திங்கள், 20 ஜூலை, 2015

சாம்சங் நிறுவனத்தை கைக்குள் கொண்டு வர கஷ்டப்படும் நிறுவனர்

சாம்சங் நிறுவனத்தை பற்றி அறிந்து இருப்போம்.அதனை நாம் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமாகவே அறிந்து இருப்போம்.


ஆனால் எலெக்ட்ரானிக்ஸ் தவிர பல துறைகளிலும் சாம்சாங் முன்னணியில் உள்ளது. அதாவது 70% வருமானம் எலெக்ட்ரானிக்ஸ் துறை மூலம், மீதி மற்ற துறைகள் மூலமும் வருகிறது.



மற்ற துறைகள் என்று பார்த்தால் கப்பல் கட்டுதல், கட்டமைப்பு நிறுவனம், தீம் பார்க், டெக்ஸ்டைல், சூப்பர் மார்க்கெட், என்று ஒரு பட்டியலே நீண்டு செல்லும்.

அதாவது கொரியா நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு சாம்சங் மூலம் கிடைக்கிறது.

அதனால் சாம்சங்கின் வீழ்ச்சி என்பது கொரியா நாட்டின் பொருளாதரத்தில் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

இவ்வளவு பெரிய குழுமத்தில் நிறுவனர் லீ என்பவர் தான் அதிகாரமிக்க நபர். ஆனால் அவர் உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் கடந்த இரு ஆண்டுகளாக உள்ளார்.

அவர் கோமா நிலையில் தான் உள்ளார் என்பது பரவலான செய்தி என்பதால் நிர்வாகத்தில் தலையிட முடியாத சூழ்நிலை.

அடுத்த வாரிசு தனது மகன் என்பதை ஏற்கனவே அடையாளப்படுத்தி விட்டார்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால், மகனிடம் அதிகாரம் செல்ல வேண்டும் என்றால் அவரிடம் பங்குகள் அதிகமாக இருக்க வேண்டும்.

ஆனால் மொத்தமாக கணக்கு பண்ணி பார்த்தால் அவரிடம் ஒரு ஐந்து சதவீத பங்குகள் கூட தேறாது.

இது வரை அவர்கள் சாம்சங் நிறுவனத்தை செயின் இன்வெஸ்டிங் என்ற முறை மூலம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தனர்.

அதாவது சாம்சங்கின் ஒரு துணை நிறுவனம் மற்றொரு துணை நிறுவனத்தில் முதலீடு செய்யும். அந்த துணை நிறுவனம் மற்றொரு துணை நிறுவனத்தில் முதலீடு செய்யும். இப்படியே செல்லும்..

இவர்கள் ஏதேனும் ஒரு முக்கிய துணை நிறுவனத்தில் மட்டும் அதிக முதலீடு செய்து மற்ற நிறுவனங்களை மறைமுகமாக கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பார்கள்.

பார்க்க:
CROSS HOLDING: முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட நரித்தந்திரம்

இந்த முறையைத் தான் இவ்வளவு நாள் பின்பற்றி வந்தார்கள். இதனை CROSS HOLDING என்றும் சொல்வார்கள்.



ஆனால் தற்போது கொரிய அரசு இந்த சங்கிலி முதலீட்டு முறையை கணிசமாக குறைக்க வேண்டும் என்று விதி முறைகளை கொண்டு வர ஆரம்பித்து உள்ளது.

இதனால் நிறுவனர் குடும்பத்திற்கு பல சாம்சங் துணை நிறுவனங்கள் கையை விட்டு போக வேண்டிய சூழ்நிலை வந்தது.

ஏதாவது செய்து சாம்சங்கை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முனைகிறார்கள்.

இந்த சமயத்தில் நிறுவனர் லீ வேறு மருத்துவமனையில் போய் இருந்து விட்டார். மீடியாக்களில் அவர் சீக்கிரம் போய் விடுவார் என்று செய்திகள் வருகின்றன. ஆனால் அலுவலகத்திற்குள் அதையும் தாண்டி வதந்திகள் உலா வருகின்றன.

அந்த சூழ்நிலையில் அவரிடம் இருக்கும் பங்குகள் மகனுக்கு வர வேண்டும். ஆனால் நமது ஊரைப் போல் அப்படியே கொடுத்து விட முடியாது.

அதற்கும் Inheritence Tax என்ற வரி உண்டு. பொதுவாக வளர்ந்த நாடுகளில் இருக்கும் வரி தான்.

கொரியாவில் இந்த வரி 40% அளவு. அதாவது லீ தம்மிடம் இருக்கும் பங்குகளை மகனுக்கு கொடுக்க வேண்டும் என்றால், மகன் அதில் 40% மதிப்புடைய தொகையை அரசுக்கு வரி கட்ட வேண்டும்.

பார்க்க:  வாரிசு வரியும், மறைமுக சமத்துவமும்..

அப்படி என்றால் தந்தையிடம் இருக்கும் பங்குகளில் பாதி தான் இவருக்கு வந்து சேரும்.

ஏற்கனவே சங்கிலி முதலீட்டு முறையில் சிக்கி கொண்டு படும் வேதனையில் இந்த வாரிசு வரியும் சேர்ந்து அவரை திக்கு முக்காட செய்து உள்ளது.

இந்த நிலையில் தான் நமது வேதாந்தா Cairn நிறுவனத்தை இணைக்க முற்படும் முறையை தேர்ந்து எடுத்தார்.

தனது பங்குகள் எந்தெந்த துணை நிறுவனத்திடம் அதிகமாக உள்ளதோ அந்த நிறுவனங்களுக்கு அதிக பங்கு மதிப்பை கொடுத்து மற்றொரு துணை நிறுவனத்திடம் இணைக்க முற்பட்டுள்ளார்.

அதில் முதல் கட்டமாக Samsung C&T என்பது கட்டுமானத் துறையில் இருக்கும் நிறுவனம். Cheil Industries என்பது டெக்ஸ்டைல் துறையை சார்ந்த நிறுவனம்.

இதில்  Cheil Industries நிறுவனத்திற்கு லீ குடும்பத்திற்கு அதிக பங்குகள் உண்டு. அதனால் Cheilன் பங்குகளுக்கு அதிக மதிப்பு கொடுத்து Samsung C&T நிறுவனத்திடம் இணைக்க முற்பட, Samsung C&T நிறுவனத்தின் பங்குகள் மறைமுகமாக குறைந்து போனது.

இதனால் Samsung C&T நிறுவனத்தில் 10 சதவீத அளவு பங்குகள் கொண்டிருந்த Elliott Fund என்ற வெளிநாட்டு பண்ட் முதலீட்டாளர் இந்த இணைப்பை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றார்.

பொதுவாக கொரியாவில் நீதிமன்றம், அரசு போன்றவற்றில் உள்நாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு அதிக ஆதரவு உண்டு. அதனால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

அடுத்தக் கட்டமாக இந்த இணைப்பிறகு மூன்றில் இரு பங்கு முதலீட்டாளர் ஒட்டு தேவை.

இதற்காக சாம்சங் நிறுவனம் முதலீட்டாளர் வீடு வீடாக சென்று பிட் நோட்டிஸ் கொடுக்கும் அளவு இறங்கி வந்தார்கள். அதே நேரத்தில் Elliott இணையத்தில் எதிர்த்து விளம்பரம் செய்தார்கள்.

இப்படி பங்குச்சந்தை பிரச்சினை குடுமிப்பிடி பிரச்சினையாக மாறிப் போனது.

இங்கும் கொரிய அரசின் பென்சன் நிறுவனம் Samsung C&Tயின் 10% பங்குகளை வைத்து இருந்தது. அதனால் அவர்கள் யாருக்கு ஒட்டு போடுகிறார்களோ அவர்களே வெற்றிப் பெறும் நிலை.

ஆனால் வெளிநாட்டவர் உள்ளே நுழைந்து விடகூடாது என்று  கொரிய அரசு இணைப்பிற்கு ஆதரவாக ஓட்டுப் போட வைத்தது.

அதனால் நியாயம் Elliott பக்கம் இருந்தாலும் அதிகாரம் சாம்சங் பக்கம் இருந்ததால் தப்பி விட்டனர்.



இன்னும் லீ குடும்பத்திற்கு பிரச்சினை தீர்ந்த பாடில்லை. அடுத்து சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

தனிப்பட்ட முறையில் அவரிடம் ஒரு சதவீத பங்குகள் கூட இல்லை. மற்ற துணை நிறுவனங்களை வைத்து தான் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைக் கைக்குள் கொண்டு வர வேண்டும்.

அதற்கு அவரிடம் பங்குகள் அதிகமாக உள்ள Samsung SDS மென்பொருள் நிறுவனத்தை சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் இணைக்க திட்டம் உள்ளதாக தெரிகிறது. அதிலும் களேபரம் இல்லாமல் இருக்காது.

மொத்தத்தில் குடும்ப நிறுவனங்களிடம் முதலீடு செய்யும் போது இந்த மாதிரி பிரச்சினைகள் அடிக்கடி வருவதுண்டு.

அதனால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்பதை சாம்சங் மற்றும் வேதாந்தா கற்பித்து விட்டனர்.

தொடர்பான கட்டுரைகள்:
Cairn-Vedanta இணைப்பு மூலம் பகல் நேரக் கொள்ளையில் அணில் அகர்வால்

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக