வெள்ளி, 15 மே, 2015

ஆசியாவின் இளவயது டாப் பணக்காரார் சென்னையில் இருந்து..

சிங்கம் படத்தில் ஒரு டயலாக்  வரும். இவ்வளவு நாள் எங்கய்யா  இருந்தே என்று விஜயகுமார் சூர்யாவிடம் கேட்பார்.


அது போல் தான் இந்த செய்தி ஆச்சர்யமாக இருந்தது.

சினிமா, கிரிக்கெட் போன்றவற்றை தாண்டி மற்ற துறை பிரபலங்கள் உலக அளவில் கவனிக்கப்பட்டு அதன் பிறகு தான் சொந்த நாட்டில் அறிமுகமாகிறார்கள்.அப்படிப்பட்ட ஒருவரை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நாம் ஆவணங்கள் தயாரிக்க அதிகம் பயன்படுத்துவது மைக்ரோசாப்ட் வோர்ட் போன்ற ஆபீஸ் மென்பொருட்கள். இதில் மைக்ரோசாப்ட் தான் மோனோபோலி.

உலகில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருளுக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது Celframe office என்ற மென்பொருள்.


அதனை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் இந்தியாவில் இருந்து. அதுவும் சென்னையில் பிறந்தவர்.

அவர் பெயர் அருண் புதூர்.

ஆறு வயதில் அவர் குடும்பம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாறியது.

பொதுவாக இந்தியாவில் தொழில் அதிபர் ஆக வேண்டும் என்றால் குடும்ப பின்புலம் அதிகம் தேவை. ஆனால் இவர்களோ ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினர் தான்.

படித்தது கூட சாதரான பள்ளிக் கூடங்கள் தான். ஐஐடி போன்ற பிரபல பின்புலம் கிடையாது.

ஆனால் அவர் தான் தற்போது ஆசியாவின் 40 வயதிற்கு உட்பட்ட மிகப் பெரிய பணக்காரராகி உள்ளார்.

ஆரம்பத்திலே மற்றவர் கீழ் வேலை பார்க்கும் எண்ணம் இல்லாமல் சுயதொலிலில் தான் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்.

அதுவும் ஆரம்பம் என்றால், பதி மூன்று வயதிலே ஆரம்பித்து விட்டது.

பக்கத்துக்கு வீட்டுக் காரருடன் பார்ட்னர் சேர்ந்து வொர்க்க்ஷாப் ஆரம்பித்தார். பள்ளிப் படிப்புடன் பகுதி வேலையாக அதையும் கவனித்து வந்தார். அதனால் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒரு பைக்கை கழற்றி பொருத்தும் திறமை உள்ளதாக கூறி உள்ளார்..

அதன் பிறகு நாய்குட்டிகள் இனப்பெருக்கம் செய்து வியாபரம் என்று சிறு சிறு தொழில்களாக செய்து வந்தார்.

இதனால் பணம் என்பதன் புழக்கமும் மதிப்பும் கொஞ்சம் வேகமாகவே சிறு வயதில் தெரிய வந்தது.

இவர் கல்லூரி படிப்பை முடிக்கும் போது மைக்ரோசாப்ட் ஆபீஸ் மட்டுமே தன்னிச்சையாக செயல்பட்டு வந்தது. அதற்கு மாற்றாக SUN போன்ற நிறுவனங்கள் ஒரு மென்பொருளை உருவாக்க முயன்றும் தோல்வியுற்று வந்தன.

அந்த நிலையில் இவர் அதற்கு மாற்றாக ஒரு மென்பொருளை உருவாக்க முயன்றார்.

இவ்வளவிற்கும் இவரது படிப்பு மென்பொருள் சாராத B.Com படிப்பு தான். ஆனால் கணினி பயிற்சி நிறுவனத்தில் ஆறு மாதம் வேலை பார்த்தது இவருக்கு சாதகமாக அமைந்தது. அந்த அனுபவத்தை வைத்து நண்பர்கள் உதவியுடன் மென்பொருளை உருவாக்கினார்.ஆனாலும் யார் இவரது மென்பொருளை வாங்குவது? கணினிகளை உருவாக்கும் DELL, HP போன்ற நிறுவனங்கள் இவரது மென்பொருளை பயன்படுத்த முன்வரவில்லை.

அதனால் அரசு சார்ந்த துறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளின் அரசு துறைகளுக்கு தேவையான மென்பொருளை கொண்டு வர முயற்சித்தார்.

அரசு துறைகளுக்கு மைக்ரோசாப்டை விட 50% குறைவான தொகையில் மென்பொருளை விற்றார். அவர்கள் நம்பிக்கையை பெற்ற பிறகு கட்டணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றினார்.

அது வரை மைக்ரோசாப்ட் 2% அளவு மட்டுமே மென்பொருளை விற்றுக் கொடுக்கும் டீலர்களுக்கு கொடுத்து வந்தது. இவர் தனது மென்பொருளுக்கு 40% கமிசன் கொடுக்க முன்வந்தார்.

இப்படி வியாபரத்தன்மையை நுணுக்கமாக பயன்படுத்தினார். வியாபரமும் நல்ல நிலைக்கு சென்றது.

தற்போது இவரது நிறுவனம் மைக்ரோசாப்ட்டிற்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 25,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு கணக்கிடப்பட்டு உள்ளது. ஆசியாவின் இளவயது பெரிய பணக்காரராகி உள்ளார்.

இந்த நிலையில் தனது முதலீடுகளை சுரங்கம், ஏர்லைன்ஸ் போன்றவற்றின் பக்கம் திருப்பி விட்டுள்ளார்.

சீனா போன்ற நாடுகள் தங்களது நாட்டு நிறுவனங்களான அலிபாபா போன்ற நிறுவனங்களை ஆபீஸ் மென்பொருட்கள் தயாரிக்க முனைப்பாக ஊக்குவிக்கின்றன.

ஆனால் இந்திய அரசு அவ்வாறு எந்த ஊக்குவிப்பையும் இவரது நிறுவனத்திற்கு வழங்கவில்லை.

இதனால் இவரது நிறுவனம் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் இந்தியாவில் இன்னும் ஜொலிக்காதது வருத்தம் தான்.

இருந்தாலும் இவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

  1. நமக்கு அரசியலும், சினிமா வும் தான் முக்கியம் நண்பரே...வெளிநாட்டினர் பாரட்டிய பின்னர் தான் நமக்கு புத்தி வரும்..அதும் கடமைக்கு தான் பாராட்டுவோம்...

    பதிலளிநீக்கு
  2. எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தை நடத்துவது என்பது மிகப்பெரிய செயல். முன்மாதிரியாக திகழ்பவர்கள் பட்டியலில் இவரும் இணைந்துகொண்டார். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் நண்பரே! கருத்துக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு