புதன், 30 செப்டம்பர், 2015

PPF, அரசு சேமிப்பு பத்திரங்களுக்கு வட்டி குறைய வாய்ப்பு

நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் வங்கிகளுக்கு கொடுக்கப்படும் ரேபோ வட்டி விகிதத்தைக் குறைத்தார்.

பார்க்க: ஆர்பிஐ வட்டியைக் குறைத்தது, கடன் பெறுபவர்களுக்கு யோகம்

இதன் தொடர்ச்சியாக SBI, ஆந்திரா வங்கி போன்றவை வட்டியைக் குறைத்துள்ளன. ஆனாலும் பல வங்கிகள் இன்னும் வட்டியைக் குறைக்கவில்லை.



இந்த வருடத்தில் மட்டும் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை 1.25% அளவு குறைத்துள்ளது. ஆனால் பல வங்கிகள் இதில் பாதியளவு கூட தங்களுக்கான கடன் வட்டியைக் குறைக்கவில்லை.


இந்த வருட தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதம் 8% என்று இருந்தது. அது தற்போது குறைந்து 6.75% அளவிற்கு இறங்கி வந்துள்ளது.

அதே நேரத்தில் எஸ்பிஐ வருட ஆரம்பத்தில் Base rate 10% வட்டி விகிதத்தைக் கொண்டிருந்தது. அது தற்போது 0.6% மட்டுமே குறைந்து 9.4% என்பதாக மாறியுள்ளது. இதிலிருந்து வங்கிகள் வட்டியை பெரிதளவு குறைக்கவில்ல என்பதை அறியலாம்.

(Base rate என்பது குறைந்தபட்சமாக வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டி ஆகும். அதன் பிறகு கடனுக்கான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வட்டியை மேலும் கூட்டுவார்கள்.)

இப்படி வங்கிகள் வட்டியைக் குறைக்காமல் இருப்பதால் ரிசர்வ் வங்கியின் கொள்கைகளின் பலன் மக்களையோ, தொழில் துறையினரையோ முழுமையாக சென்று சேருவதில்லை.

அதனால் தான் ரகுராம் ராஜன், அருண் ஜெட்லி போன்றவர்கள் பல முறை வட்டியைக் குறையுங்கள் என்று கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

ஆனாலும் வங்கிகள் தரப்பில் ஒரு நியாயமான காரணத்தை பதிலாக கூறி உள்ளார்கள்.

இதன்படி, அரசு சார்பில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் வட்டி என்பது வங்கிகள் தருவதை விட அதிகமாக உள்ளது.

உதாரணதிற்கு PPF, அஞ்சலகம் மூலம் வழங்கப்படும் திட்டங்களில் வட்டி என்பது 1 முதல் 1,5% வரை வங்கிகளை விட அதிகமாக உள்ளது. அதனால் மக்கள் அங்கு சென்று விடுகிறார்கள்.



டெபாசிட்கள் பெறுவதற்கு அந்த திட்டங்களுடன் வங்கிகள் போட்டியிட வேண்டியுள்ளது. போட்டி காரணமாக டெபாசிட்களுக்கு வட்டி விகிதங்களை குறைக்க முடியவில்லை.

அதனால் வங்கிகள் கொடுக்கும் கடன்களுக்கும் வட்டியைக் குறைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்கள்.

இது கொஞ்கம் நியாயமான காரணமாக இருப்பதால் அருண் ஜெட்லி பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.

விரைவில் அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பையும் எதிர்பார்க்கலாம்.

அதாவது வளர்ச்சியை எதிர்பார்க்கும் சூழ்நிலையில் பணத்தை பணமாக வைத்து இருப்பதற்கு பதிலாக முதலீடுகளாக மாற்றுவது சிறந்தது.

தொடர்பான கட்டுரைகள்:
பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக