திங்கள், 4 மே, 2015

ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 1

இந்திய பங்குச்சந்தையில் ஊழல் என்பது ஒவ்வொரு கால இடைவெளியிலும் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதிகம் பாதிக்கப்படுவது நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்கள் தான்.

அறியாமல் நாம் செய்யும் முதலீடுகள் தான் ஏமாற்றுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் முந்தைய வரலாற்று ஊழல்கள் நமக்கு படிப்பினைகள் என்ற நோக்கத்தோடு பங்குச்சந்தையில் ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகளை தொடராக தொடர்கிறோம்.




நாம் தனிப்பட்ட முறையில் பங்குச்சந்தையில் குறுகிய கால வர்த்தகங்களில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருப்பதற்கு ஹர்ஷத் மேத்தா போன்ற மோசடி பேர்வழிகளும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

பங்குச்சந்தையில் வர்த்தகம், முதலீடு என்று இரு பிரிவுகள் உண்டு. இதில் வர்த்தகம் என்பது குறுகிய காலங்களில் பங்குகளை வாங்கி விற்று காசை சம்பாதிப்பது.

பார்க்க:  முதலீட்டிற்கும், ட்ரேடிங்கிற்கும் என்ன வித்தியாசம்? (ப.ஆ - 17)

வர்த்தகத்தில் பங்கு விலைகளே அதிக முக்கியத்துவம் பெறும். நிறுவன அடிப்படைகள் எப்படி இருந்தாலும் கவலை இல்லை.

இது வரை பங்கு விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்து சில நியதிகளை வரைபடங்களாக உருவாக்கி இருப்பார்கள்.

அதன்படி தான் எதிர்காலத்தில் பங்கு விலைகள் மாற்றமடையும் என்பது அனுமானம். இதனைத் தான் Technical Analysis என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் என்னிடமோ, உங்களிடமோ மிகப்பெரிய அளவில் பணம் இருந்தால் நாமே செயற்கையாக இந்த விலை மாற்றத்தை உருவாக்கி விட முடியும் என்பதே உண்மை நிலை.

இந்த செயற்கையான மாற்றத்தை முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உலக அளவில் புகழ் பெற்ற ஒரு நபர் தான் ஹர்ஷத் மேத்தா.

இவரது மோசடிகளை படித்தாலே நாம் பங்குச்சந்தை பாடத்தில் பாதி கரையை தாண்டியதாக நினைத்துக் கொள்ளலாம்.

சதுரங்க வேட்டை என்ற படத்தில் ஹீரோ சொல்வார்.

ஒருத்தனை நம்ப வைக்க வேண்டும் என்றால் ஆசையை தூண்டனும். தப்பு செய்கையில் உண்மையும் கலந்தும் இருக்கணும் என்று டயலாக்குகள் வரும்.

இந்த டயலாக்குகள் ஹர்ஷத் மேத்தாவின் மோசடிக்கும் நன்கு பொருந்தும்.



இவரது தவறுகள் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவாறே இருந்தது. கண்டுபிடித்த பிறகும் தவறுகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது கடினமாக இருந்தது. அந்த  அளவு தவறாக அறிவை செலுத்திய புத்திசாலி.

ஆனால் இவரது மோசடிகளுக்கு பலியானது அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் தான்.

இவரது மோசடிகளை சில பாகங்களில் தொடராக பார்ப்போம்.

இந்திய பொருளாதார வரலாற்றில் 1991யை எளிதில் மறக்க முடியாது.

அது வரை மூடிய பொருளாதரத்தை பின்பற்றிய முக்கால் பாதி கம்யூனிச நாடாகத் தான் இந்தியா இருந்து வந்தது. அப்பொழுது ஒரு தனியார் நிறுவனம் ஆரம்பிப்பது என்பது எளிதல்ல. அதற்கு ஏகப்பட்ட இடங்களில் லைசென்ஸ் வாங்க வேண்டி இருந்தது.

அதே போல் வெளிநாட்டு முதலீடுகள் பங்குச்சந்தையில் சுத்தமாக அனுமதிக்கப்பட்டதில்லை.

இதற்கு பிரிட்டிஷ் அரசு வியாபாரம் என்ற ஒரே காரணத்தை வைத்தே நம்மை அடிமைப்படுத்தி விட்டதும் ஒரு காரணமாக இருந்தது.

ஆனாலும் 40 ஆண்டுகளாக இருந்த இந்த பொருளாதார முறை பெரிதளவு வெற்றி பெற வில்லை. இறுதியில்  90களில் நம்மிடம் இருந்த தங்கத்தை அடமானம் செய்து பெட்ரோல் வாங்கி கொள்ளும் நிலைக்கு நம்மை அழைத்து சென்றது.



91ல் ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ்  இனியும் தாங்காது என்று கருதி மன்மோகன் சிங் உதவியுடன் பொருளாதரத்தை திறக்க வைத்தார்.

அதன் பிறகு தான் தொழில்களில் அரசின் தலையீடுகள் பெருமளவு குறைக்கப்பட்டன. வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன.

இதனால் இந்திய பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும் என்ற நம்பிக்கை அப்பொழுது பரவலாக காணப்பட்டது.

ஆனாலும் பொருளாதாரம் திறக்கப்பட்டதே தவிர நமது வங்கிகள், நிதி பரிமாற்றங்கள் போன்றவற்றில் உள்ள குறைகள் அப்படியே தான் இருந்தன.

இந்த இரண்டு சூழ்நிலைகளையும் ஹர்ஷத் மேத்தா அழகாக பயன்படுத்திக் கொண்டார்.

அடுத்த பாகத்தில் தொடரும்.
ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 2

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக