Thursday, July 23, 2015

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது எவ்வளவு கடினமாகிறது?

தற்போது இந்தியா Start-up என்று சொல்லப்படும் சுயதொழில் முனைவோர் காலத்திற்குள் நுழைந்துள்ளது.


கடந்த இரண்டு வருடங்களில் மிக அதிக அளவில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.சிலர் பெரிய நிறுவனங்களில் கிடைத்த அனுபவங்களைப் பெற்ற பிறகு அதனைத் தங்கள் சுயதொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

பல பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இந்த செய்திகள் மிக நல்ல மாற்றம் என்று சொல்லலாம்.

இந்த சூழ்நிலையில் சில யதார்த்தங்களையும் மற்றொரு பக்கமாக பார்க்கலாம்.


தற்போது பல தொழில்களில் மிக ஆரம்பக் கட்டங்களில் பெரிய அளவு முதலீடு தேவைப்படுவதில்லை. அதனை விட ஐடியாக்களும், செயல்படுத்தும் விதமே முக்கியம் பெறுகிறது. அதனால் நிதி என்பது அதன் பின் தான் வருகிறது.

ஆனால் ஒரு சிறிய காலக்கட்ட வளர்ச்சிக்கு பிறகு  போட்டியாளர்கள், சரியான நேரம் என்று பல காரணங்களால் நமது நிறுவனத்தை மிக அதிக அளவில் விரிவாக்க வேண்டிய அவசியம் வருகிறது.

அப்பொழுது தான் நிதியின் தேவை கணிசமாக அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகிறது.

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

பத்து லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு சிறிய நிறுவனத்தை ஆரம்பிக்கிறோம். நிறுவனமும் நன்றாக சென்று ஒரு வருடத்தில் இரண்டு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.

பொதுவாக சுயதொழில் முனைவர்கள் முதல் சில வருடங்களுக்கு அதில் கிடைக்கும் லாபத்தை தனிப்பட்ட தேவைக்கு  பயன்படுத்துவது கஷ்டம்.

அதனால் இந்த இரண்டு லட்ச ரூபாயை மீண்டும் அதே நிறுவனத்தில் முதலீடு செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால் அடுத்தக்கட்ட விரிவாக்கத்திற்கு செல்ல இந்த இரண்டு லட்ச ரூபாய் என்பது போதுமானதல்ல.

ஏனென்றால் தற்போதைய வேகமான உலகத்தில் நாம் மெதுவாக சென்றால் நமது போட்டியாளர்கள் நம்மை முந்தி விடுவர்.

அந்த சமயத்தில் தான் ஒரு பெரிய அளவிலான விரிவாக்கத்திற்கு நிதியை நாடி வெளியே செல்லும் தேவை ஏற்படுகிறது.

அதற்கு தான் Venture Capital என்ற பெயரில் முதலீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.

நூறில் ஒரு நிறுவனத்திற்கு தான் அவர்கள் நிதி கிடைக்க வாய்ப்பு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதனால் அவர்களிடம் பல முறை முறையிட்டால் தான் ஒரு முறையாவது நமது நிறுவனத்தை பற்றி கேட்க முற்படுவர். கிட்டத்தட்ட இயக்குனர்கள் கதையை பற்றி பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி வாய்ப்புகளைப் பெறுவது போல் தான்.

ஒரு கட்டத்தில் அவர்களும் ஒத்துக் கொண்டு நிதி தந்து விட்டால் அங்கிருந்து தான் நமது சுதந்திரம் பறிக்கப்படும் வாய்ப்புகள் தொடங்குகின்றன.

பத்து லட்ச ரூபாய் மதிப்புடைய நிறுவனத்தில் மேலும் நாற்பது லட்ச ரூபாய் அவர்கள் முதலீடு செய்தால் 80% பங்குகள் அவர்கள் கைக்கு சென்று விடும். மீதி 20% தான் நமது கையில் இருக்கும்.

அந்த சூழ்நிலையில் மைனாரிட்டி பங்குதாரராக நாம் மாறுவதால் நம்மால் சுயமாக முடிவுகள் எடுக்க முடியாது. முதலீட்டாளர்கள் தலையீடு மிக அதிகமாக இருக்கும்.

புதிய நிறுவனங்களில் லாபம் என்பதே சில வருடங்களுக்கு பிறகு தான் முழுமையாக வரும். ஆனால் முதலீட்டாளர்களை பொறுத்தவரை பலர் குறுகிய காலத்தில் முதலீடு செய்து  அதிக லாபம் பெற நினைப்பர்.

அதனால் முதலீட்டாளர்களுக்காக நமது நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். அது நிறுவனத்தின் வளர்ச்சியை நீண்ட கால நோக்கில்  பாதிக்கும்.

இது தான் பல வளர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இருக்கும் யாதர்த்த சூழ்நிலை.

அதனால் தான் முதலீட்டாளர்களையும், நமது எண்ணங்களையும் ஒரு வித சமநிலையோடு கொண்டு செல்வது மிக அவசியமாகிறது.Housing.com நிறுவனர் ராகுல் யாதவ் ஒரு கட்டத்தில் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டதற்கும் அவரது சிறு பிள்ளைத்தனங்கள் காரணங்கள் என்று சொன்னாலும் முதலீட்டாளர்கள் தலையீடும் முக்கிய காரணமாக அமைந்தது.

பார்க்க: வாய்ப்புகளை வீணாக்கி பதவி இழந்த ராகுல் யாதவ்

அவர் வெளியேற்றப்படும் போது அவரிடம் 3% பங்குகள் தான் இருந்தது குறிப்பிட்டத்தக்கது.

அதனால் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும் வரை 30 முதல் 40% அளவு பங்குகளை கையில் வைத்துக் கொண்டு நிறுவனத்தை நமது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதும் ஒரு வகையில் அவசியமாகிறது.

இது வரை பல முறை சுயதொழில் தொடர்பாக நேர்மறை கட்டுரைகளையே எழுதி வந்துள்ளோம்.

ஆனால் இந்த பதிவு எதிர்மறை எண்ணத்தை தோற்றுவிக்க வாய்ப்பு உள்ளது. அப்படிக் கருதாமல் யாதார்த்தத்தில் நல்ல திட்டமிடுவதற்கான கட்டுரையாகக் கருதிக் கொண்டால் மிக்க மகிழ்ச்சி!

தொடர்பான கட்டுரைகள்:


« முந்தைய கட்டுரைAdvt.

Email: muthaleedu@gmail.com


No comments:

Post a Comment