ஞாயிறு, 14 ஜூன், 2015

Cairn-Vedanta இணைப்பு மூலம் பகல் நேரக் கொள்ளையில் அணில் அகர்வால்

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களுள் ஒன்று பிரிட்டிஷ் நிறுவனமான Cairn India. ONGCயை தவிர்த்து மிக நல்ல முறையில் செயல்பட்டு வந்த நிறுவனங்களுள் Cairn நிறுவனமும் ஒன்று.





அதிக பேருக்கு வேலை வாய்ப்பு, நல்ல வளர்ச்சியில் எண்ணெய் உற்பத்தி, தேவையான அளவு உபரித் தொகை சேமிப்பு என்று வளர்ச்சி பாதையில் தான் சென்று கொண்டிருந்தது.

இந்த நிறுவனத்தை அதன் தாய் நிறுவனமான Cairn Energy என்ற நிறுவனத்திடமிருந்து வேதாந்தா குழுமம் மூன்று வருடங்களுக்கு முன் வாங்கியது.

வாங்கும் போது ஒரு பங்கிற்கு 350 ரூபாய் அளவு கொடுத்து வாங்கினர்.

வாங்கியவர்கள் Cairn நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதை விட அவர்களிடம் இருக்கும் உபரி பணத்தை எப்படி ஆட்டையை போடலாம் என்று தான் நினைத்தனர்.

கடந்த ஆண்டு, 6000 கோடி ரூபாய் Cairn நிறுவனத்தின் பணத்தை வேதாந்தா குழுமத்திற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கினர். இது அப்பொழுதே மைனாரிட்டி முதலீட்டாளர்களின் எதிர்ப்பிற்கு இடையே தான் வழங்கப்பட்டது.

அந்த சமயத்தில் Cairn நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க:  நேர்மையில்லாத CAIRN பங்கை என்ன செய்யலாம்?

இது போக, கடந்த ஆண்டில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை பாதிக்கும் கீழ் வீழ்ச்சி அடைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு தேவை இல்லாமல் போனது.

இதனால் Cairn நிறுவனத்தின் வியாபாரமும் படுத்தது. அதில் பங்கு விலை 200 ரூபாய் தொட்டது.



இது எல்லா எண்ணெய் நிறுவனங்களுக்கும் பொதுவானது தான். மீண்டும் கச்சா எண்ணெய் விலை கூடும் போது அதே வேகத்தில் பங்கு மேலே வரும்.

ஆனால் வேதாந்தா குழும தலைவர் அணில் அகர்வால் இது தான் சமயம் என்று கருதி Cairn நிறுவனத்தை வேதாந்தா குழுமத்துடன் இணைக்க முனைந்துள்ளார்கள்.

பொதுவாக இணைப்பு என்று வரும் போது இணைக்கப்படும் இரண்டு நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கும் பாதிப்பு வராத வகையில் Win-Win முறை தான் பின்பற்றப்படும்.

ஆனால் இந்த இணைப்பில் Cairn நிறுவனம் மட்டும் பாதிக்கப்படுவது அப்பட்டமாக வெளியே தெரிகிறது.

முதலில் ஒரு எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும், சுரங்க நிறுவனத்தையும் ஒரே அமைப்பின் கீழ் இணைப்பது என்பதே தவறான செயல். இரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத துறைகள்.

வேதாந்தா குழுமத்திடம் 75,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. அதே சமயத்தில் Cairn நிறுவனத்தில் 16,000 கோடி ரூபாய் உபரி பணம் உள்ளது.

இந்த 16,000 கோடி ரூபாயை வேதாந்தா குழுமத்தின் கடனை அடைக்க பயன்படுத்தப் போகிறார்கள்.

கொஞ்சம் கோபமாக சொன்னால் இந்த 16,000 கோடி வேதாந்தா குழுமத்தின் தலைவரான அணில் அகர்வாலின் அப்பன் வீட்டு சொத்தா? 40% மைனாரிட்டி பங்குதாரர்களின் பணமும் கூட.

15 வயதில் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு வந்த ஒரு சாதாரண உலோக வியாபாரி அணில் அகர்வால் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபரானது இப்படி ஊர் பணத்தை கொள்ளையடித்தா? என்று கூட கேட்க தோன்றுகிறது.

Cairn நிறுவனத்திடம் சேமிப்பாக இருக்கும் பணத்தை அதன் பங்குதாரர்களுக்கு முதலில் டிவிடென்ட்டாக கொடுத்த பிறகு அந்த நிறுவனத்தை இணைக்கலாமே?

தற்போது ஒரு Cairn குழும பங்கிற்கு ஒரு வேதாந்தா பங்கும், கூடுதலாக ஒரு பங்கிற்கு 17.5 ரூபாய் டிவிடென்ட்டும் கொடுப்பார்களாம்.  அதாவது மதிப்பீடல் படி ஒரு Cairn நிறுவன பங்கிற்கு 197 ரூபாய் கொடுக்க போகிறார்கள்.

இது Cairn நிறுவனத்தின் உண்மையான மதிப்பீடலில் பாதி தான் வருகிறது. அதனால் பகல் நேரக் கொள்ளை என்றும் சொல்லலாம்.



இருந்தாலும், இந்த இணைப்பின் போது மைனாரிட்டி பங்குதாரர்களின் மெஜாரிட்டி ஓட்டுகளை பெற வேண்டும் என்பது ஒரு விதி முறை.

இதில் LIC 9% பங்குகளையும், Cairn Energy 9% பங்குகளையும், மீதி சிறு முதலீட்டாளர்களிடம் உள்ளது. இவர்களில் பாதி பேர் ஆதரித்து ஒட்டு போட்டால் தான் இந்த இணைப்பு செல்லுபடியாகும்.

இதில் Cairn Energy எதிர்த்து ஓட்டு போட வாய்ப்பு உள்ளது. LICயின்  நிலை தெரியவில்லை.

சிறு முதலீட்டாளர்களாகிய உங்களிடமும் இந்த பங்குகள் இருந்தால் எதிர்ப்பை கண்டிப்பாக பதிவு செய்யுங்கள். தற்போது வீட்டோ பவர் உங்களிடமும் உள்ளது.

இதற்கடுத்து பெட்ரோலிய அமைச்சகம், வருமான வரி வழக்குகள் இருப்பதால் வருமான வரித்துறை போன்றவற்றின் ஒப்புதலும் தேவை.

இதனால் இணைப்பு தோல்வி அடையவும் சரிசம வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் அடுத்து வேதாந்தா குழுமம் Hindustan Zinc நிறுவனத்தையும் இணைக்க முயற்சி செய்கிறது. அந்த நிறுவனத்திடமும் ஜாக்கிரதையாக இருங்கள்! நாகரீக ஏமாற்றுக்காரர்கள் எப்படி சுரண்டலாம் என்று ஓடி வருகிறார்கள்...

ஆக, ஒரு நல்ல நிறுவனம் தவறான நிர்வாகத்தின் கீழ் செல்லவிருக்கிறது.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. அருமையான பதிவு. நான் பங்கு சந்தையில் வாங்கிய முதல் பங்கு sesa sterlite (vedanda), அதை தற்போது வைத்திருந்தால் எனக்கு இது நல்ல நீயூஸ். ஆனால்குறுக்கு வழியில் செல்வது தவறு. சுரங்கங்களுக்கான order supreme court ஆல் cancel ஆனபோதே அதை விற்றுவிட்டேன். இருப்பினும் முதல் காதல், முதல் காதலி என்கிற ரீதியில் முதல் பங்கு பற்றிய செய்திகள் வரும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது.

    பதிலளிநீக்கு