வியாழன், 3 செப்டம்பர், 2015

வெறும் நம்பிக்கைக்காக மட்டும் முதலீடு செய்ய முடியாது - ஜிம் ரோகர்ஸ்

தற்போது இந்திய சந்தை 13 மாதத்தில் இல்லாத அளவு தாழ்வு நிலையை அடைந்துள்ளது.


இதற்கு முக்கிய காரணம் பல வெளிநாட்டு முதலீட்டாளார்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொண்டது தான்.அதற்கு அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் பொருளாதார சீர்த்திருத்தங்கள் வேகமாக அளவில் இல்லாதது தான்.

இந்த சூழ்நிலையில் வாரன் பப்பெட்டைப் போல் உலக அளவில் புகழ் பெற்ற முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ரோகேர்ஸ் அவர்களின் பேட்டி வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மனநிலையை நன்கு காட்டுகிறது.

இவர் வாரன் பப்பெட்டைப் போல் நீண்ட கால முதலீடுகளை கொள்ளாமல் குறுகிய கால அளவில் முதலீடு செய்யும் வழக்கம் உள்ளவர்.

எங்கெங்கெல்லாம் சந்தை நன்றாக இருக்கிறதோ குறுகிய காலத்தில் முதலீடு செய்து காசு பார்க்கும் வழக்கம் உடையவர்.

கடந்த இரு வருடத்தில் மோடி வருவார், அவரது அரசு இந்தியாவில் பலவற்றை மாற்றும் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் முதலீடு செய்தார்.

அதனால் அவருக்கு ஒன்றும் பெரிதளவு நஷ்டமில்லை.

இந்திய வளர்ச்சி நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நமது சந்தைகளும் கணிசமாக உயர்வைக் கண்டன. அதனால் அவருக்கும் கணிசமான லாபம் தான்.

ஆனால் தற்போது அணைத்து முதலீடுகளையும் திரும்ப பெற்று விட்டார்.

அதற்கு அவர் கூறிய காரணங்களை பார்க்கும் போது ஒரு வெளிநாட்டு முதலீட்டாளராக நியாயம் இருப்பதை உணரலாம்.

பேட்டியின் சாராம்சம் இது தான்..

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்ய தவறி விட்டது. நரேந்திர மோடியின் அரசு அதிகம் பேசுகிறது, ஆனால் செயலில் எதுவுமில்லை. 

மோடி ஸ்மார்ட்டான ஆள் தான். மீடியாவில் சக்தி வாய்ந்த ஆள். ஆனால் நடவடிக்கை எதுவுமில்லாமல் அவர் செய்வார் என்ற வெற்று நம்பிக்கையில் மட்டும் நாங்கள் முதலீடு செய்ய முடியாது.  

இது தான் பேட்டி..

சர்வேதேச முதலீட்டாளர்களை பொறுத்த வரை இந்தியா என்பது பத்தோடு ஒன்றாக இருக்கும் சந்தை தான். இங்கு கூச்சல், குழப்பம், அரசியல் மட்டும் அதிக அளவு செய்து கொண்டு இருந்தால் வேறு நாட்டிற்கு சென்று விடுவார்கள்.

தற்போது உள்நாட்டு முதலீட்டளர்கள் பிடியில் தான் இந்த நிலையிலாவது சந்தை தாக்கு பிடித்துக் கொண்டிருக்கிறது.

எமக்கும் சந்தேகங்கள் அவ்வப்போது வரத் தான் செய்கிறது.

பொன் ராதாகிருஷ்ணன் பக்கிங்காம் கால்வாயை 2016க்குள் சுத்தம் செய்து விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் விடுவதாக சொல்கிறார். இன்னொரு அமைச்சர் 24 மாதத்திற்குள் நாட்டில் அணைத்து தெரு விளக்குகளும் LED விளக்குகளாக மாற்றப்படும் என்று சொல்கிறார். கடலுக்கு அடியில் ரோடு போட்டு இலங்கைக்கு செல்லலாம் என்று கத்காரி சொல்கிறார்.

சில சமயங்களில் இவை எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. நலல் விடயங்கள் கூட..

ஆனால் சொன்ன காலத்தில் எல்லாம் முடிப்பார்களா? அல்லது சும்மா பேச்சுக்கு சொல்கிறார்களா? என்று இன்னமும் புரியவில்லை.

உலகின் பல நாடுகளும் பொருளாதரத்தில் திணறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்தியாவோ கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றின் இறக்குமதி குறைந்து நல்ல நிலையில் தமது கையிருப்பை வைத்துள்ளது. பணவீக்கம் போன்றவையும் கட்டுக்குள் இருக்கிறது.  இது முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.

ஆனால் இந்த அரசியல்வாதிகள் அமளி, அரசியல் செய்து வீணடித்து விடுவோர்களோ என்ற பயம் இருக்கத் தான் செய்கிறது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. எனக்கு சரியா ஆங்கிலம் வராதுங்க.ஆனா தெரிஞ்ச வரைக்கும் படிச்சதுல நம்ம ரிசர்வ் பேங்க் மேல நல்ல அபிப்ராயம் உள்ளது போல பேசியிருக்கிறார்னு நம்புறேன்.சரிதானுங்களே?

    பதிலளிநீக்கு