ஞாயிறு, 24 மே, 2015

NRIக்கள் பங்குசந்தையில் முதலீடு செய்வது எளிதாகிறது

இதற்கு முன் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் டிமேட் கணக்கு திறப்பது எப்படி?  என்பது பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தோம்.




அதில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தோம்.
"ஒருவர் ஆறு மாதத்திற்கு மேல் வெளிநாட்டில் இருந்தாலே வெளிநாட்டு வாழ் இந்தியர் என்று அழைக்கப்படுவார். இந்த மாதிரியான சூழ்நிலையில் விதிகளின் படி பழைய டிமேட் கணக்கை பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக ரிசர்வ் வங்கி கூறிய வழிமுறைகள் படி புதிதாக சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்."


அதாவது வெளிநாட்டு இந்தியர்கள் செய்யும் முதலீடுகள் அந்நிய முதலீடுகளாகவே கருதப்படும். 

இதனால் ஏகப்பட்ட விதி முறைகள். புதிய டீமேட் கணக்கு திறப்பதற்கு பல படிவங்கள், பல கையெழுத்துக்கள் என்று பல சிக்கல்கள் இருந்தன. அத்துடன் அந்நிய முதலீடுகள் பல பங்குகளில் அனுமதிக்கப்படாததால் நினைந்த பங்குகளில் முதலீடு செய்ய முடியாது.

இந்த காரணத்தால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மாட்டார்கள். அல்லது ஊரில் இருக்கும் நெருங்கிய உறவுகளின் பேரில் முதலீடுகளை தொடர்வார்கள்.

இது ஒரு முரண்பட்ட விடயம் தான்.

வெளிநாடு செல்லும் பலரும் அங்கு நிரந்தரமாக தங்குவதில்லை. ஒரு காலத்திற்கு பிறகு தாய் நாட்டிற்கு திரும்பி விடுகிறார்கள். அவர்களுக்கு அந்நிய முதலீடுகள் என்ற பெயரில் பல நிபந்தனைகளை விதிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது.

குறைந்த பட்சம் இந்திய பாஸ்போர்ட் வைத்து இருக்கும் குடிமக்களுக்கு இந்த விதி முறை தேவையில்லை என்றே கருதப்பட்டது.

இதனால் பங்குச்சந்தைக்கு வரும் பெருமளவு பணமும் கிடைக்க முடியாமலே சென்று வந்தது.

மோடி கடந்த முறை அமெரிக்காவிற்கு சென்ற போது அங்கு வசிக்கும் இந்தியர்கள் இதனை மாற்றக் கோரி கோரிக்கைகளை முன் வைத்தனர்.



அதனை தற்போது மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

புதிய விதியின் படி NRIக்கள் FDI என்று சொல்லப்படும் அந்நிய முதலீட்டார்களாக கருதப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு விதத்தில் சொல்வதாக இருந்தால் அவர்கள் சில பங்குகளில் முதலீடு செய்வதற்கு இருந்த தடைகள் நீங்கி உள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் டிமேட் கணக்கு திறப்பது எப்படி? பதிவில் முதலீடு செய்வதற்கு NRE, NRO, NRE PINS, NRO Demat என்று நான்கு கணக்குகளை வைத்து இருப்பது அவசியமானது என்று கூறி இருந்தோம்.

தற்போது அந்நிய முதலீடு தொடர்பான நிபந்தனைகள் NRIக்களுக்கு நீக்கப்பட்டு உள்ளதால் இதில் பல கணக்குகள் திறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போக வாய்ப்புகள் உள்ளது. அது தொடர்பாக இன்னும் முறையான அறிவிப்பு வரவில்லை. வந்த பிறகு பதிவிடுகிறோம்.

ஆக, இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. வரவேற்போம்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக