புதன், 16 செப்டம்பர், 2015

பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்

தற்போது சந்தையைப் பார்த்தால் ஒரு நாளில் 200 புள்ளிகள் கூடுகிறது. மற்றொரு நாளில் அதே அளவில் சரிகிறது.


உலக அளவில் வரும் பிரச்சனைகளும், உள்நாட்டுக் காரணிகள் வலுவாக இல்லாததும் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.இரண்டு, மூன்று வருட கால முதலீட்டிற்கு சந்தை ஏற்றதாக உள்ளது. ஆனால் அடுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை பெரிய அளவில் பங்குச்சந்தைகளிலே லாபம் பார்ப்பது கடினம் என்பதே தற்போதைய நிலவரம்.


இந்த சமயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ஒரு மாற்று வழியை யோசிக்கலாம்.

மாற்று வழியாக தங்கத்தை வாங்கலாம் என்றால் அதுவும் அடுத்த ஒரு வருடத்திற்கு கூடும் வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

சரி. நிலத்தில் முதலீடு செய்யலாம் என்றால் ரியல் எஸ்டேட் நிலை கொஞ்சம் பரிதாபகமாக தான் உள்ளது.

அதாவது ரிஸ்க் உள்ள எந்த முதலீடும் அடுத்த ஒரு வருடத்திற்கு பெரிய அளவு வருமானம் தருவது கடினம் போல் தெரிகிறது.

இந்த சூழ்நிலையைத் தான் நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வெளியிட்டு பயன்படுத்த இருக்கின்றன.

அரசின் NTPC, PFC போன்ற நிறுவனங்கள் நிலையான வருமானம் தருமளவு கடன் பத்திரங்கள் வெளியிட இருக்கின்றன.

இந்தக் கடன் பத்திரங்களில் வங்கி பிக்ஸ்ட் டெபாசிட்களில் அளிக்கப்படும் வட்டியை விட ஒன்று முதல் இரண்டு சதவீதம் அதிக வட்டி தரப்படுகிறது. சராசரியாக 9% முதல் 10% வரை வட்டி கிடைக்கிறது.

அதே நேரத்தில் இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

இதனால் 20% முதல் 30% வரை வரி செலுத்தும் நபர்களுக்கு இந்த கடன் பத்திரங்கள் வட்டியுடன் சேர்த்து பார்த்தால் வருடத்திற்கு 12% முதல் 14% வரை வருமான பலன்கள் கிடைக்கிறது.

இந்த கடன் பத்திரங்களை நமது டிமேட் கணக்குகளை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

ஆனாலும், இந்தக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

கடன் பத்திரங்களை வெளியிடும் நிறுவனத்தின் நிதி நிலைமையை நன்கு கவனித்து முதலீடு செய்ய வேண்டும். இதனை அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ரேடிங் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனம் AAA, AAA+ என்பன போன்ற தரங்களை பெற்று இருந்ததால் மிகவும் பாதுகாப்பானது என்று அர்த்தம் கொள்ளலாம்.

இருந்தாலும், பய உணர்வைத் தவிர்க்க அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

ரிசர்வ் வங்கி செப்டம்பர் 29 அன்று வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்பு இருபதாக கூறப்படுகிறது. அப்படிக் குறைக்கப்படும் பட்சத்தில் நாம் போடும் பிக்ஸ்ட் டெபாசிட்டுக்கும் வட்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

இது போல். அதன் பிறகு வெளியிடும் கடன் பத்திரங்களும் கால சதவீதம் வட்டியைக் குறைக்க வாய்ப்புள்ளது.

அதனால் அதற்கு முன்னர் வரும் பத்திரங்களில் முதலீடு செய்தால் இந்த கால் சதவீத கூடுதல் வட்டியைப் பெறலாம்.

அதே நேரத்தில் 20% க்கும் குறைவான வரி கட்டுபவர்களுக்கு இந்த பத்திரங்கள் பெரிதளவு பலன் தருவதில்லை. அதனால் அவர்கள் பாதுகாப்பான வருமானம் வேண்டும் என்றால் பிக்ஸ்ட் டெபாசிட்டிற்கே செல்லலாம்.

இந்தக் கட்டுரை ரிஸ்கே எடுக்க விரும்பாதவர்கள் அல்லது ஓய்வு வருமானத்திற்கு முதலீடுகளை நம்பி இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மற்றபடி, இரண்டு வருடங்கள் காத்திருக்க தயாராக இருந்தால் இந்த பாண்ட்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.

தொடர்பான கட்டுரைகள்:
அதிக நிலையான வருமானம் கொடுக்கும் NCD பத்திரங்கள்
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக