ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கடனைக் குறைக்க ஹோட்டல்களை விற்கும் லீலா பேலஸ்

பெங்களூரில் இருக்கும் போது லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.


ஹோட்டலே இப்படின்னா ஹோட்டல் ஒனர் எவ்வளவு வசதியிருப்பார் என்றெல்லாம் எண்ணியதுண்டு. அவ்வளவு ஆடம்பரமான வடிவமைப்பு மற்றும் வசதிகள் .



ஆனால் பங்குச்சந்தையில் வந்த பிறகு தான் லீலா பேலஸ் நிதி நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை அறிய முடிந்தது.

கேரளாவை சார்ந்த நாயர் ஒருவரால் நிர்வகிக்கப்படும் இந்த ஹோட்டல் பத்து வருடங்களுக்கு முன்னர் கடன் இல்லாத ஒரு நிறுவனமாகத் தான் இருந்தது.

ஆனால் சில நிர்வாக முடிவுகள் மற்றும் நேரம் போன்றவை இந்த நிறுவனத்திற்கு பாதகமாக அமைந்தன.

இந்தியாவில் சுற்றுலாத் துறை நல்ல வளர்ச்சியடையும் என்ற எண்ணத்தில் மிக அதிகமாக கடன் வாங்கி பல ஹோட்டல் கிளைகளை உருவாக்கினர்.

ஆனால் 2007ல் பொருளாதார தேக்கங்கள் வந்த பிறகு வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

அதே போல் உள்நாட்டிலும் ஆடம்பர ஹோட்டல்களில் தாங்கும் அளவிற்கு பணப்புழக்கம் இல்லை.

இந்த இரண்டு காரணிகளும் சேர்ந்து கடன் வாங்கி முதலீடு செய்த கிளைகளில் தேவையான அளவு வருமானத்தைக் கொடுக்கவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி அறிக்கைகளை பார்க்கும் போது நிறுவனத்தின் வியாபாரம் கூடியுள்ளதை பார்க்க முடிந்தது. நடைமுறை லாபமும் கூடியுள்ளது. (Operating Profit)

ஆனால் அதிக அளவு கடனுக்கான வட்டியின் காரணமாக நிகர லாபம் குறைந்துள்ளது.

தற்போதைக்கு 5000 கோடி அளவு கடன் உள்ளது. LIC மற்றும் SBI போன்ற வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் நிறுவனம்  மறு சீரமைப்புக்கு சென்றது.

அதனால் JP Morgan நிதி நிறுவனம் மூலம் தனது ஹோட்டல் கிளைகளை விற்று கடனை திருப்பி செலுத்த ஒப்பந்தம் போட்டது. இந்தக் கடனுக்கான வட்டி 18% என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த ஒப்பந்தத்தின் படி, ஒரு வருடத்திற்குள் லீலா எதையெல்லாம் விற்க முடியுமோ விற்று கடனை அடைத்துக் கொள்ள வேண்டும். அப்படி விற்கா விட்டால் JP Morgan நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொள்ளும்.

ஆனாலும் பொருளாதார சூழ்நிலைகளில் பெரிய அளவில் இன்னும் முன்னேற்றம் இல்லாததால் ஹோட்டல்களை வாங்க ஆளில்லை.

அண்மையில் தான் பிரபல கேரள முதலீட்டாளர் ரவி பிள்ளை கோவளம் ஹோட்டல் கிளையை 500 கோடிக்கு வாங்கினார்.

அடுத்து தற்போது, கோவா லீலா ஹோட்டலை MetTube என்ற மலேசிய நிறுவனம் 742 கோடிக்கு வாங்கியுள்ளது. இன்னும் 2000 கோடிக்கு விற்க வேண்டியுள்ளது.

இதனால் கடனின் ஐந்தில் ஒரு பகுதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முக்கியமான ஹோட்டல்களை விற்பதால் நிறுவனத்தின் 25% வருமானம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

சில சமயங்களில் பெரிய நிறுவனங்கள் கூட தற்காப்பு இல்லாமல் முதலீடுகளை விரிவாக்குவது ஆச்சர்யமாக உள்ளது.

தொடர்பான கட்டுரைகள்:
ஆம்டேக் ஆட்டோவை விற்க வேண்டிய தருணம்

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக