செவ்வாய், 23 ஜூன், 2015

எதிர்மறை விடயங்கள் சாதகமாவதால் உற்சாகத்தில் சந்தை

கடந்த ஏழு நாட்களாக சந்தை உயர்ந்து கொண்டே உள்ளது. தற்போது சந்தை தாழ்வில் இருந்து 1500 புள்ளிகள் வரை உயர்ந்து 27,800க்கு அருகில் வந்து நிற்கிறது.





இதற்கு முன்னால் அப்படி நடக்குமோ இப்படி நடக்குமோ என்று சில எதிர்மறை கணிப்புகள் இருந்தன. அவற்றின் காரணமாக சந்தை கரடியின் பிடியில் சிக்கி இருந்தது.

ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தாலும் மழை குறைவு பயத்தை தருகிறது என்று சொல்லியதால் ஆள் ஆளுக்கு எதிரமறையாகவே சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் தற்போது வரை இந்தியா முழுவதும் 80 சதவீத விவசாய நிலங்களுக்கு தேவையான அளவு மழை பெய்து உள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி ஆகும்.

இந்த செய்தி பல நல்ல விடயங்களுக்கு காரணமாக அமைய உள்ளது.

இதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்படாது. உணவு உற்பத்தி சரியாக இருந்தால் விலைவாசி கூடாது. இதனால் பணவீக்கமும் அதிகரிக்காது.

பணவீக்கம் அதிகரிக்கா விட்டால் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கும். வட்டியைக் குறைத்தால் மக்கள் வாங்க விரும்புவார்கள். இதனால் உற்பத்தி அதிகரித்து வளர்ச்சி அதிகரிக்கும்.

இப்படி வள்ளுவர் சொல்லியது போல் மழை நம்மை பல விடயங்களில் காப்பாற்றி உள்ளது.

அப்படியே மழை பொய்த்து இருந்தாலும் நமது சந்தை கணித்த பாதிப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே கருதலாம்.

இதனால் தான் இந்த தாழ்வுகள் என்பது தற்காலிகமானது என்று ஏற்கனவே பல முறை சொல்லி இருந்தோம். அநேகமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் போர்ட்போலியோவை பெற்றவர்கள் நல்ல உயர்வை சந்தித்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

இது போக, சீனாவிற்கு நிறைய பணம் திருப்பி அனுப்பி விடப்பட்டதால் சந்தை இறங்கி இருந்தது. அங்கு பொருளாதார முன்னேற்றம் பெரிதளவு இல்லாததால் அதிக அளவில் FDI பணம் மீண்டும் திரும்பி வர வாய்ப்பு உள்ளது.

குழப்பத்தில் இருந்த கிரீஸ் நாட்டின் கடனை திருப்பி கொடுக்கும் பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதும் ஐரோப்பிய நாடுகளுக்கு சாதகமாக போனது.

இப்படி உலக சந்தைகள் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்தன.

இறுதியாக நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் துறை தரவுகள் சாதகமாக வர ஆரம்பித்து உள்ளன.

அதனால் இந்த வருடத்தின் இரண்டாவது பாதி முதல் பாதி போல் இல்லாமல் நேர்மறை லாபங்களை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இன்னும் சிறிய தாழ்வுகள் ஏற்படும் போது கூட சந்தையில் நுழையலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக