சனி, 12 செப்டம்பர், 2015

ஆம்டேக் ஆட்டோவை விற்க வேண்டிய தருணம்

பங்குச்சந்தையில் கடந்த ஒரு மாதமாக AMTEK AUTO என்ற ஒரு பங்கு மேல், கீழ் போக்கு காட்டி வருகிறது.


நேற்று மட்டும் 50% உயர்ந்தது. ஒரு சில வாரங்கள் முன்பு 80% கீழே சரிந்தது. இவ்வாறு உயர்வுகளும், தாழ்வுகளும் பெரிய அளவில் இருந்து வந்தது.

இதனைப் பற்றி கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.



ஆம்டேக் ஆட்டோ என்ற இந்த நிறுவனம் ஆட்டோ துறையில் ஒரு நல்ல நிறுவனம் தான். மாருதி, மகிந்திரா, டாடா போன்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரிப் பாகங்களைத் தயாரித்து வருகிறது.

இன்னும் கூட இந்த நிறுவனம் மாருதி மற்றும் சில முன்னணி நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர் புத்தகத்தை நிறைத்து வைத்துள்ளது.

இப்படி ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஒரு சில நிர்வாக முடிவுகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக தற்போது தடுமாறும் நிலைக்கு வந்துள்ளது.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக வியாபர சந்தையை பெருக்கும் பொருட்டு பல நிறுவனங்களை வாங்கத் துவங்கியுள்ளது. இப்படி மொத்தமாக 19 நிறுவனங்களை வாங்கியுள்ளது.

அதிலும் ஐரோப்பிய சந்தையில் விரிவாக்கம் பொருட்டு பல நிறுவனங்களை அங்கு வாங்கியது.

ஆனால் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்ட கடுமையான சுணக்கம் அங்கு வாகன உற்பத்தி துறையை கடுமையாக பாதிக்க வாங்கிய நிறுவனங்கள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்க முடியாமல் போயிற்று.

கடன் வாங்கி வாங்கிய நிறுவனங்களிடம் இருந்து பலன் பெருமளவில் இல்லாததால் கடன் சுமையும், அதற்கான வட்டியும் கூடி விட்டது.

இது நிறுவனத்தின் நிதி சமநிலையும் பாதித்து விட்டது.

இந்த விரிவாக்க்கதை நம்பி பல வங்கிகளும், நிதி நிறுவனங்கள் கடன் பத்திரங்களில் கடன் கொடுத்து இருந்தன. பிரபலமான ம்யூச்சல் நிறுவனங்கள் கூட இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து இருந்தன.

அதற்கு இந்த நிறுவனத்தின் கடந்த கால வரலாறு சாதகமாக இருந்தது ஒரு முக்கிய காரணம்.

ஆனால் கடன் சுமை ஏற, ஏற நிர்வாகம் பல தவறுகளை செய்ய ஆரம்பித்தது போல் தெரிகிறது.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான CASTEX Technologies நிறுவனம் Convertible Bond என்ற முறை மூலம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களை கட்டாயப்படுத்தி பங்குகளை வாங்க வைத்தது.

Convertible Bond என்பது ஒரு கடன் பத்திரம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அந்த பத்திரத்திற்கு நிலையான வட்டி வழங்கபப்டும்.

நிறுவனத்தின் பங்கின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட விலையை அடைந்த பிறகு அந்த கடன் பங்குகளாக மாற்றப்படும்.

இவ்வாறு CASTEX நிறுவனத்தின் கடன் பத்திரம் பங்கு மதிப்பு 171 ரூபாயை அடைந்த பிறகு பங்குகளாக மாற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் 100 ரூபாயில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த இந்த பங்கு ஒரு சிறிய கால இடைவெளியில் 316 ரூபாய்க்கு சென்றது.

அந்த சமயத்தில் நிறுவனம் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள CD கடன் பத்திரங்கள் பங்குகளாக மாற்றப்படும் என்று அறிவித்தது.

அவ்வாறு அறிவித்த அடுத்த 29 நாட்களுக்குள் பங்கு விலை தொடர்ந்த சரிந்து சரிந்து மீண்டும் 100 ரூபாய்க்கு கீழ் வந்தது.

இதனால் இந்தக் கடன் பத்திரங்களை வாங்கியவர்கள் செயற்கையான முறையில் பங்கு விலையில் ஏதோ செய்கின்றனர் என்று லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடந்தனர். ஏனென்றால் பெரும்பாலான கடன் பத்திரங்கள் பிரிட்டிஷ் விதி முறையின் படி விநியோகிக்கப்பட்டு இருந்தன.

இந்த CASTEX நிறுவனத்தில் ஆம்டேக் நிறுவனம் 45% அளவு பங்குகளை கொண்டிருப்பதால் அங்கு ஏற்பட்ட பாதிப்பு ஆம்டேக் நிறுவனத்தையும் பாதித்தது.

இது போக, 10 வருட Secured Loan கடன் பத்திரங்களை ஆம்டேக் நிறுவனம் முன்னர் விநியோகித்து இருந்தது. இவைகள் பங்குகளாக மாற்றப்பெறாத கடன் பத்திரங்கள்.

ஒரு குறிப்பிட்ட வட்டியை இந்த பத்து வருட காலமும் நிறுவனம் வழங்க வேண்டும்.

இந்த நிறுவனம் ஒரு நல்ல வரலாற்று அனுபவத்தைக் கொண்டிருந்ததால் பெரிய வங்கிகளான SBI, HDFC, ICICI, KVB போன்ற வங்கிகள் கூட கடன் கொடுத்து இருந்தன.

அந்த கடன் பத்திரங்களின் முதிர்ச்சி காலம் இந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைகிறது.

ஒரு கட்டத்தில் 800 கோடி மதிப்புள்ள இந்த கடன்களை செப்டம்பர் மாதத்தில் திருப்பி செலுத்தி விடுவார்களோ என்ற சந்தேகம் இருந்து வந்தது.

இது தவிர 15 காலாண்டுகள் தொடர்ந்து நல்ல லாபம் கொடுத்து வந்த ஆம்டெக் நிறுவனம் கடந்த காலாண்டில் முதல் முறையாக நஷ்டம் கொடுத்தது .

இதனால் நிறுவனம் திவாலாகி விடுமோ என்ற பயத்தில் பங்கு விலை 200 ரூபாயில் இருந்து 30 ரூபாய்க்கு இறங்கி வந்தது.



ஆனால் நேற்று நிறுவனர்கள் தங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவற்றை விற்றும், தங்களது முதலீடுகளை உட்செலுத்தியும் மீட்பதாக கூறி உள்ளனர்.

நிறுவனர்கள் மீட்க உண்மையாக முனைகின்றனர் என்று கருதி நேற்று ஆம்டெக் நிறுவன பங்குகள் ஒரே நாளில் 50% அளவு உயர்ந்தது. இதனால் பங்கு 45 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு குறுகிய காலத்திற்கு சூழ்நிலைகள் சாதகமாக இல்லாததால் இந்த பங்கில் முதலீடு செய்தவர்கள் வெளிவரும் வாய்ப்பாக இந்த உயர்வுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாதி முதலீடை 50 ரூபாய் அளவிலும், மீதியை மேலும் 25% உயரும் போது விற்று வெளியேறலாம்.

ஒரு நல்ல நிறுவனம் தவறான முடிவுகள் மற்றும் சாதகமில்லாத சூழ்நிலைகளில் தடுமாறுகிறது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக