புதன், 13 மே, 2015

தங்கத்திற்கு வட்டி திட்டத்தில் சில முக்கிய தகவல்கள்

கடந்த பட்ஜெட்டில் வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் தங்கத்தை வைத்து நாட்டின் பொருளாதரத்தை வளப்படுத்த சில திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


அதில் ஒன்று தங்கத்திற்கு வட்டி கொடுக்கும் ஒரு திட்டமும் ஆகும்.

தற்போது தங்கத்தை பாதுகாக்க தான் வங்கியில் உள்ள லாக்கரில் கொண்டு வைக்கிறோம். அதற்கு வருடத்திற்கு 750 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.தங்கத்திற்கு வட்டி திட்டம் லாக்கர்களின் தேவையைக் கூட கணிசமாக குறைக்கலாம்.


லாக்கரில் வைப்பதற்கு பதிலாக வங்கிகளில் அந்த தங்கத்தைக் கொடுத்து வைத்தால் பதிலுக்கு அவர்கள் வட்டி தருவார்கள். லாக்கரில் வைத்தால் கூட பொருள் திருட்டு போனால் வங்கி பொறுப்பாகாது. ஆனால் தங்கத்திற்கு வட்டி திட்டத்தில் வங்கி தான் பொறுப்பு.

இப்படி நிறைய பயனுள்ள விடயங்கள் உள்ளன.

இதுவும் கிட்டத்தட்ட பிக்ஸ்ட் டெபாசிட் போல் தான். ஆனால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். வருடத்திற்கு கிட்டத்தட்ட 1~2% வரை கிடைக்கும்.

இதற்கு முன்னேரே இந்த திட்டம் இருந்துள்ளது. ஆனால் குறைந்த பட்சம் அரை கிலோ தங்கத்தைக் கொண்டு வைத்தால் தான் வட்டி தருவார்கள்.

தற்போது 50 கிராம் முதலே வட்டி தரலாம் என்ற யோசனை உள்ளது. இதனால் அதிக அளவில் பொது மக்கள் பயன்படுவர்.

இந்த திட்டத்தில் நகைகள் வராது என்று தெரிகிறது. இந்திய வீடுகளில் உள்ள தங்கத்தில் 25% நாணயங்களாகவோ, தங்க கட்டிகளாகவோ உள்ளது. அந்த தங்கத்தை வெளியே கொண்டு வரும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

அப்படி வெளிவந்தாலே கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சந்தையில் பணப்புழக்கம் ஏற்படுமாம்.

அந்த வகையில் மக்கள்- நாடு என்று இரண்டு பேருக்குமே இது  Win-Win பயன் தான்.

இவ்வாறு பெறப்படும் தங்கம் நகைக்கடை வியாபாரிகளுக்கு 4% அளவு வட்டியில் கடனாக கொடுக்கப்படுமாம். அவர்கள் இதில் நகையை செய்து கொள்ளலாம்.

இதனால் நகைக்கடை வியாபாரிகள் வெளிநாடுகளில் பெருமளவு தங்கம் இறக்குமதி செய்வது குறையும். இது ரூபாய் மதிப்பு வீழ்வதை கூட தடுக்கும்,

இனி தங்கத்தை முதலீட்டிற்காக வாங்குவதாக இருந்தால் ஆபரணங்களில் வாங்க வேண்டாம். கட்டிகள் அல்லது நாணயங்களில் வாங்கவது அதிக பலனை தரும். செய்கூலி, சேதாரங்களும் தடுக்கப்படும்.

10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வங்கியில் வைத்தால் பத்தாயிரம் ரூபாய் வட்டியும் கிடைக்கும். அதே நேரத்தில் தங்கத்தின் மதிப்பும் கூடும். இப்படி இரு விதமான பலன்கள் ஒரு சேர கிடைக்கும்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: