திங்கள், 18 மே, 2015

மோடியின் கொரிய விஜயம் - ஒரு நேர் அனுபவம்

நேற்று மோடி கொரியா வந்து இருந்தார். தூதரகம் மூலம் கொரியாவில் வசிக்கும் இந்தியர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அதனால் நமக்கும் வாய்ப்பு கிடைத்தது.


இது தான் பிரதமர் போன்ற பெரிய தலைவர்களின் கூட்டங்களுக்கு செல்லும் முதல் நிகழ்வு என்பதால் கொஞ்சம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.1500 பேர் வந்திருப்பதாக கணக்கு காட்டப்பட்டு இருந்தது. கூட்டத்தை பார்க்கும் போது வந்து இருக்கலாம் என்று தான் நினைக்கிறோம். அதில் அதிக அளவு Volunteers என்ற பெயரில் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர்.

ஒரு கட்டத்தில் Volunteers மோடி மோடி என்று கோஷம் போட ஆரம்பிக்க சும்மா இருந்தால் நம்மை ஏதாவது நினைத்து விடுவார்களா என்று மற்றவர்களும் கோஷம்  போட ஆரம்பித்தனர்.

இங்கு தான் மோடியின் விளம்பர யுத்தியை பார்க்க முடிந்தது.

2010லும் மன்மோகன் சிங் கொரியாவிற்கு வந்தார். அவர் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது என்ற அளவிற்கு சென்று விட்டார்.

அந்த அளவு மௌனமும் ஆகாது, அதே நேரத்தில் இந்த அளவு விளம்பரமும் சில நேரங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றங்களை தோற்றுவித்து விடும். இடைப்பட்ட நிலை நன்றாக இருக்கும்.

மோடியை வருகை பற்றிய செய்திகள் கொரிய ஆங்கில பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகவே இடம் பெற்று இருந்தன. அந்த வகையில் சர்வதேச சமூகத்திலும் அவர் மீது ஒரு எதிர்பார்ப்பு இருப்பதை அறிய முடிந்தது.

மோடியின் மீது எமக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் நமது நாட்டின் பிரதமருக்கு ஒரு வெளிநாட்டு பத்திரிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது மகிழ்வைக் கொடுத்தது.

உண்மையிலே அவரது பயண ஏற்பாடுகள் ஓய்வின்றி தான் இருந்தன. ஏர்போர்ட்டில் இறங்கியவர் கொரிய போர் வீரகள் நினைவிடத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின் இந்தியர்கள் கூட்டம். கொரிய ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை, வர்த்தக கூட்டம் என்று பிஸியாகவே இருந்தார்.

அந்த வகையில் மனிதர் நல்ல ஆக்டிவ்.

கொரிய ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர் அளவு முதலீடுகள் கையெழுத்திடப்பட்டன. அநேகமாக சாம்சங், எல்ஜி, ஹயுண்டாய் போன்ற நிறுவனங்கள் இன்னும் அதிக அளவில் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட மிகப்பெரிய முதலீடான போஸ்கோவின் ஒரிசா முதலீடு கைவிடப்பட்டதாக தெரிகிறது.

விளம்பரம் என்பதை தாண்டி மற்றவற்றில் அவரது நடவடிக்கைகள் நன்றாகவே இருந்தது.வெளிநாட்டு தலைவர்களுடன் இருக்கும் போது ஒரு வித விறைப்பு தன்மை தெரிகிறது. அது ஒரு கட்டத்தில் செயற்கையாக தோற்றமளிக்க செய்கிறது. முன் அனுபவம் இல்லாத வேளையில் அவர் மீதான அதிக எதிர்பார்ப்பும் அப்படி மாற்றி இருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது.

இன்று இந்தியா திரும்புகிறார். கொஞ்சம் இந்தியாவில் ஓய்வெடுப்பதற்கு மட்டும் தங்காமல் எல்லா மாநிலங்களுக்கும் சென்று வாருங்கள்!

ஜெயித்து ஒரு வருடமாகியும் தமிழ்நாட்டிற்கு ஒரு தடவை கூட வந்ததில்லை. இப்படி பல மாநிலங்கள் பட்டியலில் உள்ளன. மக்களிடம் அந்நியமாகாமல் இருப்பதற்கு உள்ளூர் மக்களையும் பாருங்கள்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக