செவ்வாய், 26 மே, 2015

வொடபோன் மிகப்பெரிய IPOவாக இந்திய பங்குச்சந்தையில்..

VODAFONE என்பது பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த டெலிகாம் நிறுவனம்.


ஐரோப்பிய சந்தையில் பிரபலமாக இருந்த இந்த நிறுவனம் 2007ல் இந்தியாவிற்குள் நுழைந்தது.



அப்பொழுது இந்தியாவில் டெலிகாம் துறையில் முழுவதுமாக வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட முடியாததால் எஸ்ஸார் நிறுவனத்துடன் இணைந்து GSM சந்தைக்குள் நுழைந்தது.

அதனால் 74% பங்குகள் வொடபோன் நிறுவனத்திடமும், மீதி பங்குகள் எஸ்ஸார் நிறுவனத்திடமும் இருந்தன.

அதன் பிறகு அந்நிய முதலீடு டெலிகாம் துறையில் முழுவதுமாக அனுமதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 2013ம் வருடம் எஸ்ஸார் நிறுவனத்திடம் இருந்த பங்குகள் அனைத்தையும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கி கொண்டது.

இது பங்குச்சந்தைக்கு நுழைய வொடபோன் நிறுவனம் தம்மை தயார்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையாகவே கருதப்பட்டது.

தற்போது வொடபோன் இந்தியா பிரிவு தலைவர் இந்திய பங்குச்சந்தைக்குள் நுழையும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆனால் இந்திய அரசுடன் உள்ள வரி பிரச்சினை தீர்ந்த பிறகு வருவதாக அறிவித்துள்ளார்.

2007ல் இந்தியாவிற்குள் நுழைந்த போது வொடபோன் சில நிறுவனங்களை வாங்கி தான் டெலிகாம் துறைக்கு வந்தது.

அந்த பரிமாற்றங்களின் போது 8000 கோடி அளவு வரி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியது. ஆனால் அதனை வொடபோன் ஏற்காததால் பிரச்சினை நீடித்து வந்தது.

அந்த தொகை வரி மற்றும் அபராதம் போன்றவற்றுடன் சேர்ந்து 20,000 கோடியாக மாறி உள்ளது.

இந்த பஞ்சாயத்து முடிந்த பிறகு தான் IPO வரும் என்று ட்விஸ்ட் வைத்துள்ளார்.

IPOவை அறிவித்து அதற்கான பணிகளை துவங்கி விட்டதால் சீக்கிரம் வரி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

வொடபோன் இது வரை இந்தியாவில் 1,25,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து உள்ளார்கள்.

தற்போது நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கூட 25,000 கோடி அளவு முதலீடு செய்து உள்ளார்கள்.

கடந்த வருடம் வரை ஒன்பது வட்டங்களில் மட்டும் ஸ்பெக்ட்ரம் சேவை கொடுத்து வந்தவர்கள் தற்போது 23 வட்டங்களுக்கு அனுமதி பெற்றுள்ளார்கள்.

இப்படி, இந்திய சந்தையை கொஞ்சம் சீரியஸாகவே அணுகுகிறார்கள்.

வளர்ந்து வரும் இந்திய டெலிகாம் துறையில் குறைவான அளவே நிறுவனங்கள் பங்குச்சந்தையில் உள்ளன. அதில் நமக்கு இன்னொரு வாய்ப்பும் வொடபோன் வழியாக கிடைப்பது நல்ல நிகழ்வு.

நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் ஒரு நல்ல பங்காக வொடபோன் இருக்க வாய்ப்புள்ளது. அதற்கு பங்கின் விலையை எவ்வாறு நிர்ணயிக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

காத்திருப்போம்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக