வெள்ளி, 31 ஜூலை, 2015

இறுதிக் கட்ட அமலாக்கத்தை நெருங்கும் GST வரி

ஏற்கனவே GST வரி விதிப்பின் பலன்கள் பற்றி விரிவாக எழுதி இருந்தோம்.

பார்க்க:  GST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?


ஆனால் எப்பொழுது GST வரி வரும் என்பதில் ஒரு கேள்விக்குறி இருந்து வந்தது. மக்களவையில் பிஜேபியால் நிறைவேற்ற முடிந்தாலும் மாநிலங்களைவையில் பெரும்பான்மை இல்லாததால் கடினமாகவே இருந்து வந்தது.
இந்த திட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் அரசியல் காரணங்களால் எதிர்த்து வந்ததால் இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை இல்லை என்று முடிவுக்கு பிஜேபி வந்து விட்டது.

அதனால் மாநில கட்சிகள் பக்கம் தலையை திருப்பினார்கள்.

உற்பத்தி துறை மாநிலமான தமிழ்நாடு GST வரி விதிப்பால் அதிக நஷ்டங்கள் சந்திக்கும் என்பதால் அதிமுக எதிர்ப்பு காட்டியது.

அதே நேரத்தில் திரிமுனல், பிஜி ஜனதா தளம் போன்றவை சில நிபந்தனைகளை விதித்தன.

GST வரி போக ஒரு சதவீத வரியை மாநிலங்கள் அதிகமாக விதிக்கலாம் என்றும், ஐந்து வருடங்களுக்கு GST வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை மத்திய அரசு ஈடு கட்ட வேண்டும் என்பது தான் நிபந்தனைகள்.

தற்போது மத்திய அரசும் வேறு வழியில்லாமல் ஏற்று விட்டது.

இடது சாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன.

தற்போது இந்தியாவின் வரி விதிப்பை பார்த்தால் மாநில வரி, மத்திய வரி, சேவை வரி, சுங்க வரி என்று பல முனைகளில் வரி விதிக்கப்படுகிறது. இதனால் விற்பனையில் கிட்டத்தட்ட 30% தொகை வரிக்காக செலவழிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் ஒரு பொருள் பஞ்சாபில் கொண்டு சென்று விற்கப்பட்டால் ஆலையை விட்டு வெளியே வரும் போது ஒரு வரி, போகும் இடங்களில் மாநில எல்லை சுங்க வரி, பஞ்சாபில் விற்கும் போது ஒரு வரி என்று பல வரிகள் வருகிறது.

இதனால் அதிக அளவு வரியும் செலுத்த வேண்டும். அதே வேளையில் இந்த வரிகளுக்காக பல ஆணவங்களையும் பராமரிக்க வேண்டும்.

இது தொழில் துறைக்கு ஒரு தேவையில்லாத செலவாகவே பார்க்கப்படுகிறது.

தற்போது GST வரி விதிப்பின் படி, எந்தவொரு பொருளுக்கும் விற்கும் இடங்களில் மட்டும் வரி செலுத்தினால் போதும்.

இதனால் இந்தியா முழுமைக்கும் 20% என்ற ஒரே வரி விதிப்பு வரும். ஒரு சதவீதம் மட்டும் மாநிலங்கள் தங்களுக்கு தக்கவாறு விதித்துக் கொள்ளலாம்.

ஆனால் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு வரி வசூல் குறையும், செலவிடும் மாநிலங்கள் அதிக அளவு பயன் பெறும்.

தமிழ்நாடு உற்பத்தி துறையில் இருப்பதால் நஷ்டம் மற்ற மாநிலங்களை விட கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், 20% என்பதே அதிகம் தான். பல நாடுகளில் 15% அளவே வரி விதிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் அந்த அளவு முழுமையான வரி விதிப்பு வேண்டும் என்று தொழில் துறை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

ஆனால் அவ்வளவு எதிர்பார்த்தால் இந்தியாவில் என்றும் நடைமுறைக்கு வராது. இங்கு நடைமுறை சிக்கல்கள் அதிகம் உள்ளன.

அதனால் சில குறைகளுடன் ஆரம்பித்து அதன் பின் காலப்போக்கில் முழுமைப்படுத்துவது தான் சாத்தியமான ஒன்றாக இருக்கும்.

GSTயால் லாஜிஸ்டிக்ஸ், ரிடைல் நிறுவனங்கள், ஆட்டோ நிறுவனங்கள், காலணிகள் என்று வர்த்தகம் சார்ந்த பல துறை நிறுவனங்கள் பலன் பெற வாய்ப்பு உண்டு.

லோக்சபா, ராஜ்யசபா தவிர பாதி மாநிலங்களின் ஆதரவையும் பெற வேண்டும் என்பது ஒரு முக்கியமான விதி முறை. அதற்கு பிரச்சினை இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பார்ப்போம்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக