புதன், 6 மே, 2015

ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 4

அறியாமல் நாம் செய்யும் முதலீடுகள் தான் ஏமாற்றுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் முந்தைய வரலாற்று ஊழல்கள் நமக்கு படிப்பினைகள் என்ற நோக்கத்தோடு ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகளை தொடராக தொடர்கிறோம்.


முந்தைய பாகத்தை இந்த இணைப்பில் படித்த பிறகு இங்கு தொடரவும்.
ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 3

இந்த சூழ்நிலை தான் ஹர்ஷத் மேத்தாவிற்கு பெரும் பணத்தை திரட்டுவதற்கு சாதகமாக அமைந்தது. மனிதர் இடையில் புகுந்து விளையாடி விட்டார்.



வங்கிகள் தங்களுக்கு தேவையான பத்திரங்களையும் பணத்தையும் பெறுவதற்கு இரண்டு வழிமுறைகள் இருந்து வந்தது.

ஒன்று,
Ready Forward Deal

மற்றொன்று ,
Bank Receipts

இந்த இரண்டு முறைகளிலும் சில குறைகள் இருந்தன. இதனை ஹர்ஷத் மேத்தா சமார்த்தியமாக பயன்படுத்திக் கொண்டார்.

முதல் முறையான Ready Forward Deal என்பது குறுகிய காலத்திற்கு வங்கிகள் தங்களுக்குள் கடன்களை பரிமாறிக் கொள்வது.

ஒரு வங்கி தங்களிடம் உள்ள பத்திரங்களை அடமானமாக வைத்து மற்றொரு வங்கியிடம் பணத்தை பெறும். குறுகிய காலத்திற்கு பிறகு ஒரு குறிப்பிட்ட வட்டியை கொடுத்து பத்திரங்களை மீண்டும் பெற்றுக் கொள்வார்கள்.

இதில் உள்ள ஓட்டை என்னவென்றால் பணமும் பத்திரமும் தரகர்கள் வழியாகத் தான் செல்லும். தாங்கள் யாரிடம் அடகு வைக்கிறோம் என்று வங்கிகளுக்கு தெரியாது.

மேலும் தரகர்கள் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்பதால் வங்கிகளும் தரகர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்து இருந்தன.

இதனால் பத்திரங்களை வாங்காமலே கூட பணத்திற்கான செக்கை கொடுத்து விடுவார்கள். அதன் பிறகு சிறிய கால தாமதத்தில் கடன் பத்திரங்களை பெற்றுக் கொள்வார்கள்.



இதில் உள்ள தவறு எளிதில் கண்டு பிடிக்க முடியாத அளவு இருந்ததால் சில வங்கிகளின் உயர் அதிகாரிகளும் வேண்டும் என்றே தாமதம் ஏற்பட உடந்தையாக இருந்தார்கள். அவர்கள் ஹர்ஷத் மேத்தாவிடம் பலனை பெற்றுக் கொண்டார்கள். இதில் எஸ்பிஐ போன்ற பெரிய வங்கிகளின் உயர் அதிகாரிகளும் அடங்கும்.

இந்த கால தாமத்தை தான் ஹர்ஷத் மேத்தா நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

இது போக மேலும் ஒன்றும் மேத்தாவிற்கு சாதகமாக அமைந்தது.

நாம் அனுப்பும் காசோலைகளுக்கு வங்கிகளில் Account Payee என்று பயன்படுத்துவோம். அதாவது நமது கணக்குகளுக்கு மட்டுமே அந்த பணம் தரப்படும். இதனால் பணம் வந்து சேர ஓரிரு நாள் கால தாமதங்கள் கூட ஆகும்.

ஆனால் வங்கிகளுக்கு இடையே நடைபெறும் பணப்பரிவரத்தனைகள் மிகப்பெரிய அளவு என்பதால் வட்டியும் அதிக அளவு இருக்கும். இதனால் சில நாட்களிலே பெரிய இழப்பு ஏற்பட்டு விடும். இதனைத் தடுப்பதற்கு Privileged Customers என்ற முறையில் Account Payee முறையை உபயோகிப்பதில்லை.

இதனையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஹர்ஷத் மேத்தா பணத்தை தனது கணக்கில் மாற்றிக் கொள்வார்.

அந்த பணத்தை பங்குச்சந்தைகளில் ஹர்ஷத் மேத்தா சந்தைகளில் முதலீடு செய்வார். அவ்வாறு முதலீடு செய்து கொண்டே பங்குகளின் விலைகளை கணிசமாக உயர்த்துவார்.

அவர் ஒரு பங்குச்சந்தை வல்லுநராகவே அறியப்பட்டு இருந்ததால் அவரை நம்பி சில்லறை முதலீட்டாளர்கள் பின் தொடர ஆரம்பித்தார்கள். அவர்களும் முதலீடு செய்ய பங்கு விலை கணிசமாக கூடியது.

எப்படி என்றால், ACC என்ற பங்கை 300 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய்க்கு கூட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதற்கு Replacement Theory என்பதையும் பயன்படுத்தினார். பழைய நிறுவனங்களை மதிப்பீடும் போது புதிய துறையில் அதே அளவு நிறுவனம் ஆரம்பிக்க எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டு மதிப்பிட வேண்டும் என்று விளக்கம் கொடுத்தார்.



இப்படி சதுரங்க வேட்டை பட ஸ்டைலில் மனிதர் உண்மைகளையும் கலந்து விளக்கம் கொடுத்ததால் சிறு முதலீட்டாளர்களும் நம்பினர்.

அப்படியே பங்கை கூட்டி விட்டு ஒரு கட்டத்தில் விற்று விடுவார். அவருக்கு கொள்ளை லாபம். அவரை நம்பி தொடர்ந்தவர்களுக்கு நாமம்.

அதே சமயத்தில் வங்கிகள் கேட்கும் சமயத்தில் திருப்பி பணத்தை கொடுத்து விடுவார். ஆனால் அந்த இடைவெளியில் பெரிய அளவு லாபம் சந்தித்து இருப்பார்.

இருந்தாலும் இவர் முதலீடு பல மடங்குகளில் பெருக பெருக ஒரு கட்டத்தில் கடன் பத்திரங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது.

அதற்கு தான் அடுத்த முறையை பின்பற்ற தொடங்கினார்.

அடுத்த பாகத்தில் தொடரும்...

ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 5

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக