செவ்வாய், 5 மே, 2015

ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 3

அறியாமல் நாம் செய்யும் முதலீடுகள் தான் ஏமாற்றுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் முந்தைய வரலாற்று ஊழல்கள் நமக்கு படிப்பினைகள் என்ற நோக்கத்தோடு ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகளை தொடராக தொடர்கிறோம்.


முந்தைய பாகத்தை இந்த இணைப்பில் படித்த பிறகு இங்கு தொடரவும்.
ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 2

அவர் கண்டுபிடித்த ஓட்டைகள் தான் பிற்காலத்தில் இந்திய நிதித்துறை கட்டமைப்பு திருத்தப்பட்டு வலுவாக அமைவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது என்றும் சொல்லலாம்.



பெரும் பணத்தை திரட்டுவதற்கு இந்திய வங்கித் துறையில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடிக்க முடியாத அளவு தந்திரமாக பயன்படுத்திக் கொண்டார்.

தந்திரமாக என்றால் இந்த மோசடிகளை கண்டுபிடிக்க வேண்டிய ரிசர்வ் வங்கியோ, செபியோ சந்தேகப்படாத வகையில் கடைசி வரை பார்த்துக் கொண்டார்.

பத்திரிக்கைகளில் அட்டைப் படங்களில் அலங்கரித்து கருத்துக்களை சொல்லி வந்தார். பத்திரிக்கைகள் அவரை பங்குச்சந்தை குருவாகவே பார்த்தன.

ஒரு கட்டத்தில் இந்திய நிதித்துறை செயலாளர் கூட ஹர்ஷத் மேத்தாவை அழைத்து பங்குச்சந்தை நிர்வாகத்தை முன்னேற்றம் செய்ய ஆலோசனைகளை கேட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த அளவு செல்வாக்கான மனிதராக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு கார்களுடன் வலம் வந்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் பெண் எழுத்தாளர் சுசேதா தலால் தான் இந்த மோசடியை முதன் முதலில் கண்டுபிடித்து பத்திரிக்கையில் எழுதினார்.



அதுவும் இந்த மனிதர் அடிக்கடி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமையகத்திற்கு சென்றது சந்தேகத்தைக் கொடுத்தது. அதே சமயத்தில் தான் அந்த வங்கியில் பல அரசு கடன் பத்திரங்களும் காணாமல் போய் இருந்தது.

மேலும் மிருக காட்சியகத்திற்கு சென்று கரடிக்கு பிஸ்கட் கொடுத்து இது தான் வெற்றியின் ரகசியம் என்று கூறிய ஒரு போட்டோவும் தான் துப்பு துலக்க அவருக்கு உதவியது..

ஹர்ஷத் மேத்தா வங்கிகளுக்கான ஒரு ப்ரோக்கராகவும் இருந்தார் என்று முன்பு சொல்லி இருந்தோம்.

இங்கு வங்கிகளுக்கு ஏன் புரோக்கர் தேவை என்று சந்தேகம் வரலாம்.

அதற்கு ரிசர்வ் வங்கியின் விதி முறைகளும் கூட ஒரு காரணம்.

ரிசர்வ் வங்கியின் விதி முறையின் படி டெபொசிட் செய்த எல்லா பணத்தையும் வங்கிகள் கடன் கொடுத்து விட முடியாது. அதில் ஒரு பகுதியைத் தம்மிடம் எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும்.

டெபாசிட் செய்தவர்கள் திடீர் என்று வந்து கேட்டால் கொடுப்பதற்கு செய்யப்பட்ட ஏற்பாடு இது. உத்தேசமாக நாம் செய்யும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு இப்படியாகவே வைக்கப்பட்டு இருக்கும்.



அவ்வாறாக வைத்துக் கொள்ளப்படும் பணத்தை பணமாகவும் வைத்துக் கொள்ளலாம். அதே போல் அரசின் கடன் பத்திரங்களாகவும் வைத்துக் கொள்ளலாம்.

எவ்வளவு பணத்தையும் பத்திரங்களையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை  Cash Reserve Ratio (CRR), Statutory Liquidity Ratio (SLR) போன்ற விகிதங்கள் தீர்மானிக்கும். இவை ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது மாற்றப்பட்டு கொண்டே இருக்கும்.

பார்க்க:

இந்த விகிதங்களுக்கு ஏற்றவாறு வங்கிகளும் தங்கள் பண இருப்பை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த பண இருப்பை மாற்றிக் கொள்வதற்கு தான் வங்கிகள் தரகர்களை நாடுகின்றன. சில வங்கிகள் பணத்தைக் கொடுத்து பத்திரங்களை வாங்கும். சில பத்திரங்களை கொடுத்து பணத்தை வாங்கும்.

இந்த சூழ்நிலை தான் ஹர்ஷத் மேத்தாவிற்கு பெரும் பணத்தை திரட்டுவதற்கு சாதகமாக அமைந்தது. மனிதர் இடையில் புகுந்து விளையாடி விட்டார்.

அடுத்த பாகத்தில் தொடரும்.
ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 4


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக