செவ்வாய், 22 செப்டம்பர், 2015

கட்டுமானத்தில் இருக்கும் பிளாட்களை தவிர்ப்பது நல்லது

இந்திய பங்குச்சந்தை கடந்த இரு வருடங்களுடன் ஒப்பிடுகையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.


ஆனால் இந்த வளர்ச்சி பல துறைகளிலும் இன்னும் பரவலாக செல்லவில்லை என்பதே உண்மை.



பங்குச்சந்தையில் நுகர்வோர், ஐடி, பர்மா, ஆட்டோ போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் தான் சந்தையை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.


மற்ற துறைகள் இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கவே இல்லை.

அதிலும் ரியல் எஸ்டேட் துறை தான் அதிக அளவில் திணறிக் கொண்டிருக்கும் துறையாக இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் DLF போன்ற பெரிய நிறுவன பங்குகள் கூட 75% மதிப்பு சரிந்துள்ளது.

இந்த வருடம் காலியாக இருக்கும் ப்ளாட்களில் 15% கூட விற்கவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.

ஆனாலும் நமது பில்டர்கள் விலையைக் குறைத்து விற்பனை எண்ணிக்கையைக் கூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரியவில்லை.

இந்த விற்பனை மந்தத்தால் பில்டர்கள் கடன் சுமையும் கூடியுள்ளது. ஒரு கடனைத் தீர்க்க இன்னொரு கடன் வாங்கும் வழிமுறையைத் தான் பின்பற்றி வருகின்றனர்.

இந்த நெருக்கடியின் காரணமாக பல ப்ராஜெக்ட்களின் கட்டுமானப் பணி பாதியிலே நிற்கிறது.

இந்த நிலையில் பாதியிலே நிற்கும் பிளாட்களுக்கு கணிசமான சலுகை கொடுப்பதாக விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போதைய நிலைமை சரியாக இல்லாத சூழ்நிலையில் கட்டுமானத்தில் இருக்கும் பிளாட்களை எப்பொழுது முடிப்பார்கள் என்றே தெரியவில்லை.

கட்டுமானப் பணிகள் தாமதமானால் தர வேண்டிய நஷ்ட ஈடை நமது நாட்டு பில்டர்களிடம் இருந்து பெறுவதும் எளிதில்லை.

அதனால் முடிந்த வரை கட்டுமானம் முடியாத பிளாட்களை வாங்குவதை தவிர்க்கலாம்.

சில கவர்ச்சிகரமான விளம்பரங்களில் ஈர்க்கப்பட்டு இந்த பிளாட்களுக்கு சென்றால் பல ஆண்டுகள் கடனுக்கான வட்டியும், குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையும் ஒரே நேரத்தில் கொடுத்து வரும் சூழ்நிலை வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

அப்படி பிளாட்கள் வாங்குவதாக இருந்தால் Ready-To-Occupy என்ற முறையில் நிறையவே காலியாக உள்ளன. அவை நல்ல விலைக்கு கிடைத்தால் செல்லலாம்.

அதிலும் ஒரு புள்ளி விவரத்தின் படி, விற்காத ப்ளாட்களில் 69% ஒரு கோடி ரூபாய்க்கு மதிப்பிற்கு மேற்பட்ட பிளாட்களாகும். அதனால் மக்கள் குறைந்த விலை பட்ஜெட்டிற்கு மாறி வருகிறார்கள் என்பதை அறியலாம்.

தற்போதுள்ள ரியல் எஸ்டேட் சூழ்நிலை மாறுவதற்கு அடுத்து இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்ற நிலையில் பேப்பரில் மட்டும் கட்டிடத்தை பார்த்து தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

தொடர்பான கட்டுரைகள்:

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக