றாலே வட கொரியா தான் நியாபகம் வரும். அங்கு இருக்கும் சங்கி மங்கி ஆட்சியாளர்கள் பண்ணும் அட்டூழியங்களே இதற்கு முதற்காரணம். பசி, பட்டினி இருந்தாலும் குண்டு தான் முதலில் தயாரிப்பார்கள்.


ஆனால் தென்கொரியா அப்படி இல்லை. "ஹான் நதியின் அதிசயம்" என்று அழைக்கப்படும் நாடு. இந்த ஹான் நதி சியோல் மாநகரின் நடுவில் ஓடி வரும் ஆறு. வளத்திற்கு முக்கிய காரணமான நதி.



அறுபதுகளில் நடந்த கொரியா போரில் 90% தென்கொரியா நிலம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அவர்கள் கையில் எதுவும் கிடையாது. பல உயிர் இழப்புகள் கூட..

அமெரிக்க ராணுவம் சாப்பிட்டு போட்ட சிக்கன் எலும்புகளை வைத்து சூப்பாக்கி சாப்பிட்ட காலம் அது. அதனால் தான் என்னவோ இன்னும் ஒரு பருக்கு சோறையும் வீணாக்க அதிக அளவில் யோசிக்கிறார்கள்.

இப்படி பூஜ்ஜியத்தில் தான் கடந்த நூற்றாண்டை தென்கொரியா ஆரம்பித்தது. ஆனால் இன்று பார்த்தால் வளர்ந்த நாடுகளுக்கு போட்டி போடும் அளவு வளர்ச்சி. மோடியின் ஏற்றுமதி பொருளாதாரம் இவர்களது அடிப்படையான ஒன்று..

நல்ல கட்டமைப்பு வசதிகள், பல மடங்கு தனிமனித வருமான வளர்ச்சி என்று அதன் பாதையை பார்த்தால் நாம் இன்னும் அந்த நிலைய அடைய ஒரு ஐம்பது ஆண்டுகளாவது கட்டாயம் ஆகும்.

அவர்களது LG, Samsung, Hyundai போன்ற நிறுவனங்கள் பரவாத நாடுகளே இன்று இல்லை என்று சொல்லலாம்.

அளவு என்று பார்த்தால் இந்தியாவின் பத்தில் ஒரு பங்கு தான். ஆனால் இந்த நாட்டின் பொருளாதார GDP அளவை பார்த்தால் இந்திய GDPயில் மூன்றில் இரண்டு பங்கு.



ஆனாலும் நம்மவர்கள் மாதிரி ஒரு அமைதியான வாழ்க்கை இருப்பதாக தெரியவில்லை. எப்பொழுதும் இயந்திரமாக சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

ஆசியர்களுக்கே உரித்தான புறணி சொல்லுதல், குசும்பு, அரசியல் என்று சில குணங்களும் இல்லாமல் இல்லை.

இது ஒரு சுவையான சம்பவம்..

LG நிறுவனத்தில் வேலை பார்க்கும் எமது நண்பர் வேலையை முடித்து இந்தியாவிற்கு திரும்பும் போது கொரிய  மேலாளர் இப்படி கூறினார்.

"நீ இங்க கற்றுக்கிட்டத அப்படியே மறந்து விடனும்" என்று கட்டளையிட்டார் . இவரும் வேறு வழியில்லாம கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கி விட்டு வெளியே வந்தார்:).

அதனாலே சில சமயங்களில் இவங்க பண்றத பார்த்தா லூசா என்று கூட தோன்றி இருக்கிறது.

இப்படி பல சுவையான சம்பவங்கள் அதிக அளவு அனுபவப் பூர்வமாகவே இங்கு பார்க்கலாம்.

அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாது. நமக்கு கொரியன் தெரியாது. இதனால் புரியாம நடக்கக் கூடியதை ரசித்து பார்த்தால் இங்க ஜாலியா குப்பை கொட்டலாம். இல்லாவிட்டால் எதோ வேற்று கிரகத்தில் இருப்பது போல் தனிமை அதிகம் வாட்டும்.

ஆனாலும் இவர்களது கடின உழைப்பும், நேரம் தவறாமையும் நமக்கு சுட்டு போட்டாலும் வருமா என்று தெரியவில்லை.

இந்த நிலையில் தான்...
இப்ப மெர்ஸ் என்ற வைரஸால் கொரியாவே முடங்கும் சூழ்நிலை.

சும்மா சவுதி அரேபியாவிற்கு டூர் போன வயதான கிழவர் மெர்ஸ் வைரசை இங்கு கொண்டு வந்து விட்டார்.

மெர்ஸ் ஒட்டகத்து கிட்ட இருந்து வருதாம். அதனால் பன்றி, கோழி, எலி வரிசையில் ஒட்டகமும் இணைந்து உள்ளது. இன்னும் என்னென்ன மிருகங்கள் பாக்கி இருக்குது என்று தெரியவில்லை.

கொண்டு வந்தவர் ஆஸ்பத்திரிக்கு சென்று வைத்தியம் பார்க்க போக, வைத்தியம் பார்த்த டாக்டரை மெர்ஸ் பற்றிக் கொண்டது.

அந்த டாகடர் 1500 பேருக்கு வைத்தியம் பார்க்க...தும்மல் என்று போனவங்களுக்கும் மெர்ஸ் என்று அட்மிட்டாக வேண்டிய சூழ்நிலை..

இப்ப அலுவலகத்தில் மெயில் வருது..தயவு செய்து ஆஸ்பத்திரி பக்கம் போகாதீங்க..அப்படி போனாலும் எங்ககிட்ட சொல்லிக்கிட்டு போங்க என்று அன்பு கட்டளைகள் கொடுக்கிறார்கள்.



இது வரை 23 பேர் இறந்துள்ளார்கள். 200 பேர் அளவு பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

ஆனால் நம்ம ஊரில் ஏதோ ஆயிரக்கணக்கில் பலி என்று பத்திரிக்கைகளில் போட, வீட்டுக்கு போன் பண்ணினால் எப்பவுமே இது தான் பேச்சு..

அப்துல் கலாம் சொல்லியது போல் நெகடிவ் செய்திகளை எழுதியே காசு சம்பாதிக்கும் நம்ம பத்திரிக்கைகள் என்றுமே மாறாது போல..

இந்த சூழ்நிலையில் மக்கள் இங்கேயும் பயந்து வெளியே வர மாட்டுக்காங்க...அதனால் தியேட்டரில் கூட்டம் போச்சு..துணிக்கடைகளில் ஆட்கள் இல்லை..வெளிநாட்டுக்காரங்க டூரும் வர மாட்டுக்காங்க..

முகமூடியுடன் தான் எப்பவும் அலைகிறாங்க..கொரியாவில் கல்யாண தினத்தன்று மணமக்கள் எல்லோர் முன்னால் கமல் ஸ்டைலில் கிஸ் கொடுக்க வேண்டும்.  அதைப் பார்ப்பதற்கே கண் கோடி வேண்டும். அதனையும் நிறுத்தி வைத்து உள்ளார்கள்.

இப்படி மொத்த பொருளாதாரமும் பயத்தால் உறைந்து விடும் சூழ்நிலை..இந்த காலாண்டில் பல நிறுவனங்கள் விற்பனை எதிர்மறையில் சென்றுள்ளது.

இதைப் பார்த்து பயந்து போன அரசு மிக வேகமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது..

அதில் ஒன்று, இப்ப கொரியாவுக்கு டூர் வந்தவங்க மெர்ஸ் வந்து மெர்சலா போனால்,

அரசே எல்லா மருத்துவ செலவுகளையும் பார்த்துக்குமாம்..இது போக ஒன்றரை லட்ச ரூபாயும் கைச்செலவுக்கு கொடுப்பாங்களாம்.

ஒரு கட்டத்தில் மேலே சென்று விட்டால் நாற்பத்து ஐந்து லட்ச ரூபாய் குடும்பத்துக்கு கொடுப்பாங்களாம்...இப்படி பவர் ஸ்டார் படத்துக்கு ஆள் சேர்க்க மாதிரி அழைப்பு கொடுத்து இருக்காங்க..

நல்ல இன்சூரன்ஸ் பாலிசியா இருக்குது.....தில் இருந்தா முயற்சி பண்ணுங்க!

ரொம்ப நாளைக்கு பிறகு பொருளாதாரம் தவிர்த்து விருப்பத்தோடு எழுதிய கட்டுரை...அதனால் நீளமாகி விட்டது..பொறுத்து படித்ததற்கு நன்றி!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக