புதன், 23 செப்டம்பர், 2015

அதிக பாதுகாப்பு தரும் NTPC வரி விலக்கு முதலீடு பத்திரம்

தற்போது பங்குச்சந்தையில் ஓரளவு நிலவும் நிலையற்றத் தன்மை காரணமாக பாதுகாப்பான முதலீடுகளை தேடுவது ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் வழக்கம்.


அவர்களுக்காக கடன் பத்திரங்களை பற்றி ஏற்கனவே விவரித்து இருந்தோம்.

பார்க்க:  பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்



சில கடன் பத்திரங்களை பரிந்துரை செய்யுமாறு எமக்கு மின் அஞ்சல்கள் வந்திருந்தன. ஆனால் பாதுகாப்பான நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களுக்காக காத்திருந்தோம்.


இந்த நிலையில் NTPC நிறுவனம் 400 கோடி மதிப்பிற்கு கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.

NTPC ஒரு அரசு நிறுவனம் என்பதால் நன்கு பாதுகாப்பானதாக கருதலாம். இது தவிர AAA தர வரிசையும் பெற்றுள்ளது. அதனால் நிதி நிலைமையும் நன்றாக உள்ளது.

வரும் செப்டம்பர் 29ந் தேதி ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அப்பொழுது கால் முதல் அரை சதவீத வட்டி குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதனால் வரும் மாதங்களில் பிக்ஸ்ட் டெபாசிட் வட்டி கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் NTPCயின் இந்த பத்திரம் நல்ல பலனைத் தரும்.

10, 15, 20 வருட முதலீட்டு காலத்திற்கு இந்த பத்திரங்கள் தரப்படுகின்றன. அந்த காலங்களுக்கேற்ப வட்டி 7.36%, 7.53%, 7.62% அளவு தரப்படுகிறது.

இந்த பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு தரப்படுகிறது.

இதனால் 30% வரி எல்லைக்குள் வருபவர்கள் மொத்தமாக 10.65% அளவு பலன் பெறுவார்கள். 20% வரி எல்லைக்குள் வருபவர்கள் 9.5% அளவு பலன் பெறுவார்கள். அதனால் இவர்கள் முதலீடு செய்ய பரிந்துரை செய்கிறோம்.

ஆனால் 10% வரி எல்லைக்குள் வருபவர்கள் 8.5% அளவு வட்டி பலன் பெறுவார்கள். இது தற்போதுள்ள பிக்ஸ்ட் டெபாசிட் வட்டியுடன் ஒன்றி போவதால் பெரிய அளவில் பலன் இல்லை.

அதனால் 10% வரி பிரிவை சார்ந்தவர்கள் மற்றும் வருமான வரி கட்டாதவர்கள் இந்த பத்திரங்களை தவிர்க்கலாம்.



குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் முதல் முதலீட்டு பத்திரங்களை வாங்கி கொள்ளலாம். அதிக பட்சம் பத்து லட்சத்துக்குள் முதலீடு செய்ய வேண்டும்.

அதிக அளவு விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் முதலில் வந்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும்.

டிமேட் கணக்குகளை வைத்து இந்த பத்திரங்களை வாங்கி கொள்ளலாம். செப்டம்பர் 23 முதல் 30 வரை இந்த பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க.
http://www.ntpc.co.in/sites/default/files/downloads/NTPCTaxFreeBondsProspectusSeptember172015Final.pdf

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக