புதன், 9 செப்டம்பர், 2015

அதிக எதிர்பார்ப்புகளுடன் முதல் தமிழக முதலீட்டாளர் மாநாடு

இது வரை மாநாடு ஏதும் நடத்தாமலே தமிழ்நாடு அதிக அளவில் முதலீடுகளை பெற்று வந்தது.


அதற்கு தமிழகத்தின் நல்ல உள்கட்டமைப்பு, பெரிய அளவிலான துறைமுகங்கள் நல்ல புவியியல் அமைப்பில் அமைந்திருத்தல் போன்றவை முக்கிய காரணமாக அமைந்து இருந்தது.இது தவிர தொழில் அறிவு சார்ந்த மனித உழைப்பு எளிதில் கிடைத்து வந்தது. பெரிதளவு சாதி, மத மோதல்கள் இல்லாமல் சட்டம் ஒழுங்கு எப்பவுமே கட்டுக்குள் இருந்து வந்தது.

அரசியல் நிலைத் தன்மையும் இங்கு கொஞ்சம் அதிகம். போட்டால் ஒரே கட்சிக்கு முழுப் பெரும்பான்மையுடன் ஓட்டுப் போடும் பழக்கம் நமக்கு உண்டு.

இறுதியாக கொஞ்சம் கம்யூனிச நினைப்பு இருந்தாலும் கேரளா போல் தொட்டதெற்கெல்லாம் ஸ்ட்ரைக் செய்யும் வழக்கம் இங்கு கிடையாது.

இதனால் முதலீட்ட்டாளர்களுக்கு கொஞ்சம் நட்புடன் இருக்கும் மாநிலமாகவே இருந்து வந்தது.

ஆனால் கடந்த பத்து வருடங்கள் அதிக அளவில் தொழில் துறையில் அரசியல் கலந்து லஞ்சம் பெருகி விட்டது.

தற்போதைய முதலீட்டளர்கள் மாநாட்டில் கட்சி கொடிகள் விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடக்கும் இடம் வரை கட்டப்பட்டதில் இருந்தே அரசியலில் தாக்கத்தை புரிய முடிகிறது.

இது தவிர ஆட்சியாளர்களை எளிதில் கலந்துரையாட முடியாதது பாதகமான விடயம்.

கடுமையான மின் தட்டுப்பாடு பல முதலீட்டாளர்களை இங்கு விட்டு ஓட செய்து விட்டது.

நோக்கியா, பாக்ஸ்காண் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை மூடி ஏற்படுத்திய கெட்ட பெயர்களும் பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்தின.

இதனால் தொழில் வளர்ச்சி குறைந்து அரசின் வருமானம் குறைந்தது. ஆனால் அதே நேரத்தில் இலவச திட்டங்கள் பெருகியதால் உள்கட்டமைப்பிற்கு அதிக அளவு செலவு செய்ய முடியவில்லை.

மொத்தத்தில் கடந்த பத்து வருடங்களாக திமுகவோ, அதிமுகவோ மொக்கையாக ஆட்சி செய்து வளர்ச்சியை மந்தப்படுத்தி விட்டன.

இந்த நிலையில் தான் மற்ற மாநிலங்களைப் போல் மாநாடு நடத்தி முதலீட்டாளர்களை தேடித் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவு முதலீடு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொல்கிறார்கள். மாநாட்டின் கடைசி நாளில் தான் முழு விவரங்களும் தெரிய வரும்.

சில தகவல்கள் படி, உள்நாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக சொல்லபப்டுகிறது.

அதன்படி, HCL நிறுவனம் மதுரையில் 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல் TCS, CTS போன்ற மென்பொருள் நிறுவனங்களும் சென்னையில் விரிவாக்கத் திட்டங்கள் வைத்துள்ளதாக கருதப்படுகிறது.ஆட்டோ நிறுவனங்களான Ford, Renault Nissan மற்றும் MRF போன்றவையும் முதலீடு செய்ய திட்டம் வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

அதனால் மாநாடு வெற்றியடைய வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.

அப்படி வெற்றியடைந்தால் உழைப்பிற்கு பெயர் போன தமிழக மக்கள் தான் முக்கிய காரணமாக இருப்பார்களே தவிர வெட்டியாக அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் பின்னுக்கே இருப்பர்.

எப்படியாயினும், மாற்றம் என்பது இந்த மாநாட்டின் மூலம் வந்தால் மகிழ்வே!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக