செவ்வாய், 8 செப்டம்பர், 2015

ஏன் ருபாய் வீழ்ச்சி ஐடி நிறுவனங்களுக்கு பெரிய பயன் தரவில்லை?

கடந்த ஒரு மாத நிகழ்வுகளால் ரூபாய் மதிப்பு ஐந்து சதவீத அளவு வீழ்ந்துள்ளது. இது இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும்.


ஆனால் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு நேர்மறை பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

அப்படி என்றால், ஏற்றுமதி சார்ந்து இயங்கும் ஐடி நிறுவனங்களும் பயனைப் பெற வேண்டும். ஐடி பங்குகளும் கணிசமான உயர்வை சந்தித்து இருக்க வேண்டும்.



ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

இதுவரை அவ்வாறு தான் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது.

ஏன் என்று பார்த்தால்,

முன்பு பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வெளிநாட்டில் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு உள்நாட்டில் அதிக பணியாளர்களை வேலையில் வைத்து இருந்தனர்.

ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது.

கிளைன்ட்கள் கொடுக்கும் அழுத்தங்களால் வெளிநாட்டில் அதிக பொறியாளர்களை வைத்து மேலாண்மை செய்ய வேண்டிய நிலை.

உதாரணத்திற்கு தற்போது இன்போசிஸ் 28% பணியாளர்களை வைத்து உள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஐந்து சதவீதம் அதிகம்.

இந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கு கொடுக்கும் சம்பளம் டாலரில் இருப்பதால் செலவுகளும் கடுமையாக அதிகரித்துள்ளன. இப்படித் தான் பல மென்பொருள் நிறுவனங்களிலும் ஆன்சைட் செலவீனங்கள் அதிகரித்து வருகிறது.

அடுத்து, பல ஐடி நிறுவனங்களுக்கு முன்பு போல் டாலரை மட்டும் சாராமல் வருமானம் மற்ற நாணயங்களிலும் கொஞ்சம் பரவலாக வருகிறது. TCS நிறுவனத்தில் ஐம்பது சதவீத வருமானம் டாலர் அல்லாத கரன்சி மூலம் கிடைக்கிறது.

ஆனால் தற்போதைய நிகழ்வு டாலருக்கு எதிராக மட்டும் தான் இந்திய ரூபாயை வீழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் யூரோ, பௌன்ட் போன்றவற்றிற்கு எதிராக இந்திய ருபாய் மதிப்பு பத்து சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை கவனிக்க.

இதனால் ஐடி நிறுவனங்களின் மீதி ஐம்பது சதவீத வருமானத்தில் நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது.

ஆக, டாலரில் கிடைக்கும் லாபம் மற்ற நாணயங்களால் மட்டுப்படுத்தப்பட்டு விடுகிறது.



இறுதியாக, முன்பெல்லாம் ஐடி நிறுவனங்களின் கிளைன்ட்கள் ஐந்து வருடங்களுக்கு என்று நாணய மாற்று விகிதத்தை குறிப்பிடுவது வழக்கம்.

ஆனால் தற்போது உஷாராகி இரண்டு, மூன்று காலாண்டுகளுக்கு என்று ஹெட்ஜிங் பொலிசியை நிர்ணயம் செய்து உள்ளனர்.

பார்க்க:  மென்பொருள் நிறுவனங்களின் HEDGING பற்றி அறிவோம்.
இதனால் நாணயங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஐடி நிறுவனங்கள், அவர்களது நுகர்வோர்கள் என்று இருவருக்கும் சம விகிதத்திலே பாதிக்கிறது.

மொத்தத்தில் பார்த்தால் டாலரால் கிடைத்த நாணய லாபங்கள் தற்போது  சமநிலைப்படுத்தப்பட்டு விடுகிறது. இனி அவர்கள் செய்யும் வேலைகளே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

இன்னும் ஒரு துறை இருக்கிறது. சில்லறையில் விற்கப்படுவதால் அங்கு ஹெட்ஜிங் பாலிசி எல்லாம் இல்லை. அது தான் மருந்து ஏற்றுமதி நிறுவனங்கள்.

அவர்களுக்கு டாலர் மதிப்பு உயர்வு பலனைத் தரலாம். ஆனால் ஏற்றுமதி ஐரோப்பாவை சார்ந்து இருந்தால் எதிர்மறை பலன்களை கொடுத்து விடும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக