வியாழன், 7 மே, 2015

ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 5

அறியாமல் நாம் செய்யும் முதலீடுகள் தான் ஏமாற்றுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் முந்தைய வரலாற்று ஊழல்கள் நமக்கு படிப்பினைகள் என்ற நோக்கத்தோடு ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகளை தொடராக தொடர்கிறோம்.


முந்தைய பாகத்தை இந்த இணைப்பில் படித்த பிறகு இங்கு தொடரவும்.
ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 4



இருந்தாலும் ஹர்ஷத் மேத்தாவின் முதலீடு பெருக பெருக ஒரு கட்டத்தில் கடன் பத்திரங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது.

அதற்கு தான் அடுத்த முறையை பின்பற்ற தொடங்கினார்.

Ready Forward Deal முறையில் கடன் பத்திரங்கள் நேரடியாக அடகு வைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம்.

அதே நேரத்தில் வங்கிகள் கடன்களை பெறுவதற்கு மற்றொரு முறையாக Bank Receipts என்பதையும் பயன்படுத்திக் கொள்ளும்.

இந்த முறையில் அரசு கடன் பத்திரங்களை கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. 

அதற்கு பதிலாக Bank Receipts என்ற காகித்தை கொடுத்தால் போதும். அதில் நாங்கள் கடன் பத்திரங்களை இந்த வங்கிக்கு விற்கிறோம் என்று உத்தரவாதம் தரப்பட்டு இருக்கும்.

இங்கு என்ன வசதியாகப் போனதென்றால் தேவைப்படும் போது மட்டும் வாங்கும் வங்கிக்கு பத்திரங்களை கொடுத்தால் போதும். அது வரை Bank Receipts தான் பரிமாற்றத்திற்கு அத்தாட்சி.

இந்த முறை கிட்டத்தட்ட பங்கு சந்தையிலும் Derivatives என்ற முறையில் காண்ட்ராக்ட் போடுவதை போல் தான். அதாவது பங்கினை வைத்து இருக்காமலே பங்குகளை விற்கும் முறையை போன்றது.

அதே போல் இங்கும் பத்திரமே இல்லாமல் காண்ட்ராக்ட் போடுவதற்கான வெளி இருந்தது. இதனைத் தான் ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திக் கொண்டார்.

ஆனால் இங்கு பெரிய பெரிய வங்கிகளே ஒரு காகிதத்தை உத்தரவாதமாக கொடுக்கும் போது மற்றவர்களுக்கு நம்பிக்கை வரத் தான் செய்யும்.

இந்த நிலை ஹர்ஷத் மேத்தாவிற்கு சாதகமாக போனது. போலியான Bank Receipts காகிதங்களை தயாரித்தார்.



எப்படி என்றால்,

முதலில் Bank of Karad, Metropolitan Co-operative Bank என்ற ஊர் பேர் தெரியாத வங்கிகளை கண்டுபிடித்தார்.

அங்கு வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து அவர்களை வைத்து போலியான Bank Receipts காகிதங்களை தயாரித்தார்.

அந்த காகிதங்களை மற்றொரு வங்கியிடம் காட்டி பணத்தை பெற்றுக் கொண்டார்.

அவ்வாறு பெற்ற பெரும் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்.

விதி முறைப்படி கடன் வாங்கும் வங்கிகள் தகுதி உடையவனா? என்று கொடுக்கும் வங்கிகள் சரி பார்க்க வேண்டும். ஆனால் மேத்தா அதிகாரிகளை சரிகட்டிக் கொண்டதால் எதுவும் சரி பார்க்கப்படவில்லை.

இப்படியே கிட்டத்தட்ட 4000 கோடி பணத்தை பங்குச்சந்தைக்கு திருப்பி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

1991ல் நாலாயிரம் கோடி ரூபாய் என்பது தற்போதைய லட்சம் கோடிகளுக்கு சமம். அதனால் 2G, 3G களுக்கு முன்னோடியே ஹர்ஷத் மேத்தா என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் இவரது மோசடிகள் பல வீரிய விளைவுகளை இந்திய பங்குச்சந்தையில் ஏற்படுத்தி விட்டது.

அடுத்த பாகத்தில் முடிவுறும்...
ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 6

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக