திங்கள், 4 மே, 2015

ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 2

அறியாமல் நாம் செய்யும் முதலீடுகள் தான் ஏமாற்றுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் முந்தைய வரலாற்று ஊழல்கள் நமக்கு படிப்பினைகள் என்ற நோக்கத்தோடு ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகளை தொடராக தொடர்கிறோம்.


முந்தைய பாகத்தை இந்த இணைப்பில் படித்த பிறகு இங்கு தொடரவும்.
ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 1

இதனைத் தான் ஹர்ஷத் மேத்தா அழகாக பயன்படுத்திக் கொண்டார்.ஹர்ஷத் மேத்தா ஒன்றும் நிதித்துறையில் பெரிய அளவில் நிபுணத்துவம் பெற்ற மேதாவி அல்ல. ஆரம்ப கட்ட B.com என்ற பட்டப்படிப்பை முடித்தவர் மட்டும் தான்.

படிப்பை முடித்த பின் நியூ இந்தியா என்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தான் ஏஜெண்ட் வேலைக்கு சேர்ந்தார்.

ஆனாலும் அந்த வேலையை விட பங்குச்சந்தையில் தான் ஒரு தணியாத ஆர்வம் இருந்து தான் வந்தது.

வேலை செய்யும் போது கிடைக்கும் உணவு இடைவெளியில் கூட பங்குச்சந்தைக்கு ஓடி வந்து பங்கு வியாபரத்தை பார்க்கும் அளவு மோகம் இருந்து வந்தது.

அப்பொழுது தற்போது இருப்பது போல் இணையம் மூலம் பங்கு வர்த்தகம் செய்யப்பட்டதில்லை.

பங்கு மையத்திலே நேரடியாகத் தான் நடக்கும். கிட்டத்தட்ட மாட்டு சந்தையை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாப் பங்குகளும் ஏல முறையில் கூவி கூவி தான் விற்கப்படும்.

அந்த சமயத்தில் வாங்கிய பங்குகள் நமக்கு கிடைக்க நாளாகும். விற்ற பணமும் எளிதில் கிடைக்காது என்று பல அசௌகரியங்கள் இருக்கத் தான் செய்தது.

இந்த சூழ்நிலையில் தான் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று கருதிய ஹர்ஷத் மேத்தா அம்பலால் என்ற பங்கு தரகரிடம் துணை புரோக்கராக சேர்ந்து கொண்டார்.

அங்கு தான் பங்குச்சந்தையில் பல நெளிவு சுளிவுகளை முழுமையாக கற்றுக் கொண்டார்.

அதன் பிறகு தானாகவே பெரிய அளவிலான பங்கு தரகராக மாறி விட்டார். பங்கு தரகர் மட்டும் அல்லாமல் வங்கிகளின் நிதி பரிவர்த்தனைகளுக்கு புரோக்கராக செயல்பட்டார்.

ஏட்டில் படித்து இருந்தால் கூட இவ்வளவு நிபுணத்துவம் பெற்றிருப்பாரா என்று தெரியாது. ஆனால் அனுபவப்பாடம் அவருக்கு நிறையவே கற்றுத் தந்தது.

இதற்கிடையே நரசிம்மராவின் பொருளாதார சீர்த்திருத்தம் வந்து சேர்ந்தது. அதனால் இந்திய பங்கு சந்தையும் கணிசமாக உயரும் என்பதை கணித்துக் கொண்டார்.

ஆக அவரது கணிப்புகள் சரியாகவே இருந்தன. கணிப்புகளை செயல்படுத்திய விதம் சரியாக இருந்து இருந்தால் இன்னொரு ராகேஷ் ஜூன் ஜூன்வாலாவாக கூட மாறி இருப்பார்.

பார்க்க: இவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கிடைக்கும் லாபத்தை தான் மட்டும் பெரிய அளவில் பங்கு போட வேண்டும் என்று நினைத்தார். அது தான் பல மோசடிகளுக்கும் காரணமாக அமைந்தது.

பெரிய அளவில் பங்கு போட வேண்டும் என்றால் அதிக அளவில் பணம் முதலீடுகளுக்காக வேண்டும். ஆனால் மேத்தாவோ அவ்வளவு பெரிய பணக்காரர் இல்லை. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

அந்த பணத்தை பெறுவதற்கு பல வழிகளைத் தேடினார். அதில் இந்திய வங்கித் துறையில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடிக்க முடியாத அளவு தந்திரமாக பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.

அவர் கண்டுபிடித்த ஓட்டைகள் தான் பிற்காலத்தில் இந்திய நிதித்துறை கட்டமைப்பு திருத்தப்பட்டு வலுவாக அமைவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது என்றும் சொல்லலாம்.

அடுத்த பாகத்தில் தொடரும்.
ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 3

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. இது போன்ற கதைகளை கேட்கும் போது அந்த துறையில் நமக்கு புலமை கிட்டும். கட்டுரை மிகச் சிறியதாக உள்ளதுதான் ஒரு குறை.

    பதிலளிநீக்கு