செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஏமாற்றம் தரும் GDP தரவுகள், சரிவில் சந்தை

நேற்று வெளியான இந்தியா தொடர்பான GDP தரவுகள் சந்தைக்கு சோகத்தையே அளித்தன.


இந்த தரவுகள் 2015ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான GDP தரவுகளாகும்.



சந்தை கடந்த வருடத்தை விட 7.5% வளர்ச்சி இருக்கும் என்று கணித்து இருந்தது. அரசோ 8.5% வளர்ச்சி என்று இலக்கு வைத்திருந்தார்கள். குத்து மதிப்பாக இலக்கு வைத்து இருப்பார்கள் போல..

இரு பிரிவினரது எதிர்பார்ப்பையும் மீறி குறைந்த வளர்ச்சி விகிதத்தை GDP தரவுகள் அளித்தன. அதாவது 7% வளர்ச்சி இருந்தது.

இதில் வங்கித்துறை, உற்பத்தி துறை போன்றவை எதிர்பார்த்ததற்கும் குறைவாக வளர்ச்சி கொடுத்துள்ளது.

பருவ மழை குறைவால் பெரிதளவு பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட விவசாயத்துறை கொஞ்சம் தப்பி விட்டது. 1.9% அளவு வளர்ச்சி கொடுத்துள்ளது.

இந்த தரவுகளில் வெளிவரும் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் மக்கள் இன்னும் செலவழிக்க ஆரம்பிக்கவில்லை என்பது தான்.

அதாவது அரசு மூலம் செலவழிக்கப்படும் தொகை தான் 40% GDPக்கு பங்களிப்பு வழங்குகிறது. இவை ஓரளவு நல்ல வளர்ச்சி கண்டுள்ளன.

இதற்கு ஒரு முக்கிய உதாரணம் கட்டுமானத் தொழில் துறை நல்ல வளர்ச்சியைக் காட்டி உள்ளது.

ஆனால் மீதி அறுபது சதவீதம் தனி நபர் செலவழிப்பதில் தான் வருகிறது. அங்கு தான் பெரிய வளர்ச்சி காணப்படவில்லை.

அதிலும் ரியல் எஸ்டேட் துறை கழுதையில் இருந்து கட்டெறும்பு நிலைக்கு வந்துள்ளது. இனியாவது கொஞ்சம் விலையைக் குறைத்து விற்பனை எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.



மக்களுக்கும் தாங்கள் பார்க்கும் வேலைகளில் ஒரு வித பாதுகாப்பு இருந்தால் தான் லோன் எடுத்தாவது ஏதாவது பொருளை வாங்க முற்படுவார்கள். அதனால் புதிய வேலைவாய்ப்புகளை அரசு தான் ஏறப்டுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால் வேலை வாய்ப்பு வளர்ச்சி அதி வேகத்தில் இல்லை என்பது ஒரு குறையே.

அரசு சீர்த்திருத்த நடவடிக்கைகளில் காட்டும் சுணக்கம் வரும் காலாண்டுகளில் எதிரொலிக்கலாம். அதனால் பார்லிமெண்டில் குஸ்தி போடாமல் உருப்படியாக மசோதாக்களைக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

பங்குசந்தையில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் ரிடர்னை அடுத்த வருடத்திற்கு இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை குறைத்துக் கொள்வது நல்லது.

அனேகமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை இந்த மாத இறுதியில் குறைக்கலாம் என்றே தெரிகிறது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக