வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஊழலால் பொருளாதார சிக்கல்களில் நிற்கும் பிரேசில்

நேற்று நிதி நிறுவனம் ஒன்று பிரேசிலின் மோசமான நிதி நிலைமையால் மோசம் என்பதில் இருந்து Junk என்ற நிலைக்கு தரம் கொடுத்தது. இதனால் சந்தையில் ஒரு வித பதற்றம் இருந்தது.


இதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
தெற்கு அமெரிக்க இலத்தீன் நாடுகளில் ஒன்றான பிரேசில் இந்தியா, சீனா போன்ற வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வந்தது.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் பார்த்தால் பிரிக்ஸ் நாடுகளில் அதிக வளர்ச்சி கொடுத்து வந்த நாடாக காணப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள உலோக, எண்ணெய் மற்றும் காபி போன்ற இயற்கை வளங்கள் தான்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் வரை சந்தையில் எண்ணெய் மற்றும் உலோக விலைகளில் ஏற்பட்ட உயர்வுகள் பிரேசிலுக்கு ஒரு நல்ல வளர்ச்சியைக் கொடுத்தது.

இதனை சார்ந்து கட்டமைப்பு, மனித வளம் போன்ற துறைகளும் நன்றாக வளர்ந்து வந்தன.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த ஒரு ஊழல் தற்போதைய பொருளாதார சீர்கேடுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

பிரேசிலின் எண்ணெய் வளத்தில் பெரும்பாலானவற்றை பெட்ரோபிராஸ் (petrobras) என்ற நிறுவனம் எடுத்து தருகிறது.

இந்த நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு மெகா ஊழல் தான் தற்போதைய வளர்ச்சி சீர்கேடுக்கு ஊற்றுக்கண்ணாய் அமைந்தது.

பெட்ரோபிராஸ் நிறுவனத்தில் வேலைகளை எடுத்து செல்லும் காண்ட்ராக்டர்கள் ஆட்சி செய்யும் கட்சிக்கு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அதிக அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவு லஞ்சம் பெறப்பட்டதாக சொல்கிறார்கள். முப்பதாயிரம் கோடி ரூபாய் என்பது இந்திய ஊழல் தொகையுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமில்லை தான்.ஆனாலும் ஊழல் காரணமாக வழக்குகள் கோர்ட்டிற்கு செல்லும் போது நன்றாக சென்று கொண்ட ப்ராஜெக்ட்களும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அது முற்றிலும் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி விடுகிறது.

இது தான் இந்தியாவிலும் நடந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நமது நாட்டில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஊழலை இதற்கு ஒப்பானதாக கருதலாம்.

நீதி மன்றத்தால் நிறுத்தி வைக்கபப்ட்ட பல ப்ராஜெக்ட்கள் தற்போது தான் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளன. அதனால் உற்பத்தி துறை வளர்ச்சி மூன்று வருடங்கள் பின்னோக்கி தள்ளபப்ட்டுள்ளது என்றே கருதலாம்.

ஆனால் பிரேசிலில் இந்த ஊழல் பெட்ரோபிராஸ் நிறுவனத்தோடு மட்டும் நின்று விடவில்லை. அதனை சார்ந்த பிற சுரங்கள் மற்றும் மின்சார உற்பத்தி துறைகளிலும் பரவி விட்டது. அதனால் மொத்த உற்பத்தி துறையும் பாதிக்கப்பட்டது.

அதே சமயத்தில் உலக பொருளாதரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களுக்கு பாதகமாக அமைந்தது.

சீனாவின் பொருளாதார மந்தத்தின் காரணமாக எண்ணெய் மற்றும் உலோக துறையில் தேவை கணிசமாக குறைந்து கொண்டே சென்றது. இதனால் எண்ணெய் மற்றும் உலோகங்களின் விலை பாதிக்கும் கீழே சென்றது.

மிகப்பெரிய அளவில் எண்ணெய், சுரங்க வளங்களை சார்ந்து இருக்கும் பிரேசிலால் இதனை தாக்கு பிடிக்க முடியவில்லை. நஷ்டத்தில் எண்ணையை விற்கும் நிலைக்கு வந்து விட்டது.

ஒரு பக்கம் ஊழல், மறு பக்கம் மந்தமான வியாபரம் என்று இரண்டும் சேர்ந்து பிரேசில் உற்பத்தி நிறுவனங்களை மீள முடியாமல் செய்து விட்டன.

தற்போது ஊழலின் காரணமாக மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். அது அரசியல் நிலைத்தன்மையின்மையும் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறு பல பிரச்சினைகள் ஒன்று கூடியதால் பிரேசிலின் நாணயமான ரியல் முப்பது சதவீதம் இந்த வருடத்தில் மட்டும் வீழ்ந்துள்ளது. கடன், வேலையின்மை கணிசமாக அதிகரித்துள்ளது.நிதி நிறுவனமான மூடி ஏற்கனவே பிரேசில் நிலைமை கவலையில் செல்லாம் என்று எச்சரிக்கை கொடுத்து இருந்தது.

ஆனால் தற்போது Standard & Poor என்ற நிதி நிறுவனம் BBB- என்ற தரத்தைக் கொடுத்து Junk என்று அறிவித்து உள்ளது.

இவ்வாறு தரம் கீழே செல்லும் போது புதிதாக முதலீடு செய்யவோ, கடன் கொடுக்கவோ முதலீட்டாளர்கள் அஞ்சுவார்கள். அப்படி கடன் கொடுத்தாலும் அதிக வட்டிக்கு தான் கடன் வாங்க வேண்டியிருக்கும்.

இதனால் பிரேசில் கடன் வாங்குவதற்கே கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது.

நம்மிடம் இருக்கும் அரசியல் வியாதிகள் உலக அளவில் பரவி உள்ளது ஆச்சர்யமாகத் தான் உள்ளது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக