புதன், 29 ஜூலை, 2015

நெஞ்சைத் தொடும் கலாமின் இளமைப் பருவம்

Tamil.oneindia.என்ற இணையதளத்தின் ஆசிரியர் திரு.ஏ.கே.கான் அவர்களின் கட்டுரைகளுக்கு நாம் பரம ரசிகர்.


தற்போது அவர் எழுதிய அப்துல் கலாம் தொடர்பான கட்டுரையை இங்கு பகிர்கிறோம். அவரது எழுத்துக்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக காப்பி செய்யாமல் இணைப்பை மட்டும் பகிர்கிறோம்.

கீழே இணைப்பு உள்ளது.
அப்துல் கலாமின் காலில் விழுந்த கண்ணீர் துளிகள்!!அக்னி சிறகுகள் என்ற கலாமின் சுயசரிதை புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டி கட்டுரை எழுதியுள்ளார்.

அவரது தாய் எவ்வளவு கஷ்டப்பட்ட சூழ்நிலையில் வளர்த்து வந்தார் என்பதையும், அந்த சூழ்நிலையில் கலாம் பட்ட கஷ்டங்களையும் கட்டுரை கூறுகிறது.

சுயசரிதையின் ஒரு சிறு பகுதி..
"காலை 4 மணிக்கு எழுந்து படிக்க, பேப்பர் பண்டல் தூக்க, அதை வினியோகிக்க, பள்ளிவாசல் செல்ல, பள்ளிக்கூடம் செல்ல, மாலையில் பேப்பருக்கான பணம் வசூலிக்க என ஓடிக் கொண்டே இருப்பேன். ஆனாலும், இரவு 11 மணி வரை படிப்பேன். நான் சாதிப்பேன் என என் தாயார் நம்பியிருக்க வேண்டும்."

யப்பா..ஒரு நாள், இரு நாள் அல்ல இந்த வாழ்க்கை..இளமைப் பருவம் முழுவதுமே...

சிறு வயதில் எமது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு கோவிலில் கார்த்திகை மாதத்தில் முப்பது நாளும் வில்லுப்பாட்டு நடக்கும். பாட்டு பாடுபவர் ராமாயணத்தில் ராமரின் வளர்ப்பை சொல்லும் போது இந்த கருத்தை முன் வைப்பார்.

வானில் இருந்து வரும் நீர் வாழை இலையில் படும் போது இலையின் நிறத்தில் இருக்கிறது. அதிலுருந்து மண்ணில் கீழ் விழும் போது மண்ணின் நிறத்திற்கு மாறி விடும். அது போல் தான் எதுவும் தெரியாமல் பிறக்கும் குழந்தை வளர்ப்பில் தான் உருமாறுகிறது என்று அவரது கருத்து  நீண்டு செல்லும்.

தினமும் சுண்டலுக்காக செல்லும் நமக்கு சிறு வயதில் புரியவில்லை. இப்பொழுது கலாம் மூலம் அந்த தாயின் வளர்ப்பை பொருத்தி பார்க்க தோன்றுகிறது.

கலாமின் கவிதையின் ஒரு பகுதியே இதற்கு சாட்சி..
"உங்கள் அன்பும், உங்கள் பாதுகாப்பும், உங்கள் நம்பிக்கையும் எனக்கு பலம் தந்தன இந்த உலகத்தை அச்சமின்றி எதிர்கொள்ள வைத்த தாயே, இறுதித் தீர்ப்பு நாளில் நாம் மீண்டும் சந்திப்போம், என் அம்மா!"

நமக்கு இப்படியொரு வாழ்வியல் முன்னுதாரணத்தை பிள்ளை வடிவில் கொடுத்த அந்த தாய்க்கு வணக்கங்கள்!
தற்போது நாம் படுவதெல்லாம் கஷ்டமே அல்ல என்று சொல்லும் வகையில் அவரது சுயசரிதை அமைகிறது.

இந்த சமயத்தில் எமது தாயார் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையை பற்றி எடுத்துரைத்ததும் நினைவுக்கு வருகிறது.

எமது தாயின் வீட்டில் எட்டு பிள்ளைகள். அதில் ஆறு பேர் பெண்கள். ஆனால் அவர்களது தந்தை இளம் வயதிலே காலமாகி விட்டார்.

அதனால் சுமை முழுவதும் மூத்த அண்ணன் தலையில் விழுந்தது. அவரது மில் வேலையில் கிடைக்கும் வருமானம் அணைவருக்கும் போதாது.

அதனால் மீதமிருக்கும் நேரத்தில் பக்கத்தில் இருக்கும் வனப்பகுதியில் சுள்ளிகளை எடுத்து வந்து அந்த வருமானத்தையும் குடும்ப செலவிற்கு பகிர்ந்து வந்தார்.

இந்த நேரத்தில் வனக்காவலர்கள் மரம் திருடுகிறார்கள் என்று ஸ்டேஷனுக்கு வேறு அழைத்து சென்று விடுவார்கள். காசு கொடுத்து தான் கூட்டி வர வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் திருமணம் செய்து வைத்த ஆறு பெண்களும் ஓரளவு நல்ல நிலையிலே உள்ளனர்.

ஒரு தங்கைக்கு திருமணம் செய்ததையே சாதனை என்று நினைத்துக் கொண்ட எமக்கு இந்த உரையாடல் ஒரு பெரும் பாடமாக அமைந்தது.

இங்கு மட்டுமல்ல..நமக்கு முந்தைய தலைமுறையில் பலரது வீடுகளில் இருக்கும் சூழ்நிலையாகவே பார்க்கலாம்.

என்பதுகளில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களை பார்த்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தை பற்றியும், கம்யூனிசம் பற்றியும் தான் அதிகமாக இருக்கும். ஊமை விழிகள், வறுமையின் நிறம் சிகப்பு என்று பட்டியல் நீண்டு போகலாம்.

ஆனால் தற்போது அதே முறையில் படம் எடுத்தால் கிண்டலாகத் தான் மாறும். சமூகத்தின் சூழ்நிலையைத் தான் திரைப்படங்களும் பிரதிபலிக்கின்றன.

அந்த வகையில் தற்போதைய தலைமுறையில் நாம் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லலாம். இவ்வளவு கஷ்டத்தை நமக்கு முன்னோர்கள் விட்டு செல்லவில்லை.

அவர்களது புண்ணியத்தில் நாம் வாழ்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சியில் பழைய வரலாறு என்பது ஒரு தீண்டப்படாத பகுதியாக உள்ளது.. இதனை படிப்பினைகளாக அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்வது மிகவும் அவசியமான தேவையாக உள்ளது.

பொருளுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நாம் வளர்ப்பிற்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம் என்பதில் தான் இந்த சந்தேகம் வருகிறது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக