ஞாயிறு, 17 மே, 2015

தெரியாத பல விடயங்கள் தரும் செங்கிஸ்கான் புத்தகம்

உலகம் சுற்றும் வாலிபன் மோடிஜி அவர்கள் மங்கோலியாவில் இருக்கும் போது இந்த பதிவை எழுதுவது பொருத்தமாக அமைந்துள்ளது.


வரலாற்று புத்தகங்களில் ஆர்வம் இருப்பதால் கடந்த விடுமுறையில் இந்தியா சென்ற பொழுது வாங்கிய புத்தகங்களுள் ஒன்று செங்கிஸ்கான்.நேற்று கிட்டத்தட்ட 6000 கோடி ரூபாயை மோடி மங்கோலியா கட்டமைப்பிற்காக அறிவித்துள்ளார். தற்போதைய நிலையில் மங்கோலியா மற்ற நாடுகளின் உதவியில் தான் வாழ்கிறது.

இந்தியாவை பொறுத்த வரை இது சீனாவை சுற்றி இருக்கும் நாடுகளை வளைத்து போடும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் ஒரு காலத்தில் சீனாவையே சுற்றி வளைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தது மங்கோலியா.

செங்கிஸ்கான் புத்தகம் செங்கிஸ்கானின் வரலாற்றை மட்டும் சொல்லாமல் மங்கோலியாவின் வரலாறு மற்றும் கலாசாரத்தையும் சேர்த்து சொல்வது தான் இந்த புத்தகத்தின் சிறப்பு என்றும் சொல்லலாம்.

கிட்டத்தட்ட மங்கோலியர்களின் வாழ்க்கை முறையே நாடோடி முறை தான். கோபி பாலைவனமும் அருகில் தான் உள்ளது. இதனால் விவசாயமும் பெரிதளவு கிடையாது. ஒரு வறண்ட பூமி. குதிரை மேய்ப்பதே பிரதான தொழில்.

இன்று கூட மங்கோலியாவின் மக்கள் தொகை பத்து லட்சம் தான். அப்படி என்றால் பல நூறு வருடங்களுக்கு முன் இதனை விட மிகவும் குறைவாக இருந்திருக்கும்.

அந்த குறைவான மக்கள் தொகையிலும் பல இனக்குழுக்கள் இருந்தன. அவ்வளவு மங்கோலியா பிளவு பட்டுக் கிடந்தது.

அந்த சூழ்நிலையில் ஒரு சிறு இனக்குழுவின் தலைவன் மற்ற குழுவை வீழ்த்திய பிறகு கவர்ந்து கொண்டு வந்த பெண்ணிற்கு பிறந்தவர் தான் செங்கிஸ்கான்.

செங்கிஸ்கானுக்கு முன்பு வரை மங்கோலியா என்ற ஒருங்கிணைக்கப்பட்ட நாடே கிடையாது. இதனால் மங்கோலியா வரலாறும் செங்கிஸ்கான் என்ற நபரிலிருந்தே ஆரம்பிக்கிறது என்றும் சொல்லலாம்.

இது வரை அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன் தான் மிகப்பெரிய பேரரசர்கள் என்று கேள்வி பட்டிருப்போம். ஆனால் அவர்களை எல்லாம் விட செங்கிஸ்கான் நான்கு மடங்கு அதிக நிலப்பரப்பு பகுதியை ஆண்டார் என்பது அறிந்திராத ஒன்று.

ஒரு சிறு இனக்குழு தலைவனாக இருந்து அவ்வளவு பெரிய சீனாவை கூட தூக்கி சாப்பிட்டு இருந்தார்.

மங்கோலியர்களுக்கு பயந்தே சீன பெருஞ்சுவர் கட்டப்பட்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். குள்ளர்களாக இருந்து கொண்டு சீனாவிற்கு பயங்கர குடைச்சல் கொடுத்து கொண்டு இருந்தார்கள்.

இவரது பேரரசு கொரியா, சீனா, என்று கிழக்கில் ஆரம்பித்து மேற்கில் ஆப்கானிஸ்தான், ஈரான், ரஷ்யா வரை வியாபித்து இருந்தது என்றால் நீளத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.அதிலும் செங்கிஸ்கான் என்பவன் வீரன் என்பதை தாண்டி போரில் அவன் செய்த பல மதி நுட்பங்கள் பெரிதும் கவர்கின்றன.

பெண்களை கடத்தி செல்லும் மங்கோலிய பழக்கத்தை ஒழித்தல், வெல்லும் இடங்களில் மதம் உட்பட பலவற்றை சுதந்திரமாக அனுமதித்தல் என்ற அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் அந்த காலத்திலே நாகரீக ஆட்சியை நியாபகப்படுத்துகின்றன. செல்லும் இடங்களில் முகலாயர்கள் போல் கலாச்சாரங்களை அழிக்காமல் அவற்றை தமக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டார்.

இவ்வாறு பல தகவல்களை இந்த புத்தகம் அள்ளித் தருகிறது.

முதல் பாதியில் கொஞ்சம் மெதுவாக செல்வது போல் தோற்றமளித்தாலும் மங்கோலியாவை விட்டு வெளி வந்து படையெடுப்பை ஆரம்பிக்கும் போது புத்தகம் சுவராஸ்யமாகவே செல்கிறது.

வரலாற்று விடயங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் இந்த புத்தகத்தை விரும்பி படிப்பார்கள் என்று நினைக்கிறோம். அதே வேளையிலும் தனி மனிதனாக மனத் தைரியத்தையும் புத்தகம் வரவழைக்கிறது என்று சொல்லலாம்.

கீழே உள்ள இணைப்புகளில் ஆன்லைன் மூலம் புத்தகம் கிடைக்கிறது.


இதற்கு முன்பு மதன் எழுதிய கி.மு. கி.பி என்ற வரலாற்று புத்தகத்தை பற்றி விமர்சனம் எழுதி இருந்தோம்.

பார்க்க: வரலாற்றை வேகமாக திருப்பி பார்க்கும் கி.மு, கி.பி

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக